தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 1/5 – மா.இராசமாணிக்கனார் : தொடர்ச்சி)
தமிழக வரலாறு 2/5
ஆட்சி முறை
சங்கக் காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச்சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், ‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன.
ஊராட்சி
ஒவ்வோர் ஊரும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும் பல குடும்புகளாகப் (wards) பிரிக்கப்பட்டிருந்தது. கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராய், பல சாத்திர நூல்களையும் கற்றுப் பிறர்க்கு உணர்த்த வல்லவராய், செயலாற்றலில் திறமை உடையவராய், முப்பத்தைந்துக்கு மேற்பட்டு எழுபத்தைந்துக்கு உட்பட்ட வயதினராய், நல்வழியில் சம்பாதித்த பொருளும் தூய வாழ்க்கையும் உடையவராய், மூன்று ஆண்டுகட்கு உட்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத்திலும் உறுப்பினராய் இராதவராய் இருப்பவரே ஊரினரால் தேர்ந்தெடுக்க உரிமை உடையவராவர். அவையில் உறுப்பினராய் இருந்து கணக்குக் காட்டரதவரும், ஐவகைப் பெருந்தீமைகள் செய்த வரும், கிராமக் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், கள்ளக் கையெழுத்திட்டவரும், பிறர் பொருளை வவ்வினோரும், குற்றம் காரணமாகக் கழுதையின்மீது ஏற்றப்பட்டவரும், கையூட்டு (இலஞ்சம்) வாங்கினவரும், கிராமத் துரோகி என்று கருதப்பட்டவரும், இவர்கட்கு உறவினரும் தம் வாழ் நாள் முழுமையும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர்.
தேர்தல் முறை
தேர்தல் நடைபெறும் நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், அவை கூடுவதற்கான மாளிகையில் ஊரார் அனைவரையும் கூட்டுவர். கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்படும். அங்குள்ள பெரிய வருள் ஒருவர், அக்குடத்துள் ஒன்றுமில்லை என்பதை ஊரார்க்குக் காட்டிக் கீழே வைப்பர். பின்னர், ஒவ்வொரு குடும்பினரும் தம் குடும்புக்கு ஏற்ற ஒருவர் பெயரைத் தனித்தனி ஒலையில் எழுதுவர்; அவ் வோலைகள் சேர்த்து அக்குடும்பின் பெயரெழுதிய வாயோலையால் மூடப்பட்டுக் கட்டப்படும்; அக்கட்டு, குடத்துள் வைக்கப்படும். இவ்வாறே எல்லாக் குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், ஊர்த் தலைவரான முதியவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் குடத்திலிருந்து ஓர் ஒலைக்கட்டை எடுப்பிப்பர்; அதனை அவிழ்த்து வேறொரு குடத்தில் இட்டுக் குலுக்குவர் அவற்றுள் ஒன்றை அச்சிறுவனைக் கொண்டு எடுப்பிப்பர்; அதனைத் தாம் வாங்கி ஊர்க் கணக்கனிடம் தருவர். அவன், தன் கையில் ஒன்றும் இல்லையென்பதை அவையோர்க்குக் காட்டி, அவ்வோலையைப் பெற்று, யாவரும் கேட்க அதில் எழுதப்பட்டுள்ள பெயரை உரக்க வாசிப்பான். பின்னர், அதனை அங்குள்ள அறிஞர் எல்லோரும் வாசிப்பர். பிறகு அப்பெயர் ஒர் ஒலையில் வரையப் படும். இங்ஙணம் தேர்ந்தெடுக்கிப்பட்டவரே, அக் குடும்பின் சார்பாளராவார்.. இவ்வாறு பிற குடும்புகட்கும் தேர்தல் நடைபெறும். இங்ஙனம் தேர்ந் தெடுக்கப்பட்டவரே ஓராண்டுவரை ஊராட்சிக் கழகத்தினர் ஆவர்.
உட்கழகங்களும் வேலைகளும்
ஒவ்வோர் ஊராட்சிக் கழகத்திலும் சில உட் கழகங்கள் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினருள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் படடறிவிலும் மிக்கவர் பன்னிருவரைச் ஆண்டு(சம்வத்சர) வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றவருட் சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்ச வாரியராகவும், மற்றுஞ் சிலர் தோட்டவாரியராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். இங்ஙனம் ஊராட்சிக் கழகம் ஊர்த்தேவைகட்கு ஏற்பப் பல உட்கழகங்களாகப் பிரிந்து நின்று கடனாற்றும்.
நியாய விசாரணை செய்தலும் அறநிலையங்களை மேற்பார்வை இடுதலும் ஆண்டு வாரியர் கடமை. ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலைகளைப் பாதுகாத்தலும் விளை நிலங்கட்டு வேண்டுமளவு நீரைப் பாயச் செய்தலும் ஏரி வாரியத்தார் கடமை. நிலங்கள், தோட்டங்கள் இவற்றைப்பற்றிய எல்லாவற்றையும் கவனித்தல் தோட்டவாரியர் தொழிலாகும். பலவகையாலும் வாங்கப்பட்ட காசுகளை ஆராய்வது பொன்வாரியர் பொறுப்பாகும். ஊரில் எப்பொழுதேனும் பஞ்சம், வெள்ளச்சேதம் இவை ஏற்படின், ஊராரைக் காப்பதற்கு முன்னேற்பாடாக ஆண்டுதோறும் குடிமக்களிடம் ‘பஞ்ச’ நெல் முதலி யன வாங்கிச் சேமித்தல் பஞ்ச வாரியர் தொழிலாகும். இவ்வூராட்சியினர் பெருமக்கள் எனவும் ‘ஆளுங்கணத்தார்’ எனவும் வழங்கப்பட்டார்கள். இவர்களது ஆட்சிக்குரிய மாளிகை ஒன்று ஒவ் வொரு சிற்றுாரிலும் இருந்தது.
(தொடரும்)
மா.இராசமாணிக்கனார்
இலக்கிய அமுதம்
Leave a Reply