தலைப்பு-தமிழில்லா அறமன்றம்-இதழுரை : thalaippu_thamizhillaa_aramandram_ithazhurai

தமிழில்லா அறமன்றம் யாருக்காக?  

நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா?

  தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள  அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே மு‌றையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே!

 தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு  348(2) இன்படி,  ஒரு மாநிலத்தின் ஆளுநர்,  குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று, இந்தி அல்லது பிற எந்த மொழியையும் உயர்நீதி மன்ற மொழியாக  அறிவிக்கலாம்.

  இது மட்டுமல்ல, வெவ்வேறு காலக்கட்டங்களிலும் இதே போல் மாநில மக்கள் மொழிகளில் உயர்நீதிமன்றம் அமையவேண்டியது குறித்துத் தொடர்பான குழுக்கள் கருத்து தெரிவித்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் முதலான அனைத்து நிலையிலும் மக்கள் மொழியிலான தமிழ் மொழியில் தான் நடைபெற வேண்டும் என்பது நம் அடிப்படை உரிமையாகும். 

  ஆனால், நம் எண்ணம்  ஈடேறவில்லை. தமிழக அரசு இதற்கான முயற்சி எடுத்தும் பயன்கிட்டவில்லை. உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டு உயர்நீதிமன்ற வழக்குமொழியாகத் தமிழை ஏற்கவில்லை என்ற கருத்தை மத்திய அரசு தெரிவித்த பொழுது   முதலமைச்சர் செயலலிதா தன் சார்பிலான உரையை அமைச்சர்  முனுசாமி மூலம் வாசிக்கச்செய்த  முதல்வர்  முதலமைச்சர்கள் -தலைமை நீதிபதிகள்  மாநாட்டுஉரையிலும்(2013) முதல்வர் பன்னீர்செல்வம் தில்லியில் நேரடியாக ஆற்றிய  இதுபோன்ற   மாநாட்டு உரையிலும்(2014) உயர்நீதிமன்றத்தில்  தமிழே வழக்குமொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் இதற்காகப் போராடுபவர்களைத் தங்கள் கருத்திற்கு வலிவூட்டப் போராடுகிறார்கள் என எண்ணாமல் ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டமாகப் பேராயக் கட்சியாகிய காங்கிரசுபோல எண்ணி ஒடுக்குவது முறையற்றது.

  தமிழஅரசின் கருத்து குடியரசுத்தலைவர் பரிந்துரைக்காகச் சென்ற பொழுது அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மண்ணின் மகன் என்பதையும மறந்து தமிழ்நாடு  உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதியின் கருத்தைக்கேட்டார்; அவரோ இப்போது ஏற்ற சமயமில்லை எனத்  தெரிவித்தமையால், பரிந்துரைக்கவில்லை.  தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக மக்களின் உணர்விற்கு எதிரான கருத்து தெரிவித்த தலைமைநீதிபதியையும் நாம் தூக்கி எறியவில்லை. தாய்மொழிக்கு எதிராகமுடிவெடுத்த அப்துல்கலாமிற்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை.

  மா.இலெ. பொ.க. – மக்கள் விடுதலை,  தமிழ்த்தேச மக்கள் கட்சி,  த.ஒ.வி.இயக்கம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு, தமிழ்நாடு வண்ணார் பேரவை, தியாகி இமானுவேல் பேரவை, பு.இ.மு, பு.மா.மு, தமிழர் தேசிய முன்னணி, தி.வி.க, த.பெ.தி.க, ஆதித் தமிழர் பேரவை, சாதி ஒழிப்பு முன்னணி, த.மு.ம.க, நாணல், அம்பேத்கர் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி  முதலான மிகப்பல அமைப்புகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழக்குரைஞர்கள், தமிழமைப்பினர் எனப் பல தரப்பாரும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி வேண்டிப் போராடி வருகின்றனர். ஆனால், எல்லாப்போராட்டங்களிலும் தமிழன்னைக்கு நீதி வேண்டுவோர்  காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றனர்.

  இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக இரண்டினைக் குறிப்பிடலாம். கடந்த  ஆண்டு(14.9.2015)  தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேணடி,  வழக்குரைஞர் பகத்சிங்கு தலைமையில் பல்வேறு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அறவழியில் வலியுறுத்தினர். அவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்வழக்காடு உரிமைக்காகவும் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செயய்  வேண்டியும், 16.9.2015 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை  வழக்குரைஞர்மன்றதத் தலைவர் பீட்டர்  இரமேசுகுமார் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.  இதற்காக பீட்டர்  இரமேசுகுமார்மீது நீதிமன்றம் வழக்கு தொடுத்தது; இதில், அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும் தண்டத்தொகையும்(அபராதமும்) இப்போது விதிக்கப்பட்டுள்ளன.

  தமிழில் உயர்நீதிமன்ற வழக்குகள் நடை பெற வேண்டும் என்ற கருத்துடைய தமிழக அரசு,  இதற்காகப்போராடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுப்பது ஏனென்றுதான் தெரியவில்லை. அரசின் கருத்தையே எதிரொலிக்கும் அமைப்புகள்,  வழக்கறிஞர்கள் முதலானோர் தததம் கருத்தை  வெளிப்படுத்த அமைதியான சூழலை ஏற்படுத்தித்தரலாமே! மாறாக, அவர்களை அடக்கித் துன்புறுத்துவது ஏன்?

எனவே, தமிழக அரசு

  1. தமிழுக்கு நீதி வேண்டிப் போராடுவோர் மீது உள்ள வழக்குகளைத்திரும்பப் பெறவேண்டும்.
  2. தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
  3. கீழமைவு நீதிமன்றங்கள்அனைத்திலும் தமிழ் முழுமையான நீதிமன்ற மொழியாக நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. சட்டத்திற்குப்புறம்பாக ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க விதிவிலக்கு அளித்த உயர்நீதிமன்றச் சுற்றறிக்கையைத் திரும்பப்பெற்று அவ்வாறு சுற்றறிக்கை அனுப்பிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  5. மேற்கோளாகக் காட்ட ஆங்கிலத்தீர்ப்புகளும் ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களுமே கருதிப் பார்க்கப்படவேண்டும் என்பதை மாற்றி, இவற்றின் மூலமொழிப்பதிவுகளே செல்லத்தக்கன என அறிவிக்க வேண்டும். இதன்படி மொழிபெயர்ப்புப்பிழையால் தவறான குறிப்பு இடம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ஆங்கிலத்தில் வெளியான சட்டங்கள் அ்ல்லது தீர்ப்புகள் எனில், அவையும் தமிழில் வெளிவந்தன எனில் தமிழ்ப்படிகளுமே செலலத்தக்கன என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், தமிழிலேயே வெளியிடப்படும் சட்டங்களும் தீர்ப்புகளும் சட்ட ஏற்பிற்கு உள்ளாகும்.
  6. முன்பு தீர்ப்புத்திரட்டு வந்ததுபோல், ஆங்கிலத்தில் உள் ள தீர்ப்புகள் தமிழில் வரவும் தமிழில் இல்லாச் சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும் தமிழில் மிகுதியான சட்ட நூல்கள் வெளிவரவும் சட்டக்கலைச்சொற்களஞ்சியம் வெளிவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  1. இவற்றின் அடிப்படையில், தமிழ் அறிந்தவர்மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அமர்த்தப்படவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
  1. உடனடியாக உயர்நீதிமன்ற வழக்குமொழியாகத்தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால், மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழையாமைப்போக்கைப் பின்பற்றும் எனவும் தெரிவிக்க வேண்டும்.

  இத்தகைய வேண்டுகோள்கள் மொழி வளர்ச்சிக்காக அல்ல! நம்   சட்டபூர்வமான குறைகளைக் களையவும் விரைவில் நீதிபெறவும் நமக்குள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவுமே!

அறத்தலைவர் செயத்தக்க அறமிந்நாள் தமிழ்காத்தல் அன்றோ? (பாவேந்தர் பாரதிதாசன்)

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 122, மாசி 16, 2047 / பிப்.28, 2016

Akaramuthala-Logo