தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 24 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 25
13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி)
பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில்,
“அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிர் ” (புறநானூறு -246)
எனக் கணவனை இழந்த பெண்கள் நிலை கூறப்பட்டுள்ளது. ஏதோ இலை கலந்த நீர்ச்சோற்றைப் பிழிந்து எள்ளுத் துவையலும் புளிச்சாறும் சேர்த்து நெய்யின்றி வேளைக்கீரை அவியலுடன் உணவாகக் கொண்டு பருக்கைக் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் பாயின்றி உறங்கி வந்தனர் என்று மேற்கூறிய புறநானூற்று அடிகள் அறிவிக்கின்றன. இவ்வளவு கொடிய துன்ப வாழ்வை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் எவ்வாறு வந்ததோ அறியோம். இக் கொடிய கைம்மை நோன்பை மகளிர் வெறுத்து உயிர்விடும் பழக்கமும் இருந்துள்ளது என்பது பெருங்கோப்பெண்டின் வரலாறு உணர்த்துவதோடு பின்வரும் குறுந்தொகைப் பாட்டும் வெளிப்படுத்துகின்றது.
“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே”
(குறுந்தொகை-69)
பெண்குரங்கு ஒன்று தன் ஆண்குரங்கு இறந்தவுடன் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ விரும்பாது தன் குட்டிகளைத் தன் சுற்றத்திடம் சேர்த்துவிட்டு வரை பாய்ந்து உயிர்விடடதாக இப் பாடலில் கூறப்பட்டுள்ளது. குரங்கு ஒன்று இவ்வாறு செய்திருக்குமா என்பது ஐயமே. நாட்டிலிருந்த பழக்கமொன்றைப் புலவர் குரங்கின் மீதேற்றிக் கூறியுள்ளார் என்றுதான் கருதுதல் வேண்டும். இத் தற்குறிப்பேற்றம், கைம்மை நோன்பு அக்கால மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது.
கைம்மை மகளிர் தம் தலை முழுவதும் மழித்துக் கொள்ளலும் இறந்த கணவரை எண்ணிக் கலங்கி மார்படித்துக்கொண்டு அரற்றலும் உண்டு ( புறநானூறு -25)
இவ்வாறெல்லாம் பெண்கள் தம் அழகைச் சீரழித்துக்
கொண்டது, காதலரை இழந்த பின்னர் நல்வாழ்வு பெற விரும்பாமையும் பிறர் காதலிக்கும் நிலை தோன்றாம லிருக்கவும் ஆகும்.
கணவனை இழந்த மகளிர் மீண்டும் மணம் செய்துகொண்டதாக இலக்கியங்களில் கூறப்படவில்லை. மணவிலக்கும் மறுமணமும் அக்கால மக்கள் விரும்பாதவை போலும். கைம்மை நோன்பு கொண்டவர்கள் நூற்றல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் (புறநானூறு -326; நற்றிணை-359).
கணவரை இழந்த மகளிர் நோன்பு கொண்டிருந்தது போன்று மனைவியரை இழந்த கணவரும் நோன்பு பூண்டு மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளனர். அந்நிலையை ஆசிரியர் தொல்காப்பியர் “தபுதாரம்” என்று அழைத்துள்ளார்.
அக்காலத்தில் ஆடவர் பல மனைவியரை மணந்து கொள்ளும் பழக்கம் இருந்தது, ஆயினும், ஒரு மனைவியோடு வாழ்தலும் மனைவியிறந்த பின்னர் வேறொரு பெண்ணை மணந்து கொள்ளாமல் அவள் பிரிவாற்றாமையால் வருந்தலும் அக்கால ஆடவர்களிடையே போற்றப்பட்ட சிறப்பியல்புகளாய் இருந்தன (புறநானூறு -71,73,245).
பெண்களுக்கே எனச் சில பழக்கங்கள் இருந்தமைபோன்று ஆண்களுக்கு எனவும் ஒரு வழக்கம் இருந்துள்ளது. அதுதான் ‘மடலேறுதல்’ என்பதாகும். தான் காதலித்த பெண்ணை அவள் பெற்றோர் கொடுக்க இசையாத காலத்தில், காதலன், அவள் போன்ற உருவத்தைத் திரையில் எழுதிக் கையில் தாங்கிக்கொண்டு பனங்கருக்கால் செய்த குதிரையின்மீது ஆடையின்றி ஏறிக்கொண்டு எல்லா ரும் கண்டு வருந்துமாறு நகர் வலம் வருவது வழக்கமாம். பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையின் உருளை அவனை ஊறுபடுத்திக் குருதி வடியச் செய்யுமாம். அவனது இரங்கத்தக்க நிலையைக் கண்ட ஊரார், பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி அவனுக்கே கொடுக்கச் செய்வார்களாம். இம் மடலேறும் வழக்கம் பெண்களுக்கு உரியதன்று.
“எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல்.பொ.25)
“கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்” (குறள்-1137)
என்பன காண்க. மடலேறுதல் இலக்கிய வழக்குக்கே உரியதாக இருந்திருக்கக்கூடும். இலக்கிய வழக்கிலும் அப் பழக்கம் பெண்களுக்குரியதன்று என்று தமிழ்நாட்டார் கொண்டனர்; ஆனால் வட நாட்டார் பெண்களுக்கும் உரியதாகக் கொண்டனர்.
மனைக்கு விளக்காகிய மகளிர் இரவின் முற்பட்ட பொழுதில் திருவிளக்கேற்றி, அவ் விளக்குக்கு முல்லை மலர் தூவி, அதனை இல்லுறை கடவுளாக வழிபட்டனர்.
ஏதேனும் குடும்ப நலன்பற்றி அறிய வேண்டியிருப்பின் அவ் விளக்கின் முன் விரிச்சி கேட்டு நிற்பர். ஒருவர் ஒன்றை அறிய விரும்பி விளக்கின் முன் தொழுது நிற்பர்; அவ்வமயம் வேறு யாரேனும் ஒருவர் தாமாக வேறொரு நிகழ்ச்சிபற்றிக் கூறுவர். அவர் கூறுவது விளக்கின் முன் நிற்போர் செவியில் கேட்கும். அதனைக் கொண்டு விளைய இருக்கும் நன்மை தீமையைத் தெரிந்து கொள்வர். இம் முறையே ‘விரிச்சி’ எனப்படும். 1
இக் காலத்தில் கூட இம் முறை நிலவாமலின்று. நாம் இருவர் ஒரு பொருள்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்கால் அதற்குத் தொடர்பாக நம் தொடர்பின்றி அவர் கூறும் சொல் அமையுமேல் அதைக்கொண்டு நிகழப் போவதை முடிவுகட்டுகின்றோம். ஆனால், விளக்கு முன் நின்று பெருமுது பெண்டிர் கேட்பதில்லை.
ஒன்றில் வெற்றி பெற்றால் அதைக் கொண்டாட விருந்தும் உண்டாட்டும் கொள்ளும் வழக்கமுண்டு. இவை மாலைக் காலத்தில்தான் நிகழும்.2 இக்காலங்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து மகிழ்வதுமுண்டு.3
பல்லி எழுப்பும் ஓசையாலும், கண் துடித்தலாலும் நிகழவிருக்கும் நன்மை தீமையை அறியும் பழக்கம் அன்றும் இருந்தது.
“இனை நல முடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவியின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே” 4
+++
- முல்லைப் பாட்டு வரிகள் 6-11; 2. குறுந்தொகை – 155
- அகம்-11. வரிகள் 4-5; 4. பாலைக் கலி 10. வரிகள் 19-22
+++
பல்லி இசைத்தலாலும் இடக்கண் துடித்தலாலும் பிரிந்து சென்ற தலைவர் விரைவில் வந்துவிடுவர் என்று தலைவி தோழிக்குக் கூறுகினறாள். மகளிர்க்குத்தாம் இம் முறையெல்லாம் உரிய.
காகத்திற்குச் சோறிடுதலும், காகம் கரைவதால் விருந்தினர் வருவர் என்று கருதுதலும், அக்கால மகளிரும் அறிந்த வழக்கங்களாகும்.
பிறை தொழுதல்,1 ஞாயிறு வழிபடல் அக்காலத்
திலும் போற்றப்பட்டன.
புதுப்புனலாடி மகிழ்தலும் கடல் நீராடுதலும் மக்கள் விரும்பிய நிகழ்ச்சிகளாகும்.
மகளிர் கைகளில் அணியாக வளையல்கள் அணிதலும் தலையில் பூச்சூடிக்கொண்டு விளங்குதலும் அன்றே தொன்றுபடு நிகழ்ச்சிகளாகும். பூக்களையும் தழைகளையும் உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்2 மகளிர் மகிழ்ந்து விளையாடினர். பெண்களுக்குப் பூவையர் எனும் பெயருண்டு. பூக்களை மிகுதியாக விரும்பி அணிந்த
தனால்தான் இப் பெயர் அவர்க்கு உண்டாயிற்று போலும்.
+++
- மதுரைக்காஞ்சி வரி 193
- குறுந்தொகை 295
+++
தம் வாழ்க்கைக்குப் பயன்படுவனவற்றை யெல்லாம் மதித்துப் போற்றலும் நறுவிரை நன்புகை காட்டி வழிபடுதலும் செய்துள்ளனர்.
பாம்பு, பேய், மரம், இடி, மின்னல் முதலியவற்றை வழிபட்டதாக எவ்விதக் குறிப்பும் எங்கும் இல்லை. சங்கக் கால மக்களின் பழக்கவழக்கங்கள் அவர்களை இருபதாம் நூற்றண்டினர் போன்றே காட்டுகின்றன.
Leave a Reply