“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!

  மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில்   ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.

  1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை இந்நூலில் விவரித்து எழுதியுள்ளார்.

 பெண்ணியப்பதிப்பகமாக உருவாகியுள்ள மைத்திரி பதிப்பகம் தனது முதல் நூலாக இந்நூலை, வெளியிட்டது.

  இந்நிகழ்வில், தோழர் பிரேமா இரேவதி வரவேற்புரையாற்றினார். தோழர் வ. கீதா நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். இடதுசாரி இயக்கங்களில் வளரும் பெண்களின் துயரத்தை இந்நூல் சிறப்பாக வெளிக் கொணர்வதாக அவர் தெரிவித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் வே. வசந்தி தேவி, நூலை வெளியிட, திருவாட்டி அற்புதம் அம்மையார், திருச்சி வழக்கறிஞர் த. பானுமதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

  எழுத்தாளர் பா.சீவசுந்தரி, மா.இல.பொ.க.மக்கள் விடுதலைத் தோழர் இரமணி ஆகியோர் நூல் குறித்து திறனாய்வு செய்து உரையாற்றினர். தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்து பல நூல்கள் வந்துள்ள நிலையில், கடைநிலை ஊழியராக இயக்கப் பணியாற்றிய பெண்களின் வாழ்க்கை இந்நூலில் இயல்பாக – இலக்கிய வடிவத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தத்தம் திறனாய்வுரையில் அவர்கள் குறிப்பிட்டனர்.

  இந்நூல் தோழர் இலட்சுமி அம்மா வாழ்க்கையை மட்டும் படம்பிடிப்பதோடு அல்லாமல், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வரலாறு, தோழர் பெ. மணியரசன் – கி. வெங்கட்ராமன் ஆகியோரது எளிமையான வாழ்க்கை, போராட்டம் – நட்பு எனப் பலவற்றையும் அழகாகப் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் திறனாய்வு செய்தனர்.

  நிறைவில், தோழர் இலட்சுமி அம்மா ஏற்புரை வழங்கினார். தமது வாழ்வில் பல்வேறு இன்ப – துன்பங்களில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்து பேசிய தோழர் இலட்சுமி அம்மா, நிகழ்வின் முடிவில் அனைவரையும் மேடையேற்றி நூல்கள் வழங்கி நன்றி கூறினார்.

  தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் திரு. சி. சந்திரேசன், தமிழர் தேசிய முன்னணி மாநிலத் துணைத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பன், ஓவியர் கு. புகழேந்தி, இயக்குநர் வ. கௌதமன், ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், கவின் மலர் முதலான திரளான இன உணர்வாளர்கள் இதில் பங்கேற்றனர்.

தோழர் கிருட்டிணவேணி (மைத்திரி பதிப்பகம்) நன்றியுரையாற்றினார்.

செய்தித் தொடர்பகம்,

மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:

7373456737, 9486927540