இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  18

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  17 –  தொடர்ச்சி)

9. மெய்யுணர்வுக் கொள்கை

வாழ்வியல் உண்மைகளை மக்களுக்கு அறிவுறுத்த முற்படுபவர்கள் சான்றோர்கள் எனச் சிறப்பிக்கப்படுவார்கள்.  இவர்களே உயர்ந்தோர் என மதிக்கப்படும் தகுதியுடையவர்கள்.  இவ் வுயர்ந்தோர் வழியே ஏனையோர் செல்லுதல் வேண்டும் என்பது பழந்தமிழர் கொள்கை.

உயர்ந்தோர் வழக்குத்தான் உலக வழக்காகக் கருதப்பட்டது.  உலக நிகழ்ச்சியை இயக்க வேண்டியவர்கள் உயர்ந்தோர்களே என எண்ணினர்.

வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட் டாக லான”   (தொல்காப்பியம், பொருளதிகாரம், 647)

என ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் உரைத்துள்ளார். உயர்ந்தோரை மதித்து அவர்வழி இயங்கும்  நாடுதான் எல்லா வகையாலும் சிறப்புற்று இயங்கும்,  சங்க காலத் தமிழகம் பல்வகையானும் சிறப்புற்று விளங்கியமைக்குக் காரணம் அக்காலத்தில் சான்றோர்கள் நன்கு மக்களை நடத்திச் சென்றமையே யாகும்.

ஏனைய நாடுகளில் புலவர்கள் மெய்யுணர்வுக் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும் மெய்யுணர்வாளர்களிற் பெரும்பான்மையினர் புலவர்களாய் இருந்ததில்லை.  ஈங்கோ எனின் மெய்யுணர்வாளர்கள் அனைவரும் பெரும் புலவர்களாகவும் விளங்கியுள்ளனர்.  சாக்கிரடீசு, புத்தர், இயேசு, மகம்மது முதலிய மெய்யுணர்வுப் பெரியார்கள் மொழித்துறைப் புலமையற்றவர்களே. ஆனால், தமிழ்நாட்டு மெய்யுணர்வாளராம் திருவள்ளுவர் மொழித்துறைப் புலமைமிக்க முதுபெரும் புலவருமாவார்.  தாம் உலகுக்கு அறிவிக்க விரும்பிய வாழ்வியல் உண்மைகளை இனிய குறள் வெண்பாவால் எடுத்துரைத்தார்.  உலகோர் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாய் உள்ள தாசுமகால் எனும் கவினுறு கட்டடத்தில் ஒரு கல்லை அகற்றிவிட்டு அவ்விடத்தில் வேறொரு கல்லைப் பொருத்தி, எடுத்ததும் வைத்ததும் அறிய இயலாதவாறு செய்துவிடலாம்.  ஆனால், திட்ப நுட்பம் செறிந்த திருக்குறளில் ஓரசையையோ சீரையோ மாற்றி அமைத்துப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்தல் இயலாது.  யாப்பமைதியானும், உவம நலத்தானும், பொருட் சிறப்பானும் திருக்குறள் சிறந்த இலக்கியமாகவும் கருதத்தகும்  நிலையை அடைந்துள்ளமையால் திருவள்ளுவரைப் பெரும்புலவர்களுள் ஒருவராகவே கருதி, சாக்கிரடீசு, இயேசு முதலிய மெய்யுணர்வாளர் குழுவினுள் ஒருவராக மதிக்கத் தவறிவிட்டனர் உலகோர்.  ஆனால், ஏனைய உலக மெய்யுணர்வாளர்கள் எல்லாரும் அவரவர் காலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்பவே வாழ்வியல் உண்மைகளைக் கூறியிருப்பவும், திருவள்ளுவர் எக்காலத்துக்கும் எந்நாட்டுக்கும் ஏற்பவே கூறியுள்ளார்.  பிறநாட்டு மெய்யுணர்வாளர்களைப் பின்பற்றியோர் தனித்தனி மதத்தினராக வேறுபடும் நிலையை அடைந்து மதப் பூசல்கள் தோன்றுவதற்குரிய வாழ்வினராய் விட்டனர்.  ஆனால்,  திருவள்ளுவரைப் பின்பற்றுவோர் உலக மன்பதைக்குரியோராய் ஒன்றுபட்டு வாழும் நெறியினராய் இலங்குவர்.  ஆதலின், திருவள்ளுவரே நாடு,மொழி, இனம், சமயம் கடந்த உலக மெய்யுளர்வாளராகக் கொள்ளத்தகும் பெருமைக்கும் தகுதிக்கும் உரியவராவார்.

தொல்காப்பியர்க்கும் திருவள்ளுவர்க்கும் மிக மிக முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்வியல் பற்றிய உண்மைகளைப் பழந்தமிழர் பகுத்தறிந்துள்ளனர். அறநெறியில் பொருளை ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்தலே தமிழர் கண்ட வாழ்வியல் உண்மையாகும். அறம் பொருள் இன்பம் எனும் மூன்றுமே மும்முதற் பொருள் எனப்பட்டன. இவ் வுண்மைகளை மக்களுக்கு விளக்கவே இலக்கியங்கள் இயற்றப்பட வேண்டும் என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

“அந்நிலை மருங்கின் அறம் முத லாகிய

 மும்முதற் பொருட்கும் உரிய என்ப”      (தொல்.பொ.418)

பொதுவாகவன்றிச் சிறப்பினால் எவரேனும் ஒருவர்க்கோ பலர்க்கோ வாழ்வியல் உண்மைகளை அறிவிக்கப் பாடப்படும் பாடல்கள் புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ எனப்படும் எனக் கூறி, அவை இயற்றுவதற்குரிய இலக்கணமும் ஆசிரியர் கூறியுள்ளார். இவற்றால் ‘இலக்கியம்’ என்பது மெய்யுணர்வுக் கருத்துகளை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டுமென்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கருத்தாகும் என்று தெளியலாம்.  அன்றியும் தொல்காப்பியப் பொருட்படலத்தில் வந்துள்ள காஞ்சித்திணை உலகியல் மெய்யுணர்வுக் கொள்கைகளை உரைக்கும் இலக்கியம்பற்றியதாகும்.  காஞ்சி யென்பது உலக நிலையாமையைக் குறித்து வருவதாகும்.

“பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்

 நில்லா வுலகம் புல்லிய நெறித்தே”                                         (தொல்.பொ.78)

என்பதே அதன் இலக்கணம்.  உலகம் நிலையற்றது என்று அறிவுறுத்தியது  உலக வாழ்வில்  வெறுப்புக்  கொள்வதற்காக அன்று; அதை விரும்பி  நன்முறையில் வாழ்ந்து மறைய வேண்டும் என்பதற்காகவே யாகும். இந்நிலையாமை உணர்வு நாள்தோறும் சோம்பரின்றிக் கடனாற்றவும், செயற்கரும் செயல்களை  விரைந்து செய்யவும், கிடைத்தவற்றை உரிய காலத்தில் தானும் துய்த்துப் பிறர்க்கும் உதவவும் பெருந்துணை புரியுமன்றோ?

திருக்குறள், தொல்காப்பியத்தைப் பின்பற்றி வாழ்வியல் உண்மைகளை உணர்த்தவே எழுந்ததாகும் என்பது வெளிப்படை. உலகில் தோன்றிய பெரியார்கள் எல்லாரும் “வாழ்வே துன்பமானது; அதனின்றும் கடைத்தேறுவதற்கு முயல்வதே பிறந்ததன் பயன்” என்று அறிவுறுத்தினர்.  ஆனால், திருவள்ளுவர்தாம் “வாழ்வு இன்பமானது; அது வாழ்வதற்குரியது” என்று கட்டுரைத்தார்.  திருக்குறளைச் செருமானிய மொழிபெயர்ப்பில் கற்றறிந்த பேரறிஞர் ஆல்பர்ட்டு சுவிட்சர் என்பவர் இதனைச் சுட்டிக்காட்டி, “இது போன்றதொரு உயர்பேருண்மைகளைக் கொண்டதொரு மெய்யுணர்வுத் தொகுப்பு உலக  இலக்கியங்களில் காண்பதரிது” எனத் தம் “இந்திய எண்ணமும் அதன் வளர்ச்சியும்”  (ஐனேயைn கூhடிரபாவ யனே ஐவள னுநஎநடடியீஅநவே ) எனும் நூலில் பாராட்டிக் கூறியுள்ளார்.  திருக்குறளாம் மெய்யுணர்வு நூலைத் தமிழர் பெற்றிருப்பதனால்தான் தமிழர்க்குப் பெருமை என்பதனை “வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” எனும் பாரதியார் புகழுரையால் அறியலாகும். திருக்குறளுக்கு முன்னும் பின்னும் தோன்றிய சங்க இலக்கியங்களுள், பல மெய்யுணர்வுக் கொள்கைகள் ஆங்காங்கு இலைமறை காய்போல் பொதிந்து கிடக்கின்றன. 

இவ் வுலகு நாடக மேடை போன்றது.  அதில் வாழும் மக்கள் நடிகர்கள் ஆவார்கள்.  நாடக மேடையில் நடிகர்கள் தாம் கொண்டுள்ள கோலத்திற்கேற்ப நடித்துவிட்டு மறைவது போன்று மக்களும் அவரவர் தோன்றியுள்ள நிலைக்கு ஏற்ப வாழ்ந்துவிட்டு மறைகின்றனர்.  மேடையில் திறம்பட நடிப்போர் சிறப்புறுவது போன்று உலக வாழ்விலும் திறம்படச் செயலாற்றுவோர் இசை பெறுகின்றனர்.  இவ் வுலகியல் உண்மையை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியைப் பாடுங்கால்,

‘விழவிற்

 கோடியர் நீர்மை போல முறை முறை

 ஆடுநர் கழியும்இவ் வுலகம்’                    (புறம்-29)

என்று குறிப்பிட்டுள்ளார்.

“உலகம் ஒன்றே; ஒன்றே உலகம்” என்னும் முழக்கம் இப்பொழுது எங்கும் முழங்குகிறது.  இதனை யாவரும் வரவேற்றுப் போற்றுகின்றனர்.  இக் கொள்கை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் தமிழரால் போற்றப்பட்டது.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”           (புறம்-192)

என்பதனை நோக்குமின்.

                இவ் வுலகம் நன்றாவதும் தீதாவதும் மக்களால்தாம் எனும் உண்மையை நன்கு அறிந்திருந்தனர்.

“நாடா கொன்றோ ; காடா கொன்றோ

 அவலா  கொன்றோ; மிசையா கொன்றோ

 எவ்வழி நல்லவர் ஆடவர்

 அவ்வழி நல்லை வாழிய நிலனே”          (புறம்-187)

உழைப்போரும் உயர்பண்புடையோரும் மிக்குள்ள இடம் எதுவாயினும் அது சிறந்து விளங்கும். உலகை நன்றாக்குதற்குரிய பொறுப்பினைப் பெண்டிரினும் ஆடவர்க்கே மிகுதியும் உரித்தாக்கியுள்ளது சிந்திக்கற்பாலது.  மகளிர் என்றும் நல்லவரே; ஆடவரைச் சார்ந்து உலகை எழிலாகவும் இன்பமாகவும் இருக்கத் தொண்டு புரிவோர். தலைமைப் பொறுப்பும் முன்னின்று செயல் புரியும் திறனும் கடமையும் பெரும்பான்மையும் ஆடவர்க்கே இயல்பாயமைந்த குணநலன்களாய் இருத்தலின் உலக நன்மை ஆடவரையே சார்ந்துள்ளது என்ற உண்மை வெளியிடப்பட்டுள்ளது போலும். உலகம் இன்பம் துன்பம் எனும் இரண்டிற்கும் நிலைக்களமாயது. அவரவர் உள நிலைக்கு ஏற்ப, வாழ்வு இன்பமாகவோ துன்பமாகவோ அமையும்.  இனிய நிகழ்ச்சிகள் தோன்றுங்கால் இன்பம் உறுவது போன்று துன்ப நிகழ்ச்சிகள் தோன்றுங்காலும் அவற்றுளும் இன்பம் காணும் இயல்பை உலகோர் பெற்றிட வேண்டும்.

“இன்னா தம்மஇவ் வுலகம்;

 இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே” 

(புறம்-194)

ஆதலின் துன்பத்தைக் கண்டு உலகை வெறுத்து விடுதல் கூடாது. அங்ஙனம் வெறுப்போர் உலகியல் அறியாதவரே யாவர்.

“இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

 நண்பகல் அமையமும் இரவும் போல” (அகம்-327)

உளவாகும் என்பதனைச் சங்ககாலத் தமிழர் அறிந்து வாழ்ந்தனர்.

உலக வாழ்வுக்கு உயிர் போன்றது செல்வம்.  செல்

வத்தை வெறுக்கும் கொள்கைகளை உடையோரும் செல்வமின்றி வாழ முடியாது என்று அறிந்து செல்வத்தைத் தேடிக்கொண்டே வாயினால் வெறுத்துக் கொண்டிருப்பர்.  பொருள்நிலை அடிப்படையில்தான் உலகியல் வாழ்வு முறைகள் அமைகின்றன என்பதை யாராலும் மறுத்தல் இயலாது.  இதனைச் சங்ககாலத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர்.    

“அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்

 பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்

 பொருளி னாகும்”         (அகம்-155)                        

எனப் பொருளைப் போற்றினர்.  மக்கள் அறநெறி கோடித் தீய வழிகளில் செல்வதற்கும், பிறரிடம் அடிமையாவதற்கும் பொருளின்மையே காரணம் என்று தெளிவாக உரைத்திருப்பது இக்காலப் பொருள் நூலார் கோட்பாட்டுக்கு ஒத்ததாக அன்றோ உளது.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்