தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள், தமிழ்த்துறைத் தலைவராகவும் துணை முதல்வராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிவியல் அறிஞர் கோ.து.(நாயுடு) அவர்கள். நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக அனுப்பப்படுவது நாட்டு வளத்திற்கு ஏற்றதென எண்ணி அவருக்குச் சார்பாகப் பரப்புரை மேற்கொண்டார். அவரை எதிர்த்த கருமவீரர் காமராசர் தமிழ் நாட்டை ஆளுவது நமக்கு நல்லதெனக் கூறி அவரை எதிர்த்து வேறு எதுவும் கூறினாரல்லர். இறுதியில் தேர்தலில் கருமவீரரே வெற்றி பெற்றாலும், நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு நாடாரை எதிர்த்தே பேசுவதா எனச் சாதிக் கண்ணோட்டத்துடன் கூறிப் பேராசிரியரைப் பணிநீக்கம் செய்தனர். ஆனால், கருமவீரரை எதிர்த்துப் பரப்புரை மேற்கொண்ட கல்லூரிச் செயலரை – அவர் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் – ஒன்றும் செய்யவில்லை. கல்லூரி தோற்றுவிக்கப்படும் பொழுது அதன் வளர்ச்சிக்குத் தேவை என அழைக்கப்பட்ட தமிழறிஞரை அவரது பணியால் சிறப்பு பெற்ற கல்லூரி நிருவாகம் சாதிக்கட்டால் நீதிக் கண்களை மறைத்துக் கொண்டு இவ்வநீதியை இழைத்தது. கல்லூரி மாணாக்கர்கள் மட்டுமின்றி ஊர் மக்கள் அனைவருமே திரண்டு எதிர்த்த போதும் சாதிச் செருக்கால் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.’எத்தகு இன்னல் நேரினும் தமிழ்ப் பணியாற்றுவதற்கு அஞ்சமாட்டேன்’ என்னும் உறுதிப்பாடு கொண்ட பேராசிரியர் அவர்கள், மன்பதைச் சூழலை நொந்த உள்ளத்துடன் விளக்குவதுதான் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் கவிதைப் படைப்பு. மரபுவழிச் செய்யுளாயினும் புதுக்கவிதை மரபையும் இதில் காண இயலும்.
‘‘சாதிகள் ஒழியச் சமரிடும் நாளில்
சாதிகள் பேரால் வாதிட வந்தனர்”
எனத் ‘துரத்தப்பட்டேன்’ பாநூலில் கவலைப்பட்டு,
‘‘உரிமை என்பதும் ஓர் குலம் என்பதும்
வெற்றுரை என்பதை விளக்கி விட்டனர்
சாதிகள் வேண்டா என்றே சாற்றி
சாதிகள் நலனே தன்நலன் ஆகக்
கடமைகள் ஆற்றும் கயமை ஈங்கு
என்று நீங்குமோ இருநிலம் உய்யவே”
எனக் கவலைப்படும் செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்,
‘‘சாதிப் பற்றே தழைத்துப் படரும்
மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க
அறநெறி கோடி அல்லது புரியும்
சாதிமுறைகள் சாகும் நாள் என்றோ”
எனக் ‘‘கருஞ்சட்டை என்பர்” என்னும் கவிதையிலும், இக்கவலையைப் புலப்படுத்தியுள்ளார். திராவிட ஆட்சிகள் தொடர்ந்தாலும் போலித் திராவிடமும் புகுந்தமையால், பேராசிரியர் ஏக்கம் இன்றும் தீரவில்லை. இதற்குத் தீர்வு,
‘‘நல்லறம் கொன்று நாட்டைக் கெடுத்து
அல்லது புரிந்துஅடிமையாகித்
தம்மினம்மறந்து தாழ்வுற்றழிவரா?
அன்றே! அவருரை கேண்மின்!”
எனப் பெரியார் வழிநிற்பதுதான் என்று அன்றே அவர் கூறியதை இன்றாவது நாம் பின்பற்றினால் நாளைய உலகாவது நன்கு விடியும்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply