(தந்தை பெரியார் சிந்தனைகள் 37 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 38

8. இலக்கியம்

‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர்.

 
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்
வார்த்தைபதி னாயிரத் தொருவர் (குறிப்பு 1 ) 

என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ அதுதான் இலக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் இலக்கியத்தைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவர்கள் இலக்கியம் பகுத்தறிவுக் கொத்ததாக இருத்தல் வேண்டும் என்று விழைகின்றார். இன்று நிலைபெற்றுள்ள இலக்கியங்கள் அனைத்தையும் கடிகின்றார். இலக்கியம்பற்றி அவருடைய சிந்தனைகளைக் காண்போம்.

(1) மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவாக இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறக்கமுடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடையமுடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவராவார்கள்.

(2) தமிழர்களுக்கு மொழி சம்பந்தமான இலக்கியம் தொல்காப்பியத்தைத் தவிர, வேறு ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. வேறு ஒன்றும் ஆதியில் இருந்ததாகக் காணப்படவில்லை. தமிழர்களுக்கு இன்று காணப்படும் இலக்கியங்களும் ஆரியச் சார்பு உடையனவாக உள்ளனவே தவிர சுத்தத்தமிழாகக் காணக்கிடைப்பதில்லை. (3) இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்டவேண்டும். மக்களிடம் உயர்குணங்களைப் புகுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் ஆண்களுக்குப் பெண்களை அடிமை படுத்தவேண்டும் என்பதற்கே இலக்கியங்கள் இயற்றப்பெற்றுள்ளன. இதனால்தான் பெண்கள் சமுதாயம் தலையெடுக்கவே முடியாது போய்விட்டது.

(4) இனிமேல்தான் நமக்காக இலக்கியம் தோன்றவேண்டும். அதில் இந்துமதம், ஆத்திகம், ஆரியம் ஆகிய மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதாம் இருக்க வேண்டும். அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம், ஆராய்ச்சி என்றால் அவை நம்நாட்டில் நாத்திகம், மதவெறுப்பு என்றாக்கப் பட்டு விட்டது. அதனாலேயே நம் நாட்டில் பயன்படும் இலக்கியம் இல்லை என்பதோடு தோன்றவும் இல்லை. (குறிப்பு 2)    

(5) இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்! எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லாம்? அது எதற்காக இருக்கவேண்டும்? என்பவைபற்றிச் சிந்தித்தால் உலகில் எல்லாம் எல்லாத்துறைகளும் மனிதனின் உயர்வாழ்க்கைக்கு மட்டிலும் அல்ல; மனிதர் சமுதாய வளர்ச்சிக்குக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.

(6) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணாக்கர்கட்குத் தமிழ் இலக்கியத்திற்கு நூல்கள் எவை? கம்பராமாயணம், வில்லி பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திவ்வியபிரபந்தம் போன்ற மதத் தத்துவங்களையும், ஆரியமதத்தத்துவம் என்னும் ஒருதனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் காணப்பெறுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராணஞானந்தானே அதிகமாக இருக்கின்றது?

(7) கம்பராமாயணம் அரிய இலக்கியம் என்று சொல்லுகிறார்களே. இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுநாள் பட்டினி கிடந்தாலும் மலத்திலிருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோலத்தானே கம்பராமாயண இலக்கியம் உள்ளது? அதில் தமிழ்மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படிக் கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா என நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். (குறிப்பு 3)    

(8) கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் வெறும்பொய்க் களஞ்சியம் அது. அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்.(குறிப்பு 4)     அஃதாவது இஃது ஒரு காமத்துப்பால் என்றுதான் சொல்லலாம். நடப்பை எடுத்துக்கொண்டால் காட்டுமிராண்டித்தனத்தின் உருவம். இவற்றில் இன்றைய அநுபவத்திற்கு அறிவு உலகப் போக்கிற்கு, வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவை என்பதாக என்ன காணமுடிகிறது?

(9) நமது நாட்டுக்குத் தெளிவான உண்மையான வரலாறே இல்லை; வரலாறு எழுதப்புகுந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். நமது வரலாறு மட்டும் உண்மையாகக் கிடைத்து இருக்குமேயானால் இவ்வளவு மோசம் ஏற்பட்டு இருக்காது. வரலாற்றினைக் கூறினால் படித்தால் உணர்ச்சி உண்டுபண்ணும்படியான நிலையில் நமக்குவரலாறே இல்லை.

(10) தமிழனுக்கு இலக்கியம் என்று சொல்லுவதற்குத் தனித்தமிழ் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழில் ஆரியம் கலந்த இலக்கியமே இருக்கின்றன. (குறிப்பு 5)    

இலக்கியங்கள்: இவ்வளவு கடுமையாகச் சிந்தித்த தந்தையவர்கள் இரண்டு இலக்கியங்களையும் குறிப்பிடுகிறார்கள் அவை:

குறள்: மேலே குறளைப்பற்றிச் சற்றுக்குறைவாகப் பேசியதைக் குறிப்பிட்டேன். ஈண்டு அதை மிகப் பெருமையாகப் பேசுகின்றார்கள். அவற்றுள் சில சிந்தனைகள்.

(1) அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

(2) குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சிபெறுவார்கள். அரசியல், சமூக அறிவு, பொருளாதார அறிவு ஆகிய அனைத்துத் அதில் அடங்கியுள்ளன.

(3) மனிதச் சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பெற்ற நூல்தான் திருக்குறள். எனவேதான் எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் “எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக்கொள்ளும் குறள்” என்றெல்லாம் அதனைப் போற்றி வருகின்றனர்.

(4) வள்ளுவரையும் நாம் ஒரு மனிதராக மதித்தே மக்களிடையே காணப்படும் இழிவுநீங்கி மனிதத்தன்மை வளர்ந்தோங்க வேண்டும் என்ற கருத்தோடு பாடுபட்ட ஒரு பெரியாராக மதித்தே நாம் குறளை ஒப்புக்கொள்ளுகிறோமே ஒழிய அதை நாம் கடவுள் வாக்காகவோ, அசரீரிவாக்காகவோ ஏற்றுக்கொள்ளவில்லை.

(5) நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் ‘வள்ளுவர் சமயத்தார்’ என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி என்ன என்றால் ‘குறள் நெறி’ என்று கூறுங்கள்; அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்கு வாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்கமாட்டார்; யாரும் குறளை மறுக்கமுடியாததே இதற்குக் காரணம்.

(6) குறளாசிரியர் கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை. குறளில் அறம், பொருள், இன்பம் என்ற அளவில் காணமுடியுமே தவிர வீடு மோட்சம்பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை. கடவுள்வாழ்த்து என்ற ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கை இடம்பெற வில்லை. ‘கடவுள்’ என்ற சொல்லே கடவுள்வாழ்த்து அதிகாரத் தில் இடம்பெறவில்லை. வள்ளுவர் கடவுள்வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியே நடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். . . மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துகளை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறியுள்ளார்.

(7) அறிவு பெற்றவன் அறிவையே முதன்மையாகக் கொண்டவன்; ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சி தன்மை கொண்டவன் எவனும் குறளை மதித்தே தீருவான்; குறளைப் பாராட்டியே தீருவான்; சிறிதாவது பின்பற்றிக் குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

(8) குறள்பக்தி நூலல்ல; கடவுளைக் காட்டும் எந்தவிதமான மத நூலல்ல; மதப்பிரச்சாரம் செய்யும் மதக்கோட்பாட்டு நூல்அல்ல. . . உண்மையான ஒழுக்கத்தை அதாவது யாவருக்கும் பொருந்தும் சமத்துவமான ஒழுக்கத்தைப் போதிப்பதாக இருக்கிறது குறள்.

(9) குறள் வெறும் ஒழுக்கத்தையும் வாழ்க்கைக்கு வேண்டிய அநுபவப்பூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.

(10) குறள் ஓர் அறிவுக்களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பெற்ற நூல் திருக்குறள். பார்ப்பனரின் பித்தலாட்டங்களை வெளியாக்குவதற்கென்றே எழுதப்பெற்ற நூல். ஆகவே வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்திருக்கவேண்டும். நூலின் ஒவ்வொரு செய்யுளும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தன்மையை விளக்குகின்றது.

இங்கனம் குறளைப்பற்றி ஏராளமான கருத்துகளைக் கூறுகின்றார். விரிவஞ்சி அவை தவிர்க்கப்பெறுகின்றன.

  1. சிலப்பதிகாரம்: தமிழ்நாட்டுக் கதையை துறவுநிலையிலுள்ள தமிழரால் எழுதப்பெற்றது. இதனைப்பற்றிப் பெரியாரின் சிந்தனைகள்:

(1) தமிழ்ப்புலவர்கள் மிகச்சிறப்பான இலக்கியம் என்று சொல்லக்கூடிய சிலப்பதிகாரத்தில் ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டத் தீவலம் சுற்றி’ என்று வருவது பார்ப்பான் வந்தபின் இயற்றிய இலக்கியம் என்பதற்குச் சான்றாகும். தமிழ் இலக்கியங்கள் யாவும் பார்ப்பான் வந்தபின் இயற்றப்பட்டனவே யாகும். தமிழனுக்கென்று தனித்த இலக்கியம் தமிழில் ஒன்றுகூட இல்லை.

(2) சிலப்பதிகாரக் கதையில் ஒரு பெண்ணைப் பதிவிரதையாக்கவேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ள முட்டாள்தனத்தையெல்லாம் கொண்டுவந்து புகுத்தியிருக்கிறான். சாமி மட்டுமல்ல, பார்ப்பான், பேய், பிசாசு இவை வந்துள்ளன. அரசனை முட்டாளாக்கியுள்ளன. பசுமாடு, பார்ப்பான் இவர்களை நீக்கிவிட்டு நாடு பூராவும் தீயில் எரியவேண்டும் என்று சாபம் இட்டிருக்கின்றாள் (கண்ணகி). இதனால் எல்லாம் நம் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் என்ன இருக்கிறது?

(3) ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவது பார்ப்பன முறை. ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை என்பதும், பெண்ணுக்கு உள்ள கட்டுப்பாட்டைப் போல ஆணுக்கு இல்லை என்பதும் பார்ப்பனர்களின் நாகரிகமுறை. அதைச் சித்திரிப்பதே சிலப்பதிகாரம்.

(4) சிலப்பதிகாரம் விபசாரத்தனத்தில் தொடங்கி, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் மூடநம்பிக்கையில் முடிந்த கருவூலமாகும்.

(5) சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்ற இலக்கியங்களில் உள்ளவை எல்லாம் கற்பனை (புளுகு). அதிலிருந்து மக்கள் அறிவு வளர்ச்சியோ, ஒழுக்கமோ, நீதியோ கற்றுக்கொள்ளுகிறமாதிரி இல்லை. அவை கற்பனைப் புளுகுக்கு, இலக்கியச் சிறப்பு வாய்ந்தனவாக இருக்கலாம். அவை புலமைக்குத் தான் பயன்படும். அறிவு ஒழுக்கத்திற்கான சங்கதி அதில் இல்லை.

அன்பர்களே, இதுகாறும் நாம் பெரியார் அவர்களின் கருத்துப்படி இலக்கியம் பயனைக் கருதித்தான் இருக்கவேண்டும் அல்லது நீதியைக் கருதியாவது, ஒழுக்கத்தைக் கருதியாவது இருக்கவேண்டும் என்று அறிகின்றோம். சுருக்கமாகச் சொன்னால் உலகாயதத்தைக் கருதியே அவர் நோக்கம் அமைவதாக உள்ளது எனலாம். இத்துடன் இன்றைய பொழிவு நிறைவு செய்வதற்குமுன் பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர் கருத்துகளை உங்கள் முன் வைக்க நினைக்கிறேன்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

 

குறிப்பு 1. ஒளவையார்-தனிப்பாடல் திரட்டு-பகுதி-1 பக். 119.

குறிப்பு 2. இத்தகைய இலக்கியம் தோன்றினால் அஃது உணர்வுக்கு இடம் இல்லாத இலக்கியமாகவே இருக்கும்.

குறிப்பு 3. இதை எழுதினவன் தமிழன். ஆரியன் அல்லன். கதைதான் வடநாட்டுக்கதை.

குறிப்பு 4. சுவை என்பது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வருவது அல்ல. காவியத்தில், நாட்டியத்தில் வருவது. அது பொருளைப் புறக்கணித்து அநுபவிக்கத் தக்கது. அது போலத்தான் அழுகைச் சுவையும் பிறவும், தந்தை அவர்கட்கு மதிப்பு தந்து, அவரது கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

குறிப்பு 5. சங்க இலக்கியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வடசொற்களே உள்ளன; அவ்வளவே. பெரும்பாலானவற்றை அச்சுக்குக் கொணர்ந்தவர் உ.வே.சா. இவர் தமிழ்ப் பார்ப்பனர், நம்மவர்; பெரியார் போலவே மதிக்கத் தக்கவர். போற்றற்குரியவர்.