தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல்
தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா!
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்காப்புக்கழகத்தலைவர்
மறைந்த முதல்வர் செயலலிதா தமிழுக்கு முதன்மை அளித்தவர். ‘சிங்காரச் சென்னை’ என்பதை ‘எழில்மிகு சென்னை’ என மாற்றியவர்
கலைபண்பாட்டுத்துறையில் முத்தமிழ்க்கலையறிஞர்களின் நினைவு போற்றும் வகையில் நினைவில்லங்கள் எழுப்பும் திட்டம் அறிமுகமானது. இவற்றை நினைவில்லம் என்று அழைக்காமல் மறைந்த கலை ஆன்றோர்களின் புகழைப் போற்றுவதால் ‘புகழரங்கம்’ என்று அழைக்க வேண்டும் என்று கலைபண்பாட்டுத் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. துறைச் செயலர் இதற்கு உடன்படவில்லை. ஆனால் முதலமைச்சர் செயலலிதா “புதிய நல்ல தமிழ்ச்சொல்லாக உள்ளது; எனவே புகழரங்கம் என்றே அழைக்கவேண்டும்” என்றார். இதன்படி முதல்வர் தொல்காப்பியர் புகழரங்கம், இளங்கோவடிகள் புகழரங்கம், முதலான புகழரங்கங்கள் அமைக்க ஆணையிட்டார்.
கலை அமைப்புகள் பிற மொழிப்பெயர்களில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றன. எனவே, நல்ல தமிழில் கலை விருதுகளைக் கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று கலைண்பாட்டுத்துறை விரும்பியது.
கலை இள மணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன் மணி விருது, கலை முதுமணி என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து வகை விருதுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்ததும். நல்ல தமிழ்ப்பெயர்களில் விருதுகளின் பெயர்கள் உள்ளன. எனவே இவ்வாறே வழங்க வேண்டும் என்று ஏற்று ஆணை பிறப்பித்தார்.
(18 வயதும் அதற்கு உட்பட் கலைஞர்களுக்கு கலை இள மணி விருது; 19 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருது; 36 முதல் 50 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் மணி விருது; 51 முதல் 60 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன் மணி விருது; 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது.)
விளம்பரங்கள், முழக்கங்கள் ஆகியவற்றில் நல்ல தமிழ் வருவதை விரும்பினார். சான்றுக்கு ஒன்று. இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தும்பொழுது எவ்வாறு அதைக் குறிப்பிடலாம் என உணவுவழங்கல் துறையினரிடம் கருத்து கேட்டார்.
அப்போதைய உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் திரு மா.வீரசண்முகமணி, இ.ஆ.ப., தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். என்னிடம் ‘இல்லந்தோறும் இலவச அரிசி’ என்று பரிந்துரைக்க இருப்பதாகவும் வேறு ஏதும் சொல்லலாமா எனவும் கேட்டார்.
இலவசமாக வழங்குவதாகக் கூறி மக்களின் மதிப்பைக் குறைக்கக்கூடாது; ஆதலின் வீடுதோறும் விலையில்லா அரிசி எனச் சொல்லுமாறு தெரிவித்தேன். இவ்வாறு பிறரிடமும் கருத்துகேட்ட வகையில் அதன் செயலர் விலையில்லா அரிசி என்று சொல்வதை விரும்பவில்லை. ஆணையர் வற்புறுத்தியதால் அதனை 20 ஆவதாகக் குறிப்பிட்டு முதல்வர் செயலலிதாவின் பார்வைக்கு அனுப்பினார். அனைத்து முழக்கங்களையும் படித்துப் பார்த்தவர் விலையில்லாப் பொருள் வழங்குவதாகக்க் கூறுவதுதான், மக்களை மதிப்பதாகவும் உண்மையைக் கூறுவதாகவும் இருக்கிறது. எனவே, அவ்வாறே கூற வேண்டும் என்று ஆணையிட்டு விலையில்லா அரிசி என்பதுபோன்று இலவசப்பொருள்களை விலையில்லாப் பொருள்கள் என மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.
சட்ட மன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் விவாதத்தின்போது உறுப்பினர் ஒருவர் ‘cloud computing’ என்பது குறித்துத் தவறான சொல்லாட்சியைப் பயன்படுத்திய பொழுது அது குறித்து விளக்கித தமிழ்ச்சொல்லைக் கையாளுமாறு கூறினார்.
பொதுவாக செயலலிதா அவர்களிடம் இரு வகையான பெயர்கள் பரிந்துரைத்து அனுப்பப்பட்டால் தமிழ்ப்பெயருக்கே முதன்மை அளிப்பார்.
உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டிய அளவு நிதி அளித்துச் செயல்பட வைத்தது போன்ற பல்வேறு தமிழ்நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
சிலர் கருதுவதுபோல் தமிழுக்கு எதிராகச்செயல்படாமல் முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித்தலைவி பல்வேறு தமிழ் நலத்திட்டங்களைச் செயற்படுத்தி உள்ளார்.
அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல… தமிழ் உணர்வும்தான்!
(கட்டுரையாளர், தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்தவர்.)
– தமிழக அரசியல்: நாள் 10.10.2016 , பக்கங்கள் 36-37
ஒருவர் இறந்த பிறகுதான் அவரைப் பற்றிய நல்லவையெல்லாம் வெளிவருகின்றன. இருக்கும் வரை குறைகள் மட்டுமே பெரிதாய்த் தெரிகின்றன.
ஓ! ‘விலையில்லா’ என்கிற அந்தப் புதிய சொல்லைப் பரிந்துரைத்தவரே நீங்கள்தாமா ஐயா?