(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 15

2. ஒளவையார் (தொடர்ச்சி)


இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று. அதிகன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை அதன்கண் அவர் சொல்லோவியமாக்கிக் காட்டும் திறன் என்றென்றும் நம் கருத்தை விட்டு அகலா வண்ணம் நிலை பெற்று விளங்குகிறது.

போர்க்களத்தில் கடும் போர் புரிந்துகொண்டிருந்தான் அதிகமான். அவ்வமயம் அவனுக்குத் தவமகன் பிறந்தான். வெற்றியுடன் போர் புரியும் வேளையில் இச் செய்தி அவனுக்கு எட்டியது. தன் குல விளக்காய்த் தோன்றிய தவமகன் திருமுகத்தைப் போய்க் காண அவன் கால்கள் விரைந்தன. அவன் தன் போர்க் கோலத்தையும் களைந்தானில்லை. கையிலே வேல்; காலிலே வீரக்கழல்; உடம்பிலே வியர்வை; கழுத்தில் அம்புகள் பாய்ந்த ஈரம் புலராப் பசும்புண்கள்-இத்தோற்றத்தோடு தன் தவமகனை-செல்வக் களஞ்சியத்தைப் போய்க்கண்டான். ஆனால், அந்நிலையிலும்-மாலை மதிய மனைய பால் ஒழுகும் மைந்தன் முகங்கண்ட நேரத்திலும் பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடி ஒன்னாரை வெகுண்டு பார்த்த கண்கள் தம் சிவப்பு மாறவில்லை. இந்நிலை கண்ட ஒளவையார், தன் அன்புச் செல்வத்தைக் கண்ட நேரத்திலும் மனம் ஆறிக் கண் குளிராத சினமுடைய அதிகமானது மனநிலையை எண்ணி எண்ணிப் பாடுகிறார் :

‘கையது வேலே , காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே! அன்னோ!
உய்ந்தன ரல்லரிவன் உடற்றி யோரே!
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே!’         (புறநானூறு. 100)

இவ்வாறு இரவலர்க்குக் கருணை நிலவாய் இகல் வேந்தர்க்கு வெங்கதிராய் விளங்கிய அதிகமானின் சிறப்புக்களையெல்லாம் செந்தமிழ்க் கவிதைகளால் பாடிப்பாடி மகிழ்ந்தார் ஒளவையார். அவற்றையெல்லாம் நாளும் செவிமடுத்திருந்த அதிகமானும் “காடும் மலையும் கலந் துறையும் நாட்டைப் பெற்றதினும் வயப்புலியனேய வாள் வீரம் மிக்க ஆயிரம் ஆயிரம் மழவர்களடங்கிய படையைப் பெற்றதினும், களம் பல புகுந்து வலம் பல கொண்டதினும், இணையிலா வீரன் என்று எங்கும் பரவிய இசையினும் பெரும்பேறன்றோ ஒளவைப் பிராட்டியாரின் திருவாயால் புகழ் பெறும் பெரும்பேறு?” என எண்ணி மகிழ்ந்து இன்பக் கடலில் ஆடியிருந்தான்.

இந்நிலையில் அதிகமானின் வாழ்வில் துன்ப இருள் படியலாயிற்று; போர் மேகங்கள் குமுறிக்கொண்டு சூழலாயின. தன் தலை நகரைப் பாழாக்கிய அதிகமானது நாட்டையும் வாழ்வையும் பாழாக்க, கரவுடை அரவு போல அற்றம் நோக்கியிருந்தான் மலையமான். தன் நாடும் நகரமும் அழிந்து சுடுகாடான காட்சி அவன் நெஞ்சில் நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்தது. இயற்கையும் கால மெனும் கடுங்காற்றுக்கொண்டு அந்நெருப்பை ஊதித் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டது.

மலையமான் எவ்வாறேனும் அதிகமானை வென்று தன் நாட்டையும் நகரையும் பெறக்கருதிச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைத் தனக்குத் துணை நிற்க வேண்டினான். அவனும் அதற்கு ஒருப்பட்டுக் கடை யெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கிய வல்வில் ஒரியின் ‘பயங்கெழு கொல்லியினை’முதற்கண் பொருது கொள்ள எண்ணங்கொண்டான். மலையமானும் அதற்கு இசைந்து கொல்லி மலையை முற்றுகையிட்டான். அச்செய்தி யறிந்த ‘குறும்பொறை நன்னாடு கோடியர்க்’கீந்து குன்றாப் புகழ்படைத்திருந்த ‘ஓங்கிருங்கொல்லிப் பொருநன்’ தன் ஓரிக்குதிரைமீதேறிப் போர்க்களம் நோக்கிப் பாய்ந்தான். சேரன் துணைக்கொண்டு வந்த ‘ஒள்வாள் மலையன்’ படையும், வல்வில் ஒரிதன் தானையும் ஒன்றோடொன்று மோதின. குருதி வெள்ளம் ஆறாய்ப் பெருகிற்று. காரிக் குதிரைக் காரியொடு ஓரிக்குதிரை ஓரி இடியொடு இடி தாக்கினாலென மோதி மலைந்து காலனும் அஞ்சக் கடும் போர் உடற்றினான். கொல்லிக் கூற்றத்தின் தலைவன் உயிரைத் துரும்பென மதித்துத் தன் கண்ணான நாட்டைக் காக்க மாற்றார் படை கலக்கி-மனம் கலக்கிப் போர் புரிந்தான். ஆனால், அந்தோ! அவன் ஈர நெஞ்சில் கூர்வேலொன்று ஆழப் பாய்ந்து அவன் இன்னுயிர் குடித்தது. சாய்ந்தான் ஓரி. அவன் நாடும் மலையும் அவலமுற்றன; கூத்தரும் பாணரும் குமுறி அழுதனர். கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறையின் சீற்றத்துக்கு இரையாயிற்று.

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஒரிக் கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’         (அகநானூறு. 209)

என வரும் நெடுந்தொகை அடிகளும் பிற சங்கப்பாடல்களும்[1] இவ்வரலாற்றுச் செய்தியை வலியுறுத்தும்.

மலையமான் ஓரியைக் கொன்று அவன் ஊரைப் பாழாக்கினான். ஆயினும், அவன் உள்ளம் அமைதி அடையவில்லை. தன்னை வென்று தன் தலை நகரையும் அழித்தவனை அழிக்கவே அவன் உள்ளம் விரும்பியது. ‘ஓங்கிருங் கொல்லி’யை அதன் தலைவனைக் கொன்று பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் காணிக்கையாக்கி அவன் உள்ளம் உவக்கச் செய்தான் காரி. தான் பெற்ற காணிக்கையால் புகழ் வெறியும் போர் வெறியும் கொண்டான் சேரன்; தன்னை மகிழ்வித்த மலையமான் மனம் குளிரத் தகடூரை அழிக்கத் துணிந்தான். சேரனுடன் காரி வஞ்சம் தீர்க்கச் சீறி வரும் செய்தி அறிந்தான் அதிகமான்; தன் நட்பிற்குரிய இருபெருவேந்தரையும் துணைக்கு அழைத்தான்; ‘அரவக்கடல் தானை அதிகன்’ வேண்டுகோட்கிசைந்த அவர்கள் பெரும்படை திரட்டி வரும் வரையில் தன் தலை நகராம் தகடூரிலேயே அரணடைத்து உள்ளிருந்தான். அவன் மழவர் படை கடியரண்களைக் காத்து நின்றது. சேரன் படையும், மலையமான் படையும், ‘வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில்’ தகடூரை முற்றுகையிட்டன.
———
[1]. அகம். 208, நற்றிணை. 320.
———–

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்