(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி)

 pakuththarivukavignar_ilakkuvanar_thalaippu

 

4

  ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்னஎன்னும் தொடர் மக்கள் இடையே உலவினாலும் அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. உண்மையில் இவ்வரிகள் வால்மீகியால் இராமாயணத்தில் சொல்லப்பட்டதாகும். இராவணனின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் பின்வாங்கி ஓடும் வானரப் படையினர், தமக்குரியதல்லாத அயல்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் அயலவர் நாட்டுப் போரில் மாள வேண்டும் என்று நொந்து கூறியதாகும். இதனை, யார் ஆண்டால் என்ன என்று அலட்சியப்படுத்தாமல் நல்லவர் ஆட்சி – இராமனின் ஆட்சி நிலைக்க வேண்டும் எனக் கருத்து செலுத்த வேண்டும் என்னும் பொருளிலேயே மக்களிடம் சொல்லப்படுகிறது. பகுத்தறிவுப் படையணியைச் சேர்ந்த தமிழ்மானப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இராமனின் ஆரியஆட்சி வருவது பற்றிக் கவலைப்படாமல், தமிழ் இராவணின் வீழ்ச்சியைப் பற்றிய அவலமும் கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று ,

 

      “இராமன் ஆளினும், இராவணன் வீழினும்

      நமக்கென் என்று நாளைப் போக்கி

      எல்லாம் விதிப்பயன் என்றே எண்ணி”

மனநிறைவுற்றுச் செயலற்று வாழும் நாட்டுநிலையைக் கடிகின்றார்.

 

    சங்கக்கால ஆற்றுப்படை நூல்களின் வரிசையில் வைத்து எண்ணத்தகும் வகையில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் படைத்ததே, ‘மாணவர் ஆற்றுப்படைஎன்னும் பாநூலாகும். 1959 சனவரித் திங்கள் வெளிவந்த இந்நூல், நிலைமண்டில ஆசிரியப்பாவில், 190 அடிகளில் எளிமையும் சீர்மையும் கொண்டு இலங்குகிறது. சங்கத் தமிழ் நடையில் புதுப் பொருள் கொண்டு பேராசிரியர் இந்நூலைப் படைத்ததன் தொடர்ச்சியாக வேறு சில புலவர் பெருமக்களும் புதுப்புது ஆற்றுப்படை நூல்களை இயற்றலாயினர் என்பதே இந்நூலின் தாக்கத்தை உணரச் செய்வதாகும்.

      புதுக்கோட்டை வள்ளல் அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற இக்கவிதை, அன்னாரின் மணி விழாவின் பொழுது வெளிவந்ததாகும். இல்லாமையால், எல்லாம் இல்லாமல் இடருறுவோர், வாய்ப்பும் வசதியும் பெற்றால் எல்லாம் எளிதில் எய்துவர் என்பதை விளக்குவதற்காக இதனை எழுதியுள்ளார் எனலாம்.

     பிறவியில் எவரும் பேதையர் அல்லர்

      வாய்ப்பும் வசதியும் வாய்க்கப் பெற்றால்

      எவரும் பெரியராய் இனிதே உயரலாம்”

என விளக்கும் இவர், அதற்கான வாய்ப்பைச் செல்வ வளம் படைத்தோர் கடவுள் தொண்டாகக் கருதி இல்லாதோர்க்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இல்லாமையால், கல்விஇல்லாமை தோன்றக் கூடாது என்னும் தன் பேரவாவைப் படிப்போர் உள்ளத்திலும் பதிய வைத்து விடுகிறார்.

      “எளியோர்க்கு உதவுவோம்! ஏழையர்க்குக் கல்வி வாய்ப்பு நல்கிடுவோம்! ஏற்றத்தாழ்வை அகற்றிடுவோம்! பொய்மையை மாய்த்திடுவோம்! உண்மையை நிலைநிறுத்துவோம்! உயர்குணம் கொள்வோம்! ஏழ்மைகண்டு அஞ்சோம்! இனிய சொல் பேசுவோம்! இன்னாச் சொல் எள்ளுவோம்! புகழ்மிகு செயல்கள் புரிவோம்! நன்றே செயவோம்! அதுவும் இன்றே செய்வோம்! புவியில் அனைவரும் போற்ற வாழ்வோம்!” என்னும் எண்ணச் சிறப்புகளை மாணவர் ஆற்றுப் படையினைப் படிப்போர் உள்ளம் ஏற்கும் வகையில் சிறப்பாக இதனைப் படைத்துள்ளார் பேராசிரியர் அவர்கள் என ஆய்வாளர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

      சங்கத்தமிழ் விளக்கப் பாடல்களாகவும் கல்வியைப் போல் செல்வம் காணக் கிடையாதுஎன்பது போன்ற திருக்குறள் விளக்கப் பாடல்களாகவும் அந்தநாள் என்று வருமோஎன்பது போன்ற பழந்தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்னும் இன எழுச்சிப் பாடல்களாகவும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பல இசைப்பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக 1945களில் இவர் பாடிய இசைப்பாடல்கள் இசைமணி சங்கரனார் அவர்களால் இசையமைக்கப் பெற்று அவரால் மேடைகளில் பாடப்பெற்றுப் பல ஆண்டுகள் இயற்றியவர் யார் என அறியாமலேயே நெல்லை மேடைகளில் அணி சேர்த்துள்ளது.

      முந்தையோர் மரபைப் பின்பற்றிய பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள், முன்னோர் பாடல்களால் ஈர்க்கப் பெற்று, அதே முறைகளிலேயே சில பாடல்களில் தம் நிலைப்பாட்டையும் நாட்டுச் சூழலையும் அழகுற விளக்கியுள்ளார். புலவர் பிசிராந்தையார் அவர்கள், ஆண்டு பல கடந்தும் முடி நரைக்காமைக்கு நாட்டுச் சிறப்பைக் காரணமாகக் கூறும் வகையில்,

      “யாண்டு பலவாக நரையில வாகுதல்

         யாங்காகியர் என வினவுதிராயின்”

எனத் தொடங்கும் பாடல் மூலம் விளக்கியுள்ளார். இதனை அடியொற்றித் தன் தலை விரைவிலேயே நரைத்தமைக்குக் காரணமாக, நம் நாட்டுச் சூழலைப் பேராசிரியர் அவர்கள் பின்வருமாறு நயம்பட விளக்கியுள்ளார்.

“யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்

யாங்காகியர் என வினவுதி ராயின்

ஆண்ட நம் மக்கள் அடிமைக ளாயினர்

பூண்டநம் பண்பு போலிய தாகின்று

நற்றமிழ் மறந்தனர், நானில மதனில்

பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்

தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை

ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்

அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்

தமிழைக் கற்றோர் தாழ்நிலை யுறுவதால்

தமிழைப்பயிலத் தமிழரே வந்திலர்

அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்

மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே

எனப் பேராசிரியர் படம் பிடித்துள்ளது இன்றைக்கும்கூடப் பொருந்துகின்றது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan_kuralkuuttam03