(தமிழ்நாடும் மொழியும் 14 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 15

பல்லவப் பேரரசு தொடர்ச்சி

சிவசுகந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான்.

மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவசுகந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை வடநாட்டு மன்னனான சமுத்திரகுப்தன் அவன் நாட்டின் மீது படையெடுத்தான்.

இடைக்காலப் பல்லவர்

விட்டுணுகோபனுக்குப் பின்பு ஆண்ட பல பல்லவ அரசர்களையே இடைக்காலப் பல்லவர் என்று நாம் கூறவேண்டும். வடமொழிச் செப்பேடுகளும், கல்வெட்டுகளுமே இவர்களைப்பற்றி நாம் அறியத் துணை செய்கின்றன. இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்று கூறினாலும் பொருந்தும். இக்காலத்தில்தான் தமிழகத்தில் அந்நியர் படையெடுப்புக்களும், குழப்பங்களும் நிகழ்ந்தன. இடைக்காலப் பல்லவ மன்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். இதிலிருந்து குப்தர் படையெடுப்பினால், பல்லவராட்சி சற்று தளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என அறியலாம்.

விட்டுணுகோபனுக்குப் பின்வந்த பல்லவரைத் திரு. கோபாலன் பின்வருமாறு தமது நூலில் முறைப்படுத்திக் காட்டியுள்ளார். குமாரவிட்ணு, கந்தவர்மன், வீர கூர்ச்சவர்மன், கந்த சிசுயன் (இரண்டாவது கந்தவர்மன்), சிம்மவர்மன், இரண்டாவது குமாரவிஷ்ணு, மூன்றாவது கந்தவர்மன், இரண்டாவது சிம்மவர்மன், மூன்றாவது குமார விட்ணு, விட்ணு கோபவர்மன், மூன்றாவது சிம்மவர்மன், சிம்ம விட்ணு. இவருள் வீர கூர்ச்சவர்மன் நாக மன்னனான கந்த நாகன் என்பவனது மகளை மணஞ் செய்துகொண்டான். பின்னர் மாமன் துணையுடன் தொண்டை மண்டலத்திலே இழந்த பகுதிகளை மீட்டிக்கொண்டான்.  

வீர கூர்ச்சவர்மனுக்குப் பிறகு இரண்டாம் குமார விஷ்ணு என்பவன் பட்டமேறினான். இவன் வீர கூர்ச்சனின் பேரன்; கந்த சிசுயனின் மகன். இவன் காலத்தொடக்கத்தில் காஞ்சி சோழர் கையில் இருந்தது. குமாரவிட்ணு சோழரை வென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான். வடமொழியை வளர்த்த இப் பல்லவருக்கும், பிராகிருத மொழியை வளர்த்த பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது பேராசிரியர் துப்புரேயில் கருத்து. வடமொழியை வளர்த்த பல்லவர் காலத்துக்கும், பிராகிருதத்தை வளர்த்த பல்லவர்க்கும் இடையே ஒருவித இடைவெளியும் இல்லை என்பது காலஞ்சென்ற பேராசிரியர் ஈராசடிகள் கருத்து. 

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராசசிம்மப் பல்லவனுடைய வயலூர்க் கல்வெட்டு பல்லவ மன்னர் பட்டியல் ஒன்றைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் தருகிறது. அதன் மூலம் முதலிரு பல்லவப் பரம்பரையினருக்கு இடையே எந்தவித வேற்றுமையும் இல்லை; இருவரது கோத்திரமும் ஒன்றே; குலமும் ஒன்றே; இந்தக் காலத்தில் தான் பல்லவர்கள் கடம்பரோடும், கங்கரோடும் அடிக்கடி போரிட்டனர் என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

பொற்காலம் – பிற்காலப் பல்லவர் பிற்காலச் சோழர் வரலாற்றிலே பொற்காலம் இராசராசன் காலத்திலிருந்து தொடங்குவது போலவே, பல்லவர் காலத்தின் பொற்காலம் சிம்மவிட்டுணு காலத்திலிருந்து தொடங்குகிறது என்னலாம். சிம்ம விட்டுணு சிம்மவர்மனின் மகனாவான்.

சிம்மவிட்டுணுவின் காலம் கி. பி. 575-600. இவன் காலத்திலிருந்து பல்லவராட்சி விரிவும், பேரும், சீரும் அடையத் தொடங்கியது. இவன் தனது கல்வெட்டிலும், பட்டயத்திலும், சோழரையும், பாண்டியரையும், சிங்களவரையும், களப்பிரரையும் முறியடித்ததாகக் கூறியுள்ளான். இவன்றன் சமயம் வைணவம். இவன், இவன்றன் இரு மனைவியர் ஆகிய மூவரது உருவச்சிலைகளும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இவனது காலத்தில் வடமொழி நாடக ஆசிரியர் பாரவி காஞ்சிக்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

மகேந்திரவர்மன்

மகேந்திரவர்மன் சிம்மவிட்டுணுவின் மகன்; கி. பி. 600 லிருந்து 630 வரை ஆண்டிருக்கிறான். இவன் காலத்திலிருந்து பல்லவ-சாளுக்கியப் போர் தொடங்கியது. மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி என்பவன் மகேந்திரவர்மனுக்குரிய வடபகுதியைக் கவர்ந்து கொண்டான். எனவே போர் தொடங்கியது. பின்னர் புலிகேசி படையுடன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனைப் பல்லவன் உடனே எதிர்க்கவில்லை; ஒளிந்து கொண்டான். புலிகேசி பல்லவ நாட்டுக்குள் தாராளமாக எதிர்ப்பின்றிச் சென்றான். பின் திரும்பி தன் நாட்டிற்குச் செல்லும்பொழுது அவனைப் புள்ளலூர் என்ற இடத்தில் வைத்துப் பல்லவன் முறியடித்தான்.

மகேந்திரவர்மன் மன்னன் மட்டுமல்ல; கலைஞனும்கூட. இசை, நாடகம், சிற்பம், ஆகிய கலைகளில் அவன் மிகுந்த தேர்ச்சியடைந்து விளங்கினான். அதுமட்டுமல்ல; அக்கலை வல்ல புலவர் பெருமக்களைப் பெரிதும் போற்றிப் புரந்தும் உள்ளான். வடமொழியில் புலமை மிக்கவன் மகேந்திரவர்மன். இவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வட மொழி நூலை எழுதி உள்ளான். இந்நூல் அக்காலத்தில் நிலவிய புத்தர், கபாலிகர், பாசுபதர் ஆகிய பிற சமயத்தினரைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துக் கூறுகின்றது. இவன் காலத்தில் வாழ்ந்தவரே அப்பர் பெருமான். சமண சமயத்திலிருந்து பல்லவனைச் சைவனாக்கிய பெருமை அப்பரையேசாரும்.

சைவனான மகேந்திரவர்மன் வடஆர்க்காட்டுப் பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமணக் கோவிலை அழித்து சிவன் கோவில் கட்டினான், முதன் முதலில் கற்கோவிலை ஏற்படுத்தியவன் இவனே. வல்லம், செங்கல்பட்டு, தளவனூர், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் சிவன் கோவிலையும் விட்டுணு கோவிலையும் கட்டினான். மண்டபப் பட்டுக்கல்வெட்டு இவன் செங்கல், மரம், உலோகம், சாந்து இன்றிக் கோவில் கட்டுவித்தான் எனக் கூறுகிறது. சித்திரக்காரப் புலி என்னும் பட்டப் பெயரால் மகேந்திரவர்மனின் ஓவியப் புலமை விளங்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியம் இவனால் அமைக்கப்பட்டதே. இவற்றிலிருந்து இவன் இசை, நாடகம் முதலிய கலைகளைப் புரந்தமை நன்கு புலனாகும். சுருங்க உரைப்பின் மகேந்திரவர்மன் சாளுக்கியரை முறியடித்தான் ; சைவத்தை வளர்த்தான் ; கலைகளை ஆதரித்தான் ; கற்கோவில்களைக் கட்டுவித்தான்; வேளாண்மையைப் பெரிதும் விரிவாக்கினான்.

நரசிம்மவர்மப் பல்லவன் (630-655)

இவன் மகேந்திரவர்மப் பல்லவனின் மகன். இவன் இளவரசனாக இருந்தபோது போர் பல செய்திருக்கிறான். மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை இவன் மூன்றிடங்களில் தொடர்ந்து முறியடித்து உள்ளான். அதுமட்டுமல்ல; வாதாபி வரை சாளுக்கியனை விரட்டிச் சென்று அந்நகரை அழித்து வெற்றித்தூண் நிறுவியவனும் இந் நரசிம்மனே. ந்நிகழ்ச்சி கி. பி. 642இல் நடந்தது. அதனால் வாதாபி கொண்டவன் என்ற விருதுப்பெயரும் கொண்டான். இவன் படைத்தளபதி பரஞ்சோதி; இவரே சேக்கிழாரால் சிறுத்தொண்ட நாயனார் எனப் பாராட்டப்பட்டவர். இவர்கால மற்றொரு நாயனார் ஞானசம்பந்தர் ஆவார். நரசிம்மன் நடத்திய போரில் இலங்கை மன்னனான மானவர்மன் உதவினான். மானவர்மன் செய்த இவ்வுதவிக்காக நரசிம்மன் ஒரு கப்பற்படையை அனுப்பி ஈழத்தில் மறுபடியும் மானவர்மன் தனது ஆட்சியை நிலை நாட்டச் செய்தான். மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் இப்படையெழுச்சியைக் குறிப்பிடுகிறது. எனினும் நரசிம்மன் காலத்தில் நெல்லையை ஆண்ட பாண்டிய மன்னனால் இவன் எதிர்க்கப்பட்டனன் எனத் தெரிகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்று சொல்லப்படும் பாண்டியன் நெடுமாறன் ஆவான்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்