S.Ilakkuvanar+10

  ‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்.

  கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர் இலக்குவனாரிடம் அக்காலத்தில் தமிழ் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப் பதிவை ‘ஆசர்’ என்று மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி ‘உள்ளேன் ஐயா’ எனக் கூறவைத்த பெருமைக்குரியவர் சி. இலக்குவனார் அவர்கள்தான். பிற்காலத்தில் தமிழமெங்கும் இம்மாற்றம் ஏற்படுவதற்கு முன்னோடி அவரே என்கிறார் இரா. நல்லகண்ணு.

  தனித்தமிழ், தமிழ் உணர்வு என்று இலக்குவனார் தீவிரமாக இருந்ததில் உடன் பணியாற்றிய பலருக்கு ஏற்பிருக்கவில்லை. சிலர் இலக்குவனாரைத் தமது எதிரியாகவும் கருதினர். ஆனால் இலக்குவனார் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு. ‘தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் தமது ஆய்வுநூலை ஆங்கிலத்தில் அளித்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். தொடர்ந்து 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ. செந்திற்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்தார். அரசியல் காரணங்களால் அவர் அப்பணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடர்ந்து திருவெறும்பூர், புதுக்கோட்டை, ஈரோடு, நாகர்கோவில் என்று சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றினார். ஆனால் எதுவும் அவரது தீவிரத் தமிழ்ப்பற்று காரணமாக நிலையானதாக இருக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியது, அவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.

  பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார் இலக்குவனார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எனப் போற்றப்பட்ட அக்கல்லூரியில் அவர் பணிபுரிந்த காலம் அவரது வாழ்வின் பொற்காலம். தமிழறிஞர்கள் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை. அ.கி.பரந்தாமனார் போன்றோரின் நட்பு அவருக்கு ஊக்கத்தைத் தந்தது. மீ. இராசேந்திரன் (மீரா), முகமது மேத்தா (மு.மேத்தா), இன்குலாப் (சாகுல் அமீது), அப்துல் இரகுமான் போன்றோர் இப்பேராசியர்களின் அன்பிற்குகந்த மாணவர்களாக விளங்கினர். ‘தமிழ்க்காப்புக் கழகம்’ என்பதனை நிறுவித் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட இலக்குவனார், விளம்பரப் பலகைகளில் தமிழே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

  தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது. தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, விரிவாக ஆய்வு நிகழ்த்தி, தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை அளித்தார். 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார். மேனாட்டவரும் போற்றும் விதத்தில் அவர் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருந்ததால, அறிஞர்கள் பலரிடமிருந்து பாராட்டுகள் குவிந்ததுடன். தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கும் அழைக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.

 “இலக்குவனார் தமிழார்வம் மிக்கவர்; தாய்மொழியாகிய தமிழின் வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி அமைதல் வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர்” என்கிறார் பேராசிரியர் முனைவர் மு.வ.. அதற்கேற்றவாறு, கல்வித்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை போன்ற அரசின் பல துறைகளில் தமிழ் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில். ‘தமிழ் உரிமைப் பெருநடைத் திட்டம்’ என்ற ஒன்றை உருவாக்கினார் இலக்குவனார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பெற்றார். பின் பணிநீக்கமும் செய்யப் பெற்றார். சிறை சென்று மீண்டு வந்த பின்னர், ஆட்சி மாறிய பின்பு சென்னை மாநிலக் கல்லூரியில் ஓராண்டுக் காலம் முதுநிலைப் பேராசிரியாராகப் பணியாற்றினார். ஆனால் அங்கும் சிக்கல் தொடர்ந்து, கல்வியமைச்சருடன் ஏற்பட்ட பிணக்கினால் அவருக்குப் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. பின்னர் ஐதரபாத்து உசுமானியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து. பின் மீண்டும் நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

  இந்தி எதிர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர் இலக்குவனார். மாலை நேரத்தில் மன்றங்களின் மூலம் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் குறித்த இலவச வகுப்புகளை நடத்தினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும, தம் கைக்காசைக் கொண்டு இதழ்கள் நடத்தியும் தமிழ் உணர்வு நிலைபெற உழைத்தார்.

  மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற ஒரே பேராசிரியர், இலக்குவனார்தான். ‘தன்மானத் தமிழ் மறவர்’ என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார். ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ‘குறள்நெறி’ போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். அதே சமயம் தமிழின் தொன்மையைப், பண்பாட்டுச் சிறப்பை, அகப்பொருள் ஒழுக்கங்களை உலகுக்குப் பறைசாற்றும் முகமாக ஆங்கில இதழ்கள் இரண்டையும் வெளியிட்டார். அக்காலத்திலேயே தமிழில் ஆறு இதழ்களையும். ஆங்கிலத்தில் எட்டு இதழ்களையும் இவர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை எழுதிய இலக்குவனார், தொல்காப்பிய விளக்கம், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர், எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், தமிழன்னைக் காவியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பிக்கும் முறை, தமிழிசைப்பாடல்கள், என் வாழ்க்கைப் போர் போன்ற பல கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார். போராட்ட வாழ்வு, ஓய்வின்மை, பணி நிமித்தமாக அடிக்கடி குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தது போன்ற காரணங்களால் அடிக்கடி இலக்குவனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது; நீரிழிவு நோயும் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தும் குணமாகாமல் 1973 செப்டம்பர் 3 ஆம் நாள் இலக்குவனார் காலமானார். தமிழும் தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் எனில் மிகையல்ல.

-பா.சு. இரமணன்

தென்றல் – இணைய இதழ்-தொகுதி : 10 – இதழ் 5-ஏப்ரல் 2010