தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன்
தமிழின்பம் தனி இன்பம் 1/3
வள்ளுவப் பெருந்தகை, தமிழ் இன்பம் எத்தகையது என்பதை ஓர் உவமை வாயிலாக விளக்கிக் காட்டுகிறார். பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு எப்படிப்பட்ட இன்பம் தரும்? படிக்கப் படிக்கச் சிறந்த நூல்கள் தரும் உள்ளார்ந்த இன்பம் போலப் பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு இன்பம் தரும் என்று கூறுகிறார். முதல்முறை படிக்குங்கால் ஒருவகையின்பம்; மறுமுறை படிக்குங் கால் வேறுவகையான இன்பம்; அடுத்தமுறை படிக்குங்கால் அதனினும் சிறந்த இன்பம். இவ்வாறு பயிலப் பயிலப் புதுப்புது இன்பம் வளர்ந்து கொண்டே இருக்கும்.
“நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு” (குறள் – 783)
‘தமிழ்விடுதூது’ எனப் பெயர்தாங்கிய இனிய நூலொன் றுளது. அதன் ஆசிரியர் அந் நூலுள் ஓரிடத்தில்,
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று கூறுகிறார். இமையோர் விருந்தமிழ்தம் எல்லார்க்கும் கிடைப்ப தன்று; எளிதாகவும் கிடைப்பதன்று; சாவா மருந்தெனப் புகழப் படுவதும் ஆகும். ‘அந்த அமிழ்து கிடைப்பினும் அதனை நான் விரும்பேன்’ என்று கூறுகிறார். ஏன்? அதனினும் சிறந்த தமிழ் இருக்கிறது; அதனாலேயே நான் உயிரோடிருக்கிறேன் என்று கூறுவ தால் தமிழ்தரும் இன்பத்தின் மேன்மையைத் தெள்ளிதின் உணரலாம்.
தமிழ், தமிழ் என்று பலமுறை அடுக்கியடுக்கிச் சொல்லிப் பார்த்தால் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கும். ஆகவே தமிழ் இனிமையானது; இன்பந் தரவல்லது என்பது புலனாகும். இதன் இனிமையையும் இன்பத்தையும் உணர்ந்தமையாலேதான் நம் பாரதியார்.
“தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
ஈங்கமரர் சிறப்புக் கண்டார்”
என்று பாடுகின்றார். தமிழை அமுதென்றும் அதன் சுவையறிந் தோர் அமரர் போல வாழ்வர் என்றும் கூறுகின்றார். “தமிழுக்கும் அமுதென்று பேர்” எனப் பாவேந்தர் பாரதிதாசனும் கூறுகிறார்.
“ஆயுந் தொறுந்தொறும் இன்பந்தருந்தமிழ்”
என்று பிறிதொரு சான்றோர் மொழியும் உண்டு. தமிழ் இன்பம் தரவல்லதுதான். எனினும் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் புதுவகை யான இன்பம் தரும் என்கிறார்.
ஏட்டுச் சுவடிகளை அலைந்தலைந்து, தேடித் தேடித் துருவி ஆராய்ந்து பழம்பெரும் நூல்களைப் பதிப்பித்து, அச் செல்வங்களை நமக்களித்து மகிழ்ந்து, தமிழ்த்தாத்தாவெனப் போற்றப்பட்ட உ.வே. சாமிநாதையர் அவர்கள், தாம் பதிப்பித்த பதிற்றுப்பத்து என்னும் நூலின் முகவுரையில் தமிழ்நூல்களால் தாம் பெற்ற இன்பத்தைக் குறிப்பிடுகின்றார். “இத்தகைய நூல்களோடு பழகுகையில் எனக்கு ஊக்கமும், உலகத்தை மறந்து விடும் நிலையும் உண்டாகின்றன. நூலை விட்டு என் கண்களை எடுத்து நோக்கினால் உலகமும் என் தளர்ச்சியும் புலனா கின்றன” எனக் குறிப்பிடுகின்றார். உலகை மறந்துவிடும் நிலை எப்பொழுது ஏற்படும்? இன்பக் களிப்பில் திளைக்கும் பொழு தன்றோ? தளர்ச்சி எப்பொழுது நீங்கும்? மகிழ்ச்சிப் பெருக் காலன்றோ? தமிழ் இன்பந்தரும் இயல்பினது; துன்பந் துடைக்க வல்லது என்பதை மெய்ப்பிக்க இதனினும் சிறந்த சான்று வேறுளதோ?
(தொடரும்)
-கவியரசர் முடியரசன்
Leave a Reply