bharathidasan04

 சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்?

ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார் பாரதிதாசன். தமிழைக் காலம்தோறும் இனிது ஆக்கியவர்களுள் பாரதியாருக்குப் பின் பாரதிதாசன் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இப்போது அவரது 125ஆம் ஆண்டு.

1891 ஏப்பிரல் 29-இல் கனகசபை – இலக்குமி அம்மாளுக்கு சுப்புரத்தினமாகப் பிறந்தவர்; கனகசுப்புரத்தினமாக இருந்தவர் 1895-இல் திருப்புளிசாமியிடம் எழுத்தமுது ஏற்றவர்; அதன்பின் புலவர்கள் பெரியசாமியிடமும் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண – இலக்கியம் மற்றும் சித்தாந்த வேதாந்தத் தத்துவ அமுதினை உண்டவர்; வேணு(நாயக்கர்) வீட்டுத் திருமணத்தில் பாரதியாரைச் சந்தித்தவர்’; பாரதியார் பாடல்களை அமுதாக்கிக்கொண்டு பாரதிதாசனாக மாறியவர்.

1909-இல் தமிழாசிரியரானவர்; பாரதியார், வ.வே.சு., அரவிந்தர் போன்றோருக்குப் புகலிட அமுதுதந்து ஆதரித்தவர்; பாரதியாரின் “இந்தியா’ ஏட்டை வெளியே தெரியாமல் அச்சிட்டு விடுதலைத்தாகத்திற்கு நீர் ஊற்றியவர்; ஆட்சியர் ஆசு துரையின் உயிரைப் பறிப்பதற்குத் துப்பாக்கி அனுப்பி, விடுதலை வேள்வியில் விடுதலைத் தீ பரவ அமுது வார்த்தவர்; பிரெஞ்சு அரசால் கைதாகி 15 மாதம் சிறையில் இருந்து உரிமை வென்றவர்; பெரியாருடன் இணைந்து சுயமரியாதைச் சுடருக்கு நெய் வார்த்தவர்; 1926-இல் “சிறீமயிலம் சுப்பிரமணியர் துதியமுது’ தந்தவர்; 1933-இல் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டு நிரந்தரமான நாத்திகன் ஆனவர்; தனி இதழ் தொடங்கி, கவிதை வளர்த்தவர்; புதுக்கோட்டையில் இருந்து குயில் (இதழ்) கூவச்செய்தவர்; சுதந்திர இந்தியாவில் 1948-இல் குயிலுக்குத் தடை பெற்றவர்.

நவீன தமிழ் இலக்கிய நாற்றாங்காலாக விளங்கிய மணிக்கொடியில் கவிதை எழுதிய திராவிட இயக்கச் சிந்தனையாளர்; திராவிட இயக்கம் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கும் முன்பாக 1955-இல் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக வென்று அவைத் தலைவராக இருந்தவர்; தமிழுக்கு அமுது தந்தவர்.

“அமுது’ என்பதற்கு உயிர்தரு மருந்து என்றும், நீர் என்றும், இனிமை என்றும் பொருளாம் (பிங்கலநிகண்டு). பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்று பேச்சு வழக்கையும் அமுது வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

மண்ணில் உயிர்கள் வாழ வானம் தரும் அமுது மழையாம். கடவுளுக்கும் அமுது படைக்கிறார்கள். “”வானோர் அமுதம் புரையுமால்” என்பது தொல்காப்பியம்.

தமிழ், உயிர்தரு மருந்தாக – அமுதாக இருக்கிறதென்று பாடி, தமிழுக்கு அமுதாகப் பாடல்களையும் இலக்கியங்களையும் படைத்துத் தந்திருக்கிறார் பாரதிதாசன்.

பாரதிதாசனைப் “புரட்சிக்கவிஞர்’ என்று பெரியார் பாராட்டி இருக்கிறார். 1946 சூலை 29-இல் “புரட்சிக்கவி’ என்று அண்ணா பாராட்டி இருக்கிறார்.

“பாரதிதாசன் கவிதைகள்’ முதல் தொகுதி 1938-இல் வெளிவந்துள்ளது. ஆனால், 1937-இல் பாரதிதாசன் எழுதிய “புரட்சிக்கவி’ என்ற நூலைத் துரைராசு வெளியிட்டிருக்கிறார். எனவே, 1937 முதலே புரட்சிக்கவியும் பாரதிதாசனும் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கலாம். இந்தியா விடுதலை அடையாத காலம். மன்னர் ஆட்சியைத் தூக்கி எறிந்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தும் புரட்சியைப் பாடியிருக்கிறார்.

இவ்வளவுக்கும் பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’, வடமொழி பில்கணீயத்தைத் தழுவி எழுதப்பட்டது. அரசன் மகளுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்ட கவிஞன் உதாரன், அரசன் மகளைக் காதலிக்கிறான். அரசன் கவிஞனைத் தண்டிக்க முற்படுகிறான். கவிஞன் தண்டனையிலிருந்து தப்பித்துக் காதலை வாழவைக்கிறான். பில்கணன் எழுதியதால் பில்கணீயம் என்று இந்தநூலுக்குப் பெயர். பில்கணன் கி.பி.11,12-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சம்க்கிருதப் புலவர். காசுமீரைச் சேர்ந்தவர். இராமேசுவரம் வரை வந்துபோயிருக்கிறார். ஆறாம் சாளுக்கிய விக்கிரமாதித்தன் அவைக்களப் புலவராக இருந்திருக்கிறார். சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடி இருக்கிறார்.

பில்கணரின் காவியத்தில் கவிஞனை அரசன் கழுவேற்றச் சொல்கிறான். கவிஞன் தனக்கும் அரசனின் மகளுக்குமான காதல் உறவைப் பற்றி 50 கவிதைகளைப் பாடுகிறான். கவிதையில் அரசன் மனம் மாறுகிறான். அந்தக் காதல் கவிதைகள் “செளரபஞ்சாசிகை’ என்று அழைக்கப்படுகிறது. செளரபஞ்சாசிகை என்றால், கள்ளக்காதல் என்று பொருளாம்.

பாரதிதாசன் ‘புரட்சிக்கவி’ என்று அதற்குப் பெயர்வைத்தார். காதல் கவிதையால் மன்னன் மனம் மாறியதாகப் பாடப்பட்டதை மாற்றினார்.

தமிழறிந்ததால் வேந்தன்எனை அழைத்தான்

தமிழ்க்கவி என்றுஎனை அவளும் காதலித்தாள்

அமுதுஎன்று சொல்லும் இந்தத்தமிழ் என்ஆவி

அழிவதற்குக் காரணமாய் இருந்தது என்று

சமுதாயம் நினைத்திடுமோ ஐயகோ! என்

தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?

உமைஒன்று வேண்டுகின்றேன், மாசில்லாத

உயர்தமிழை உயிர்என்று போற்றுமின்கள்!

 

மக்களிடம் முறையிடுகிறான்; மக்களை அரசனுக்கு எதிராக மாற்றுகிறான்; உயிர்போகும் நிலையிலும் தமிழுக்குப் பழிவர சகிக்காத மாந்தராகக் கவிஞன் உதாரனைப் பாரதிதாசன் படைத்துள்ளார்.

கவிஞன் உதாரனின் கவிதை உரையைக் கேட்டதும் பொது மக்கள் பொங்கி எழுகிறார்கள். மக்கள் புரட்சியைக் கண்டதும் மன்னன் அஞ்சி ஓடியதாகப் பாரதிதாசன் படைத்துக் காட்டி விடுதலை அடையாத இந்தியாவில் விடுதலைக்கும் உயிர்தருமருந்தாகத் தமிழமுது படைத்திருக்கிறார்.

பாவேந்தரின் புரட்சிக்கவி, தமிழுக்கும் அமுதாக இருக்கிறது.

ma.rasenthiran01– முனைவர் ம. இராசேந்திரன்

தினமணி ஏப்பிரல் 26, 2015