(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 41

முடிவுரை

 முடிவுரைஎன் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. மொழி ஆராய்ச்சியில் தெய்வக்கூறு பெரியரால் வெறுக்கப்பெற்றது என்றும், மூளையின் வளர்ச்சி காரணமாகத்தான் மொழி வளர்ந்தது என்றும் கூறி கிளியின் பேச்சில் மூளையின் கூறு செயற்படாததால் அதன் பேச்சு வெற்றொலியாகவே உள்ளது என்று சான்று காட்டி விளக்கப்பெற்றது. இவற்றின் அடிப்படையில் தந்தை பெரியாரின் மொழிபற்றிய சிந்தனைகள் நோக்கப் பெறுதல் வேண்டும் என்று சொல்லப்பெற்றது. தமிழ்க் கவிஞர்கள் தமிழ் மொழியைப் புகழ்வதுபோல வேறு எந்தமொழிகளையும் அந்தந்த மொழிக் கவிஞர்கள் புகழவில்லை என்பது விளக்கப் பெற்றது. பெரியார் தமிழுக்கு ஆதரவு தருவதன் காரணம் விளக்கப்பெற்றது, அவர்தம் வாய்மொழியாகவே. தமிழ் தலையெடுக்காமல் செய்தது அதன் இலக்கியங்கள்தாம் என்பது பெரியாரின் கருத்து என்பது சான்றுகளுடன் விளக்கப் பெற்றது. தமிழர் வாழ்வில் ஆங்கிலம் இன்றியமையாமையை தந்தையவர்கள் மிகவும் வற்புறுத்துகிறார்கள் என்பது தெளிவுறுத்தப் பெற்றது. அரசு தன் முரண்பட்ட கொள்கைளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை என் கருத்தாகக் காட்டினேன். சமற்கிருதம் இருமொழிக் கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டிற்குத் தேவை இல்லை என்பது சுட்டப் பெற்றது. குறிப்பு 1 – பள்ளி, கல்லூரிக் கல்வித்திட்டத்தில் இந்தி இடம் பெறக்கூடாது என்று தந்தையவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் கையாண்ட எதிர்ப்புபற்றி விவரங்களுடன் விளக்கப்பெற்றது. இந்தித் திணிப்புபற்றிப் பெரியார் அவர்களின் சிந்தனைகள் காட்டப்பெற்றன. தமிழ்மொழியாராய்ச்சியில் தமிழே கேரளம், கருநாடகம், ஆந்திரம் என்ற இடங்களில் பேசப்பெற்றது என்றும் இடவகையால் தமிழின் பெயரே மலையாளம், கன்னடம் தெலுங்கு என்பதாக வழங்கப்பெற்றது என்பது பெரியாரின் கருத்தாகும் என்றும், இது ஆராயத்தக்கது என்றும் காட்டப்பெற்றது. எழுத்துச்சீர்த்திருத்தமே தந்தையவர்கள் தமிழ் எழுத்துவடிவ மாற்றத்தில் பெரும்பங்காகும் என்பது காட்டப்பெற்றது. இதுபற்றிய பெரியாரின் சிந்தனைகள் விவரம் விளக்கப்பெற்றது. அறிஞர் குழந்தைசாமியின் கருத்தும் தரப் பெற்றது. தமிழ்ப்புலவர்கள்பற்றி பெரியாருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்பதையும் காட்டினேன். இதுபற்றி என் கருத்தையும் உங்கள் முன் வைத்தேன்.

இலக்கியம்பற்றி ஐயா அவர்கள் கம்பராமாயணம், சீவசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவற்றை ஒதுக்குவது உகந்ததாக இல்லையென்றும், பன்னெடுங்காலமாக தமிழர்களின் மரபுச்செல்வமாக வந்தவற்றை ஒதுக்கித்தள்ளுவது அறிவுடையன அல்ல என்றும்; கம்பராமாயணத்தை ‘காமத்துப்பால்’ என்று சொல்லுவது பொருத்தமன்று என்றும் இலக்கியங்களில் வரும் நிகழ்ச்சிகள் சுவையின்பாற்படும் என்றும் விளக்கினேன். சுவை இலக்கணத்தின்பால் ஐயா அவர்கள் தனிக் கருத்தினைச் செலுத்தவில்லை என்பது என் கருத்து என்று குறிப்பிட்டேன். திருக்குறளை விரிவாகப் போற்றும் ஐயா அவர்கள் சிலம்பு, சிந்தாமணி, மேகலை போன்ற காவியங்களை வெறுப்பது விரும்பத்தக்கதன்று என்றும் குறிப்பிட்டேன். இங்ஙனமாக இன்றைய பொழிவு அமைந்தது.

கடந்த பல்லாண்டுகளாகச் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் போன்ற சமயங்களையும் இறைவனை அடிப்படையாகக் கொண்ட பக்தி இலக்கியங்களையும் படித்தும் ஆய்ந்து எழுதியும் வந்த அடியேனுக்கு இறைமறுப்புக் கொள்கையே தமது குறிக்கோளாக்க கொண்ட தந்தை பெரியார் சிந்தனைகளைப் பேச வாய்ப்பு அளித்த முனைவர் இரா. தாண்டவனுக்கும், பல்கலைக்கழகத்தினருக்கும் குறிப்பாகப் பெரியார் கொள்கையின் சார்பாக உள்ள துணைவேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது. எண்பத்தைந்து அகவையைக் கடக்கும் நிலையிலுள்ள அடியேன் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் (ஐந்து ஆண்டுகள்) தந்தையாரின் பேச்சை விருப்புடன் கேட்டவன்; அதன்பிறகு அவர் மறையும் வரையில் நெருங்கிப் பழகியவன். இந்த நீண்டகால அநுபவத்தில் என் மனம் தெளிவான நிலையில் உள்ளது; அநுபூதி நிலையை எட்டும் நிலையில் உள்ளது. இப்போது அடியேனுக்கு இராமாநுசர், இராமலிங்க அடிகள், தாயுமான அடிகள், இராமகிருட்டிண பரமஅம்சர், நால்வர்களில் குறிப்பாக நாவுக்கரசர், மணிவாசகர் ஆகியோருடன் தந்தை பெரியார் அவர்களும் சேர்கின்றார் என்பது என் கருத்து. அப்பர் சுவாமிகள், வள்ளலார் இவர்கள் படைப்பில் பெரியார் கருத்துகளைக் காணலாம். அண்மையில் திரு இராம. வீரப்பன் (எம்ஞ்சியார் கழகத் தலைவர்) ‘வள்ளலார் மென்மையாகச் சொன்னவற்றையே பெரியார் வன்மையாகச் சொன்னார்’ என்று கூறியது போன்ற கருத்தைக் கொண்டவன் அடியேன். இராமாநுசர் வாழ்வையும் தந்தை பெரியார் வாழ்வையும் இருவர்தம் கருத்துகளையும் ஒரு சேரவைத்து ஒப்பிடுங்கால் இருவரும் மானிட இனத்தின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றிய பெரியார்கள் என்பது எனக்குத் தெளிவாகின்றது. ஆகவே இராமநுசரே பெரியாராகப் பிறந்துள்ளாரோ– மறுஅவதாரமோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பெரியாரும் தம் இறைமறுப்புக் கொள்கைமூலம் உருவமற்ற பரம்பொருளைக் (Transcendent Universal Reality) கண்டவர் என்பதாக எனக்குப் புலப்படுகின்றது. மக்கள் வழங்கும் கடவுளைப்பற்றிக் குறை கூறினாரேயன்றி தாம் மனத்தில் கொண்டுள்ள கடவுளைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவர் அநுபூதி நிலையில் இருந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

குறிப்பு 1 – அந்தமொழியை வெறுக்கவேண்டியதில்லை. இந்தி படிப்பதுபோல் தனியாகக் கற்றுக் கொள்ளலாம். பார்ப்பனர்கள் தம்மொழி என்று சமற்கிருதத்தை உரிமை கொண்டாடுகின்றனரேயன்றிப் பெரும்பாலோர் படிப்பதில்லை.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

(தொடரும்)