தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை
மாணாக்கர்களின் தமிழ் அறிவிற்கு வேராகவும் விழுதாகவும் இருக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை, மாணாக்கர்களிடம் இருந்து தமிழை விலக்கிக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் புதிய திட்டம் என்ற பெயரில் தமிழை அப்புறப்படுத்துவதையே பள்ளிக்கல்வித்துறை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
‘மொழி வாழ்த்து’ என்ற தலைப்பில் மாணாக்கர்களுக்குத் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறும். இப்பாடலால் தமிழ் உணர்வு பெற்றோர் மிகுதி. இப்பகுதியை நீக்குவதாகக் கூறிய பொழுது எதிர்த்ததற்கு மறுத்தார்கள். ஆனால், இறைவாழ்த்து, மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து என்று இருந்த பகுதிகளைப் பொதுவாக வாழ்த்து என்ற பெயரில் அடக்கி ஏதேனும் ஒரு வாழ்த்துப்பா மட்டும் இடம் பெறச்செய்து விட்டனர். இதனால் மொழி வாழ்த்தை அப்புறப்படுத்தித் தமிழைத் துரத்தினர்.
பாடங்களில் இருந்த திருக்குறள் பாடல்களை அதிகாரத்திற்கு 5 குறட்பாக்கள் என்ற முறையில் வைத்து அதிகார எண்ணிக்கையையும் குறைத்தார்கள். இப்பொழுது எதிர்ப்பு தெரிவித்த பின்னர் கீழ் வகுப்புகளில் ஓர் அதிகாரமும் 10 முதலான மேல் வகுப்புகளில் 2 அதிகாரங்களும் வைத்துள்ளனர். அனைத்து வகுப்புகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பால் இதுவும் நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும் திருக்குறள் தொடர்பான இன்றைய சரியான நிலைப்பாடு தெரியவில்லை.
11, 12 ஆம் வகுப்புகளில் மொழிப்பாடங்கள் இரு தாள்களாக இருந்தன. அவற்றை ஒரு தாளாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பொழுது அரசில் அவ்வாறில்லை என மழுப்பினர். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஒரு தாள்மட்டும்தான் பாடமுறையில் இடம் பெற்றுள்ளது. ஆழமான மொழிக்கல்வி மாணாக்கர்களின் பிற துறை அறிவுக்கும் தூணாக அமையும். ஆனால், இதனைப் புறக்கணித்துத் தமிழைப் புறக்கணித்தனர்.
இப்பொழுது 9, 10 ஆம் வகுப்புகளிலும் தொடங்க உள்ள இக்கல்வியாண்டு முதல் தமிழ்த்தாள்கள் இரண்டு என்பது நீக்கப்படுகின்றது. ஒரு தாள் மட்டும்தான். தட்டிக்கேட்க ஆளில்லாமல் கல்வித்துறை செயல்படுகிறது. ஆனால், மத்திய அரசு பாடத்தாள்களை ஐந்தாக வரையறுத்தும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாட முறை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது அல்லவா? அதன் விளைவுதான் இது. பா.ச.க அரசு தமிழக அரசு மூலமாகக் கல்வித்துறைக்குத் தெரிவிக்கிறது. கல்வித்துறை, ஏதோ கல்வி வல்லுநர்கள் கூறுவதுபோல் அதை நடைமுறைப்படுத்துகிறது.
மேலும், 11, 12 ஆம் வகுப்புகளில் ஏதேனும் ஒரு மொழியைப் படித்தால் போதும் என நடைமுறைப்படுத்தப் போவதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். அஃதாவது முதல் பிரிவில் தமிழ் அல்லது பிற மொழிகள் எனத் தமிழும் பிற மொழிகளும் பாடங்களாக உள்ளன. இரண்டாம் பிரிவில் ஆங்கிலம் பாடமாக உள்ளது. இனி, இவற்றுள் ஏதேனும் ஒரு மொழியைப் பாடமாகப் படித்தால் போதும் என விருப்பப்பாடமாக மாற்ற உள்ளனராம். இதனால் ஆங்கில மோகம் கொண்ட பெரும்பான்மையர் ஆங்கிலத்தைப் பாடமொழியாகத் தெரிவு செய்வர். சிறுபான்மையர் தங்கள் தாய் மொழியை விருப்பப்பாடமாக எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும் பிற மொழியினர் நான்காம் பிரிவில் தமிழ், ஆங்கிலம் தவிர உள்ள பிற மொழிப்பட்டியல்களில் இருந்து தத்தம் தாய் மொழியைத் தெரிவு செய்வர். இதனால் தமிழ் படிக்காமலேயே மேனிலைக்கல்வியை முடிப்பர். அரசைக் கேட்டால் அரசு பெற்றோர்கள், மாணாக்கர்கள் விருப்பம். அவர்களை எப்படிக் கட்டாயப்படுத்துவது என மழுப்புவர்.
ஒரே ஆண்டில் தமிழைக் கட்டாயப் பாடமாக வைக்காமல் ஆண்டுதோறும் தமிழை அறிமுகப்படுத்தி வந்தனர். ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம் என்னும் நிலையைக் கொண்டுவர வேண்டிய பொழுதில் அதற்கு விலக்கு அளித்து நீட்டிப்பு தந்து விட்டனர். அப்படி வந்து விட்டால் 11, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வந்து விடும். தொடக்க நிலையிலான சமக்கிருதம் முதலான பாடங்களை எடுத்து 100 மதிப்பெண் பெற இயலாது. எனவே, சூழ்ச்சி செய்து இப்போதைய பரிந்துரையை வழங்கியுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். தமிழை மறைமுகமாக நீக்கச் செய்யும் சதியாக இஃது உள்ளது என்பதில் ஐயமில்லை.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கட்டாயத் தமிழ்க்கல்வியை நடைமுறைப்படுத்தும் வேலையில் இங்ஙனம் புதிய கல்வித் திட்டம், கல்விச் சீரமைப்புத் திட்டம் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டு தமிழ்க்கல்வியை நிறுத்த கல்வித்துறை அதிகாரிகளே காரணமாக உள்ளனர்.
ஆங்கிலவழியில் படிப்பவர்கள் தமிழை அறிய வேண்டும். தமிழைக் கட்டாய முதல் பாடமாக மாற்றி இரண்டாம் பாடத்தில் ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் என மாற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் நெடுநாள் கோரிக்கை. அதனை நிறைவேற்றாமல் எதிராக அரசு செயல்படுவது மாணாக்கர்களின் கல்வி நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் 9,10,11,12 ஆகிய நான்கு வகுப்புகளுமே இன்றியமையாததாக உள்ளன. அவர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலத்தைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இங்கிலாந்தில் 15 அகவை வரை ஆங்கிலம் கட்டாயப்பாடம். (கணக்கும் கட்டாயப் பாடம்) அங்கே வகுப்பு நிலை என்றில்லாமல் அகவை நிலையில் தான் கல்வி உள்ளது. தங்கள் தாய்மொழியை இவ்விருநாட்டினர் மட்டுமல்லாமல் உலகில் ஏனைய நாடுகளும் கட்டாயமாக வைத்திருக்கும் பொழுது விடுதலை அடைந்து 71 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாய்மொழி அறியாத் தலை முறையினரை உருவாக்கி நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டுள்ளோம்.
சீனர்கள், உருசியர்கள், சப்பானியர் எனத் தங்கள் தாய்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தும் எல்லா நாடுகளும் முன்னேறி உள்ளன. நாம்தான் பின் தங்கி உள்ளோம். இன்னும் மோசமான நிலைக்குப் போகும் வகையில் தமிழ்வழிக் கல்வியை ஒழித்த பள்ளிக்கல்வித்துறை தமிழ் மொழிக் கல்வியையும் திட்டமிட்டுப் பகுதி பகுதியாக ஒழித்து வருகிறது.
பாடத்தாள்களைக் குறைப்பதால் பாடநூல்கள் அச்சடிப்பு, கூடுதல் ஆசிரியர் பணியிடம், தேர்வு தொடர்பான பல்வகைச் செலவுகள் எனப் பெருந்தொகை மிச்சம் ஆவதாகக் கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். இப்படிக் கூறுபவர்களை வீட்டிற்கு அனுப்பினால்கூடத்தான் அரசின் வருவாய் மிச்சமாகும். செய்யலாமா?
மாணாக்கர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அப்படி என்றால் கல்விக்கூடங்களே தேவையில்லையே! கல்வித்துறையும் தேவையில்லையே! ஆர்வமுடன் கற்கும் வகையில் கற்பிக்கும் முறையை மாற்றியும் மனஅழுத்தம் ஏற்பட்டால் அதனைப் போக்கியும் செயல்படவேண்டுமே தவிரப் பாடங்களைக் குறைப்பதும் நீக்குவதும் தீர்வாகாது.
மாணாக்கர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் தமிழ்வழிப் பள்ளிகளில் மாணாக்கர் எண்ணிக்கையைக் கூட்ட, நடவடிக்கை எடுக்க வில்லை. பள்ளிகளை இணைப்பதாகக் கூறித் தமிழ்வழிப்பள்ளிகளை மூடி வருகின்றனர். மேலும் தமிழ் வழிப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்தி அங்கும் தமிழை நீக்கி வருகின்றனர். இள மழலை, மழலை வகுப்புகளில் தமிழ் வழிச்செயல்பாடு இல்லாத வகையில் ஆங்கிலப் பெயர்களில் அறிமுகப்படுத்த உள்ளனர். கல்வித்துறையின் தமிழ்ப்பகைப் போக்கை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
கல்வி யமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு மாற்றும் திட்டம் அரசிற்கு இல்லை என்பதுபோல் பேசியுள்ளார். ஆழம் பார்க்கும் வகையில் புதியதிட்டம் குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தாலும் அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஆனால், இது போன்ற சூழல்களில் முதலில் இவ்வாறு கூறுவதும் பின்னர் அமைதியாக நடைமுறைப்படுத்துவதுமே வழக்கமாகப் போய்விட்டது. 11, 12 ஆம் வகுப்பு குறித்து மறுத்த அமைச்சர் 9, 10 ஆம் வகுப்பு குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லையே! எனவே, கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது என்பது உண்மையாகிறது. மேலும், பா.ச.க. திட்டம். நாடெங்கும் தாய்மொழிக்கல்விகளை நிறுத்தச் செய்வதன் மூலம் இந்தியையும் சமக்கிருதத்தையும் திணிக்கலாம் என்பதே!
மத்திய மாநில இடைக்கால அரசுகள் இதில் தீவிரமாக இருப்பது மக்களாட்சிக்கு எதிரானதாகும்.
தாய் மொழிக்கல்வியைப் புறக்கணித்து யாரும் வாழ்ந்ததில்லை
தாய்மொழிக்கல்வியால் யாரும் வீழ்ந்ததுமில்லை.
எனவே, தமிழக அரசு இதில் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும். தமிழைப் புறக்கணித்து எந்தக் கல்வித்திட்டத்தையும் அறிமுகப்படுத்த முனையக் கூடாது எனக் கல்வித்துறையினரை எச்சரிக்க வேண்டும். எல்லா வகுப்புகளிலும் தாய் மொழி வாழ்த்தைப் பாடமாக வைக்க வேண்டும். தமிழை எல்லா வகுப்புகளிலும் கட்டாயமாக வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மத்தியஅரசின் பாட முறை அல்லது பன்னாட்டுப்பள்ளி முறை என எத்தகைய முறையில் பள்ளிகள் செயல்பட்டாலும் மேனிலைப்பள்ளி முடிய தமிழ் மொழிக்கல்வி இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகளை அரசு மூட வேண்டும்.
தமிழைத் துரத்துவது அரசாக இருந்தாலும் சரி, கல்வித்துறையினராக இருந்தாலும் சரி, இதனால் தாங்கள் துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகிறோம்!
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை (திருவள்ளுவர், திருக்குறள் 652)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இந்தியை மட்டும் நீக்கிவிட்டு அப்படியே தமிழக கல்வி முறையில் வைத்தால் நடுவனரசு காப்புரிமை சட்டத்தை மீறி விட்டதாக வழக்கு போடுமா என்ன தமிழக மக்கள் சி பி எஸ் இ பாடத்திட்டத்தையே நாடுகின்றனர் ஆங்கிலம் போல் இனி இந்தி ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளதால் நீட் தேர்வு எழுதுமளவுக்கு மாணவர்களுக்கு நம்பிக்கை வரும்படி செய்ய வேண்டும்