தந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 8 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 9
- கடவுள்
தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.
(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. அச்சமும், ஐயமும், பேராசையும், பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றன.
(2) இன்று நடைமுறையில் இருக்கும் கடவுளர்களின் 100க்கு 98 விழுக்காடு ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பெற்றவர்கள் என்பது ஒருதலை. இஃது எப்படி என்று கேட்டால், ஆரியக் கடவுளர்க்கெல்லாம் பூணூல் உண்டு. எல்லாக் கடவுளர்களும் பார்ப்பான் எப்படி நம்மிடம் நடந்து கொள்கின்றானோ அந்த மாதிரி நடந்து கொண்டதாகத்தான் இருக்கும். அஃதுடன் எல்லாக் கடவுளர்களும் இரண்டு வகையில் அடங்கியவர்களாக இருப்பார்கள், ஒன்று. சைவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்; மற்றொன்று வைணவத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். எல்லாக் கடவுளர்களுமே ஆரியர்கள் இந்த நாட்டிற்கு வந்தபிறகு கற்பிக்கப் பெற்றவர்களாக இருப்பர். இந்த இருவகைகளிலும் ஒரு கடவுளாவது தமிழர் நாகரிகத்திற்கு உகந்தவர்களாக இல்லை என்பது தெளிவு.
(3) புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டவற்றை ஒழிக்கவே அவதாரக் கதைகள்-அவற்றுள்ளும் முக்கியமாக கிருட்டிணாவதாரம்; அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப் பெற்றன. அதாவது மூடநம்பிக்கைக்காகக் கிருட்டிணனும் ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திரு விளையாடல்கள், லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பெற்றுள்ளன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் பன்னாட்களுக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பெற்றது.
(4) மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தொடங்கிய பிறகுதான் கடவுள் பற்றி எண்ணம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றனவே தவிரத் தானாக ஏற்படுவதில்லை.
(5) முதன் முதலில் மனிதன் ஏற்பட்ட நாளில் கடவுள் என்ற பேச்சோ அந்த எண்ணமோ இருந்திருக்க முடியாது. நீண்ட நாட்களுக்குப் பின்னரே ஏற்பட்டிருக்கும். இந்த எண்ணம் ஏற்பட்ட நேரத்தில் எந்தத்தன்மையில் மனிதன் வாழ்ந்தானோ அதே தன்மை அந்தக் காலக் கடவுளுக்கும் கற்பிக்கப் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் சிவன்தான் முழுமுதற் கடவுளாக இருந்திருத்தல் கூடும்; பிறகு நாகரிகமடைந்த காலத்தில்தான் விஷ்ணு அல்லது திருமால் ஏற்பட்டிருக்க வேண்டும்.
(6) நமக்கு எத்தனை ஆயிரம் கடவுளர்கள்? அவர்களின் பெயர்களை எழுதவேண்டுமென்று தொடங்கினால் ஊற்றுப் பேனாவிலுள்ள மைதான் தீர்ந்து விடும்; பெயர்கள் முடிவு அடையா. பெரியார் போன்றோர் தலையெடுத்து இதைக் கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.
(7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் “உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்” என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான்.
(8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.
(9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.
(10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
(11) நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் புராணங்களில் வரும் பாத்திரங்களே. தத்துவப்படியான கடவுள் நமக்கு இல்லை.
(12) கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்கின்றார். ஏன் என்றால் அவன் எந்தக் காரணமுமின்றித் தன்னுடைய பயத்தையும் அறிவற்ற தன்மையையும் கொண்டு இயற்கையாக ஏற்படுபவைகளை அவை ஏற்பட ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளைக் கற்பித்தான். அறிவாளியால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரண காரியங்கள் இருக்கும்; முட்டாள்களால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரணகாரியம் இருக்காது. இதனால் அது-கடவுள்-முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்கின்றார்.
(13) மனிதன் சிந்திக்கிற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கை யில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவை தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் என்பது பெரியாரின் கருத்து.
(14) கடவுள் வேதம் பிரார்த்தனை முதலியவற்றின் பலன் என்கின்ற உணர்வைக் கடவுள் மதவாதிகள், பார்ப்பனர்கள் மக்களுக்கு ஏற்றாதிருந்தால் நாட்டில் கடவுளர்களே தோற்றுவிக்கப்பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக உரைக்கின்றார் உத்தமர் பெரியார்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’
பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்
Leave a Reply