(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி)தலைப்பு-தமிழுக்கு ஒளிதந்த தமிழொளி-சேதுராமன் :thalaippu_thamizhukkuoli_thamizholi_sethuraman

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி  2 / 4

  1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளி வருவதா? ” என்ற அவரின் எண்ணம் தெரிய வந்தது. புலமைக் காழ்ப்பு பொறி பறந்ததைப் புரிந்து கொண்டார் தமிழ் ஒளி. வலிமைப் படைத்தவர்களை எதிர்க்க வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் பயணமானார்.

  புதுவைக் குயில்தோப்பில் கருக்கொண்டு எழுதிய கவிதைகள் பலவற்றைப் பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஆகிய இதழ்களில் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவுடைமை இயக்கத்தில் சேர்தல்

  மாணவப் பருவத்திலேயே பெரியாரின் தன்மதிப்பு(சுய மரியாதை)க் கருத்துகளில் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழ்ஒளி 1945-ஆம் ஆண்டில் பெரியாரின் தன்மதிப்பு இயக்கத்தில் ‘தீவிரக்கருஞ்சட்டை வீரராக’ இணைந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டில் விடுதலை நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுமாறு பெரியார் கூறியதை ஏற்க முடியாத நிலையில் தி.க.கொள்கையில் வெறுப்புற்று தோழர் ப. சீவானந்தம் அவர்களைச் சந்தித்துப் “பொதுவுடைமைக் கட்சியில்” தமிழ்ஒளி உறுப்பினராகச் சேர்ந்தார்.

  அந்தச் சமயத்தில்தான் பதினேழு வயது இளைஞரான எழுத்தாளர் செயகாந்தன் தமிழ்ஒளியைச் சந்தித்தார். இச்சந்திப்பே ஓர் அரிய சிறுகதை எழுத்தாளரைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்தது எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘செயகாந்தன் காலம்’, ‘செயகாந்தன் பாணி’ என்றெல்லாம் போற்றுமளவிற்குச் சிறுகதைகளைத் தமக்கே உரிய எதார்த்தமான பாணியில் எழுதி, புகழின் உச்சியில் நின்றவர் செயகாந்தன். இப்படிப்பட்ட உன்னதமான படைப்பாளி தமிழ்ஒளியின் இலக்கியப் பாசறையிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

  தமிழ்ஒளியால் தாம் வார்த்தெடுக்கப்பட்ட விதத்தை, “நான் தமிழ் இலக்கியப் பாடம் யாரிடமாவது முறையாக நெடுநாட்கள் பயின்றிருப்பேன் என்றால், அது தமிழ்ஒளி அவர்களிடம்தான். படிக்கிற விசயத்தில் எனது சனாதனத்தை மிகவும் கடுமையாக விமரிசனம் செய்வதோடு அன்றி, எத்தனையோ விசயங்களில் எனது கண்களைத் திறந்தவர் அவர்; பாரதியின் படைப்புகளையே தாண்டிவரக்கூடாது என்றிருந்த என்னை புதுமைப்பித்தன்வரை இழுத்து வந்தவர் தமிழ் ஒளிதான்” எனச் செயகாந்தன் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.

  தமிழ் ஒளி, தன்மதிப்பு இயக்கத்தில் இருந்தபோது எழுதியதைவிட, பொதுவுடைமைக்கு வந்தபிறகுதான் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் சென்னையின் பல்வேறு இடங்களில் கால்நடையாகவே சுற்றிவந்தார். குறிப்பாகச் சென்னை-வால் டாக்சு சாலையில் இருந்த பட்டறைகளை ஒட்டினாற்போன்று வசித்து வந்த கூலித் தொழிலாளிகளின் வாழ்வு அடிக்கடி இவரது கண்களில் பட்டது. வெய்யிலுக்கும்-மழைக்கும் பாதுகாப்பு இல்லாத அந்தக் குடிசைகளில், வாழ்வுக்கும் பாதுகாப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கைநிலை கவிஞரின் நெஞ்சை வருத்தியது.

  அதனால் தான் சென்னைக்கு வரும் போதெல்லாம் உழைக்கும் மக்களின் வாழிடங்களையே இவரது கால்கள் சுற்றிச்சுற்றி வந்தன. வருக்க எழுச்சியைத் தோற்றுவிக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் சென்னையே சிறந்த இடம் எனக் கருதியதால்தான் 1945-ஆம் ஆண்டு முதல் சென்னையிலேயே அவர் நிலையாகத் தங்கிவிட்டார்.

  ‘நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’ என்னும் மூன்று காவியங்களும் இவர் சென்னையில் நிலையாகத் தங்கிய காலத்தில் எழுதப்பட்டது எனலாம். தமிழ்ஒளி எழுதிய இந்த மூன்று நூல்களும் 1947-ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் வெளியாகித் தமிழ் ஒளியின் ‘இலக்கியப் போக்கை’ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தின.

  சென்னைக்கு வந்த தமிழ்ஒளி தாம் இறப்பதற்குச் சில நாள் முன்பு வரை தமது பெற்றோர்களைப் பார்ப்பதற்காகவோ, வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்காகவோ புதுவைக்கு செல்லவே இல்லை. அவருக்குக் குடும்பம் என்ற ஒன்றும் இல்லை; உறவினர்களையும் நாடவில்லை.

  கவிஞருக்குத் திருமணம் செய்து வைக்க(1948இல்) அவரது பெற்றோர்கள் விரும்பியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். தமது எண்ணங்களைப் புரிந்து நடக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தமது பெற்றோரால் தேர்ந்தெடுக்க முடியாது என்று கருதியதால் திருமணத்தை மறுத்தார்.

  சென்னையில் தனிமனிதனாக வாழ்ந்த தமிழ்ஒளி அதே சமயத்தில் தனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த வட்டத்தில், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், தொழிற்சங்கத் தோழர்கள்… எனப் பலரும் இருந்தனர். தற்போது வள்ளலார்நகர் என்று அழைக்கப்படும் தங்கச்சாலையிலும், திருவொற்றியூரிலும் பொதுவுடைமைக்கட்சித் தோழர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், அங்கெல்லாம் தமிழ்ஒளி தங்கினார். ஆனால், அவர் ஓரிடத்திலேயும் நிலைத்திருந்ததில்லை. அதேபோன்று பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தபோதிலும் எந்த ஒரு பத்திரிகையிலும் அவர் மாத ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை.

  • முனைவர் சி.சேதுராமன்,
  • இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
  • மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

மின்வரி: Malar.sethu@gmail.com

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61105088&format=print

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum