(தமிழ்நாடும் மொழியும் 15 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 16

பல்லவப் பேரரசு தொடர்ச்சி

தந்தையை ஒப்பர் மக்கள்‘ என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே.

சீனயாத்திரிகனான யுவான்சுவாங்கு இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும் அவன் கூறியதாவது:- இங்குள்ள நிலம் வளமும் செழிப்பும் மிக்கது. இங்குள்ள மக்கள் உடலுரமும், கல்விப்பற்றும், உறுதியும் உடையவர்கள். தலை நகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உடையது. இங்கு 100 புத்தப் பள்ளிகள் உள; 1000 புத்தத் துறவிகளும் உளர். வேறு சமயங்களும் உள. அவற்றுள்ளே திகம்பர சமயம் நன்கு வளர்ந்துள்ளது.

நரசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றான். பல்லவ மன்னருள் குறைந்த ஆண்டுகள் ஆண்டவன் இவனே. இவன் ஆட்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.

பரமேசுவரவர்மன் (660-680)

பரமேசுவரவர்மன் காலத்தில் மேலைச் சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்; பல்லவரை உறையூர் வரை விரட்டியடித்தான். வெற்றிக் களிப்பில் திரும்பி வந்துகொண்டிருக்கையில் திடீரெனப் பல்லவன் பாண்டியர் உதவியோடு சாளுக்கியனைத் தாக்கினான். திடீர்த் தாக்குதலுக்கு ஆளாகிய சாளுக்கியப்படை தோற்றோடியது. இப்போர் பெருவளநல்லூரில் நடைபெற்றது. இதன்பின் பரமேசுவரன் நாட்டின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினான். தன் முன்னோரைப் போலவே இவனும் கட்டடக் கலைஞன். எனவே பல கோவில்களைக் கட்டுவித்தான். அவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று காஞ்சிக்கருகிலுள்ள கூரம் கோவில்; மற்றொன்று மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோவில்.

இராசசிம்மன் (680-700)

இரண்டாம் நரசிம்மவர்மனே இராசசிம்மன் ஆவான். இவன் பரமேசுவரனின் மகன். இருபது ஆண்டுகளுக்கு மேல் இவன் அமைதிமிக்க ஆட்சி செலுத்தினான். காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோவிலையும், மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலையும் கட்டியவன் இவனே. இவன்றன் மனைவியான அரங்கபதிகை என்பவளும் இவன் போலவே கட்டடக் கலையில் பெருவிருப்புள்ளவள். இக்காலத்தில்தான் காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அகம்பிரியா, சங்கரபக்குதா, வாத்திய வித்தியாதரா என்பன இராச சிம்மனின் விருதுப் பெயர்களாகும், இவன் அவையில்தான் தண்டி என்னும் வடமொழிப் புலவர் வீற்றிருந்தார். இவனுக்குப் பிறகு இவன் மகனான இரண்டாம் பரமேசுவரன் மன்னனானான். இவன் கி. பி. 700லிருந்து 710 வரை ஆட்சி புரிந்தான். ஆனால் 710-ல் திடீரென எந்தவித வாரிசும் இல்லாமல் பரமேசுவரன் இறந்தான். எனவே அதன்பின் குழப்பம் ஏற்பட்டது. பட்டத்திற்குப் பல இளவரசர்கள் போட்டியிட்டனர். சித்திரமாயன் என்பவன் அவர்களுள் ஒருவன். மற்றொருவன் நந்திவர்மன். நந்திவர்மனின் முன்னோன் பீமவர்மன். பீமவர்மன் என்பவன் சிம்மவிட்டுணுவின் தம்பி. இவன் தெலுங்கு நாட்டை ஆண்டவன். நந்திவர்மன் தனது தந்தையாகிய இரணியவர்மன் உதவியுடன் பல்லவ நாட்டின் மன்னனானான். அக்காலை இவன் பல்லவமல்லன், போத்தரையன் என்னும் பட்டங்களைப் புனைந்துகொண்டான். இவன் அரசனானபொழுது மிகவும் இளைஞனாக இருந்தான். இவன்றன் ஆட்சிக்காலம் கி. பி. 710-775 ஆகும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணப்படும் சிற்பம், அவன் வெளியிட்ட காசக்குடி பட்டயம் இவற்றின் மூலம் நந்திவர்மன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னன் எனத் தெரிகிறது.

மறுபடியும் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். கி.பி. 733 இல் அவன் காஞ்சி மீது படை எடுத்து நந்திவர்மனை ஓட்டி, சித்திரமாயனை மன்னனாக்கினான். வென்ற சாளுக்கியன் காஞ்சிக் கோவில்களுக்குப் பல பரிசுகள் அன்பளிப்பாக அளித்தான். இக்காலை நந்திவர்மன் திடீரெனக் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்திபுரம் என்னும் ஊரிலிருந்து வந்து, உதயச்சந்திரன் என்னும் தன் படைத்தலைவன் உதவியுடன் சாளுக்கியனை வென்றான். சாளுக்கியனோடு சேர்ந்த பாண்டிய இராசசிம்மனையும் அடக்கினான். சித்திரமாயன் என்பவன் உதயச்சந்திரனால் கொல்லப்பட்டான். இவையெல்லாம் உதயேந்திரப் பட்டயத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.  

இதன் பின்னர் இராட்டிரகூடர்க்கும் பல்லவர்க்கும் போர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இராட்டிடரகூட மன்னன் தந்திதுர்க்கன் தன் மகளான இரேவாதேவியை நந்திவர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான். உதயச்சந்திரன் பல்லவ மன்னனுக்காகக் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைக் கங்கர் நாடு ஆகியவற்றின் சில பகுதிகளைப் பல்லவ நாட்டோடு சேர்த்தான். நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடி, கொற்றங்குடிப் பட்டயங்கள் இக்காலமக்களின் பண்பாட்டை அறியப் பெரிதும் உதவுகின்றன. அவனுடைய தண்டன் தோட்டப் பட்டயம் அவன் திருமால்மீது கொண்ட பத்தியை வெளிப்படுத்துகிறது. திருமங்கையாழ்வார் இம்மன்னன் காலத்தவரே. காஞ்சியின் கண் உள்ள முத்தேசுவரர் கோவிலைக் கட்டியவன் இவனே.

சிறந்த கல்வியறிவும், அரசியல் அறிவும், படைக்கலப் பயிற்சியும், கலை ஆர்வமும், உதயச்சந்திரன் போன்ற திறமைமிக்க வீரர்களின் துணையும் பெற்று இரண்டாம் நந்திவர்மன் விளங்கியதால், பல்லவப் பெருநாடு பரப்பில் குறையாது, பல் வளங்களும் பெற்று, கலைகளுக்கு உறைவிடமாய் விளங்கியது. தன் ஆட்சிக் காலத்தில் பெரும்பகுதி போர் செய்வதில் கழிந்தாலும் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் கலைகளைப் பெரிதும் போற்றி வளர்த்தான்.

தந்திவர்மன் (கி. பி. 775-826)

நந்திவர்மப் பல்லவ மல்லனின் மகன் தந்திவர்மன் ஆவான். எனவே நந்திவர்மனுக்குப் பிறகு தந்திவர்மன் அரசனானான். தந்திவர்மன் என்பது தந்திவர்மனின் தாய் வழிப் பாட்டனான தந்திதுர்க்கனின் நாமம். தந்திவர்மனின் தாய்வழிப் பாட்டன் இராட்டிரகூடனாக இருந்தபோதிலும், இராட்டிரகூடத்திலிருந்து துருவன், மூன்றாம் கோவிந்தன் என்ற இரு இராட்டிரகூடர்கள் பல்லவ நாட்டின்மீது படையெடுத்து வந்தனர். சென்னையிலுள்ள திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோவிலில் தந்திவர்மனின் கல்வெட்டு ஒன்றுளது. தந்திவர்மன் தனது இறுதிக் காலத்தில் முதல் வரகுண பாண்டியனிடம் தன்னாட்டின் ஒருபகுதியை இழந்தான்.

மூன்றாவது நந்திவர்மன் (கி. பி. 826-849)

இவன் தந்திவர்மனின் மகன். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் ஒரு போர் தெள்ளாறு எனும் இடத்தில் நடந்தது. அப்போரில் பல்லவனே வெற்றி பெற்றான். எனவே நந்திவர்மன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பட்டான். நந்திக் கலம்பகம் எனும் பிரபந்தம் இந்நந்திவர்மன் மீது பாடப்பட்டதொரு நூலே. காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய இடங்களில் நந்திவர்மன் பெற்ற வெற்றிகளைப்பற்றி இந்நூல் பாராட்டிப் பேசுகின்றது. நந்திவர்மன் ஓர் இராட்டிரகூட மங்கையை மணஞ் செய்துகொண்டான். இவன் சைவத்தை ஆதரித்தான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இவன் அவைப் புலவராவார். வேலூர்ப் பாளையப்பட்டுப் பட்டயம் ஒன்று நந்திவர்மனைப் பெரிதும் புகழ்கிறது. இவன் மகன் நிருபதுங்கனாவான். இவன் பல்லவ நாட்டை ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆண்டுள்ளான். நிருபதுங்க வர்மனும் பாண்டியரோடு காவிரிக் கரையில் உள்ள அரிசில் என்னும் ஊரில் போரிட வேண்டி இருந்தது. இவன்றன் பாகூர்ப் பட்டயமானது இவனது அமைச்சன் ஒருவன் வட மொழிக்கல்லூரிக்குத் தானம் பல கொடுத்ததாகக் கூறுகிறது.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்