தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காசுமீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கேரளாவில் உள்ள தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடத்தித் தங்கள் வீரத்தைக் காட்டுவது; தமிழர்கள் கூலிக்காகச் செம்மரம் வெட்டினால் அவர்களையே வெட்டிக் கொன்று போடுவது; இவைதாம் தமிழர்களிடம் பக்கத்து மாநில மக்கள் காலங்காலமாக நடந்து கொள்ளும் விதம். ஆனால், இத்தனைக்கும் எதிரடியாக ஒருமுறையாவது தமிழர்கள் இங்குள்ள அண்டை மாநிலத்தவர்கள் மீது ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா? கிடையாது! காரணம், அதுதான் தமிழர் குணம்!
வன்முறையைக் கையிலெடுக்காதது மட்டுமில்லை இதுவரை தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநிலங்களுக்குச் செல்லும் எந்த ஒரு பொருளையும் சேவையையும் தமிழர்கள் தடுத்ததும் கிடையாது. “காவிரி எங்களுடையது!” என இன்று மூச்சு முட்ட முழங்குகிறார்கள் கன்னடர்கள்.
கருநாடகத்தில் உற்பத்தியாகிற ஒரே காரணத்தால் காவிரி கன்னடர்களுடையது என்றால் நெய்வேலி நிலக்கரியிலிருந்து பெறப்படும் மின்சாரம் யாருடையது? கருநாடகத்தில் இப்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு என்றும், தங்களுக்கே இல்லாதபொழுது தமிழ்நாட்டுக்கு எப்படி நீர் தருவது என்றும் கேட்கிறார்கள் கன்னடர்கள். ஆனால், மின் தட்டுப்பாட்டால் தமிழ்நாடே இருண்டு கிடந்த நிலையிலும் ஒருநாளாவது தமிழர்கள் இப்படிக் கேட்டதுண்டா? “எங்கள் மண்ணிலுள்ள நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எங்களுக்கே போதாதபொழுது நாங்கள் ஏன் அதைக் கருநாடகத்தோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும்?” என்று தமிழர்கள் ஒருமுறையாவது கேட்டிருப்பார்களா? இல்லவே இல்லை!
கேட்டால், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடுவணரசுக் கட்டுப்பாட்டில் வருவது என்பார்கள் மேதைகள் சிலர். ஏன், இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் “தண்ணீரை அனுப்பாதே! நிறுத்து!” எனக் கன்னடர்கள் போராடுவது போல் “மின்சாரம் அனுப்பாதே! நிறுத்து!” எனத் தமிழர்களுக்குப் போராடத் தெரியாதா?… ஆனால், அப்படிச் செய்தார்களா?… இல்லை. முன்பு ஒரு முறை காவிரித் தண்ணீரை வழக்கம் போலக் கருநாடகம் மறுத்தபொழுது ஒரு தடவை மட்டும் தமிழ்த் திரையுலகினர் அப்படி ஒரு போராட்டத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முன் நடத்தினார்கள். அது கூடத் தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் ஒருநாள் முயற்சிதானே தவிர, தண்ணீரை நிறுத்தும் வரை தொடர்ந்து கன்னடர்கள் இன்று அட்டூழியம் புரிவது போலத் தமிழர்கள் நடந்து கொள்ளவில்லை.
கருநாடகத்துக்கான மின்சாரம் மட்டுமில்லை! பால், முட்டை, இறைச்சி எனக் கேரளாவுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் பலவும் கூட இன்று வரை அவர்களுக்கு இங்கிருந்து தங்கு தடையின்றிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.
இப்படி ஆண்டாண்டுக் காலமாகக் காயங்களையும் கண்ணீரையும் மட்டுமே தங்களுக்குப் பரிசளிக்கும் மக்களிடம் மாற்றாகப் புன்னகையையும் நேசக்கரத்தையும் மட்டுமே காட்டி வந்த தமிழர்கள் கடைசியாக இதோ தாங்களும் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள்! இராமநாதபுரத்திற்கு வந்த கருநாடகப் பதிவு எண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று அடித்து உடைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஒன்றினுள் நுழைந்த தமிழர்கள் சிலர் அங்கிருந்த ஊழியர்களை அடித்து வெளியேற்றி விட்டுத் தாங்கள் வங்கியை இழுத்துப் பூட்டி விட்டதாகப் பெருமிதத்தோடு ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கிறார்கள். சென்னையில் கன்னடர் ஒருவருக்குச் சொந்தமான புகழ் பெற்ற உணவகம் ஒன்று தாக்கப்பட்டிருக்கிறது. ஆம், கடைசியில் தமிழர்களையும் வன்முறையாளர்களாக்கி விட்டார்கள்! தமிழ்நாட்டுடன் தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்ள மறுத்தவர்கள் அதற்கு மாற்றாகத் தங்களிடம் இருந்த வன்மத்தைப் பங்களித்து விட்டார்கள்!
வெறுப்புக்குப் பரிசாக அன்பையும், காழ்ப்புணர்ச்சிக்கு மாற்றாகத் தோழமையையும், வன்முறைக்கு எதிர்வினையாகப் பெருந் தன்மையையும் மட்டுமே தலைமுறை தலைமுறையாகக் காட்டி வந்த ஓர் இனம் இறுதியில் தாங்களும் ஆயுதம் ஏந்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது என்றால் அதை விடப் பெரிய தலைக்குனிவு இந்த நாட்டுக்கு வேறு ஏதாவது இருக்க முடியுமா?
‘என்ன இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள்! அதுவும் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் ஆகிய நாம் அனைவரும் திராவிடர் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற எண்ணத்தால்தான் இத்தனை காலமாகத் தமிழர்கள் அத்தனை கொடுமைகளுக்கும் அமைதி காத்தார்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று தாங்களும் தேசிய ஒருமைப்பாட்டை மறந்து ஆயுதம் தூக்குகிறார்கள் என்றால் அது இந்திய ஒருமைப்பாட்டின் மாபெரும் தோல்வி! திராவிட இனக்குழுவைச் சேர்ந்த மற்ற மூன்று இனங்களும் அந்தக் கோட்பாட்டைக் கை கழுவிக் காலங்கள் பல கடந்து விட்ட நிலையில் அதை இத்தனை காலமும் தாங்கிப் பிடித்திருந்த தமிழர்களும் எப்பொழுது பிற திராவிடர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினார்களோ அந்த நொடியே திராவிடம் எனும் கோட்பாடு செத்து விட்டது!
‘இந்திய ஒருமைப்பாடு வாழ்ந்தால் என்ன, திராவிடக் கோட்பாடு செத்தால் என்ன?’ என்று இன்று தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்கள் நினைக்கலாம். ஆனால், தமிழர்கள் உள்ளத்தில் இவர்கள் ஏற்படுத்தியுள்ள இந்த வலுக்கட்டாய மாற்றம் அரசியல் அளவிலும், சமூக அளவிலும் எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். ஏனெனில், ஓர் இனம், தாங்களும் தங்களைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே இனக்குழுவைச் சார்ந்தவர்கள் என்கிற பார்வையில் அரசியலையும் மற்றவற்றையும் அணுகுவதற்கும் ‘அவர்கள் வேறு, நாம் வேறு’ என்கிற பார்வையில் அணுகுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு முற்றிலும் தலைகீழானது. இதன் விளைவுகளை வருங்காலத்தில் நேரிடையாகப் பார்க்க நேரும்பொழுதுதான் தங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட வரலாற்றுப் பிழை என்பது மற்ற மாநிலத்தவர்க்குப் புரியும். எத்தனை முறை பகைமை பாராட்டினாலும் அத்தனை முறையும் நட்பு பாராட்டிக் கொண்டு மட்டுமே இருந்த ஓர் இனத்தின் உறவை எட்டி உதைத்தது எப்பேர்ப்பட்ட பேரிழப்பு என்பதும் அப்பொழுது உரைக்கும்!
அது மட்டுமில்லை, நடந்து கொண்டிருப்பது தகவல் உகம்! நடக்கும் அத்தனையும் இணையவெளியிலும் வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. கருநாடக – கேரள – ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த வருங்காலத் தலைமுறையினர் இவற்றையெல்லாம் அறிய நேரும்பொழுது “இப்படி மறுபடியும் மறுபடியும் தமிழர்கள் மீது காலங்காலமாக நீங்கள் உமிழ்ந்த அத்தனை வெறுப்புக்கும் மாற்றாக அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தும் கூட அவர்களே பொறுமையைக் கைவிட்டு ஆயுதம் ஏந்தும் வரைக்கும் நீங்கள் விடவில்லையா? சீச்சீ!” என்று காறித் துப்பத்தான் போகிறார்கள். இன்று தமிழர்களை ஆயுதம் தூக்க வைத்ததற்காக இந்த மாநிலங்களின் மக்கள் அன்று வெட்கித் தலைகுனிவார்கள்!
அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்ததெல்லாம் சரி எனவோ, வன்முறைக்குத் தீர்வு வன்முறைதான் எனவோ நான் சொல்லவில்லை. எங்கோ இருக்கும் யாரோ சிலர் செய்த குற்றத்துக்காக இங்கிருக்கும் வெள்ளந்தி மக்களைத் தாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால், அப்பேர்ப்பட்ட இழிவேலையில் தமிழர்களையும் ஈடுபட வைத்து விட்டார்களே என்கிற பொருமலே இந்தப் பதிவு!
கன்னடர்களே! இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க, அமைதிபேணி, மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!
- இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply