தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12)

 (“சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!” தொடர்ச்சி)

முந்தைய கட்டுரையில் சுவை உணவு தருவோர், சுவைத்தமிழையும் தர வேண்டுமாய் வேண்டியிருந்தோம். அதற்கு முன்னர் “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்” என எழுதியிருந்தோம். இரண்டின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையும்.

தமிழ் நாட்டிலுள்ள உறைவகங்கள் – தங்கும் விடுதிகள் – தமிழருக்கானவை யல்ல என அதன் உரிமையாளர்கள் கருதுகின்றனர் போலும். ஆனால், 7% இற்கும் குறைவானவர்களே அயல்நாட்டினராக இங்கு வருகின்றனர். அனைவருமே ஆங்கிலேயர்கள் எனச் சொல்ல இயலாது. ஆங்கிலம் அறியாதவர்களும் வருகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களிலும் ஆங்கிலம் அறியாதவர்களும் உள்ளனர். இச்சிறுபான்மையருக்காகத்தான் தங்கல் மனைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் உள்ளன; அவை தொடர்பான விவரங்களும் விளம்பரங்களும் ஆங்கிலத்தில் உள்ளன. நாம் தங்குவதற்கு விடுதிக்குச் சென்றால் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியேறும் வரை ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான்!

நாம் உள்ளே நுழைந்ததும் தரப்படும் பதிவுப் படிவம், அதற்கான பதிவேடு, பிற பதிவேடுகள், அறைகள், கூடங்கள் விவரங்கள், கட்டண விவரங்கள்,  உறைவகத்துடன் இணைந்துள்ள உணவகம் தொடர்பான அனைத்து விவரங்கள், அரங்கங்கள், சிற்றரங்கங்கள் பெயர்கள், நிகழ்ச்சி இருப்பின் நிகழ்ச்சி விவரங்கள், ஆங்காங்கே உள்ள அவசர வழி முதலான தகவல்கள் அல்லது அறிவிப்புகள், ஏணறைகளில்(மின்னேணிகளில்) உள்ள தள விவரம், அதன் இயக்கம் அல்லது நிறுத்தம் தொடர்பான பதிவுக் குரல்கள், பணியாளர்களின் உரையாடல்கள், வருவோர் கண்களையும் கருத்துகளையும் கவருவதற்காக வைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள முழக்கங்கள் அல்லது வரிகள் என எங்கு நோக்கினும் தமிழுக்கு இடமில்லையே! 

“தங்கல்மனைகளிலும் கூடங்கள், அறைகள் முதலானவற்றிற்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதில்லை. அரசன், அரசி, இளவரசன், இளவரசி,  பூவின் பெயர்கள், கூடம், விருந்தகம், குடிப்பகம், மலரகம் என்று தமிழிலேயே சூட்டலாம்  அல்லவா? தமிழில் குறிப்பிட்டால் அயல்மொழியாளருக்குப் புரியாது எனக் கவலைப்படுபவர்கள், அயல்மொழிகளில் சூட்டினால் தமிழ்மக்களுக்குப் புரியாதே என ஏன் கவலைப்டுவதில்லை?” என முன்னர்க் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.

அரசு முன்மாதிரிச் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும். ஆனால் அரசு, அரசாணைகளையே பின்பற்றுவதில்லை. தத்தம் பதவி உயர்வுகளில் கருத்து செலுத்தும் உயர் அதிகாரிகள் தமிழின் உயர்வு குறித்து எண்ணிப் பார்ப்பதில்லை. உயரதிகாரிகளின் நிலைப்பாடே தமிழை வாழ வைப்பதாக இல்லாத பொழுது சார்நிலைஅதிகாரிகள், பணியாளர்கள் மட்டும் தமிழைப் போற்றவா போகிறார்கள். எடுத்துக்காட்டிற்குத் தமிழ்நாட்டின் நிறுவனமான சுற்றுலாத் துறையின் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தைக்(TTDC – Tamil Nadu Tourism Development Corporation) கூறலாம். இதன் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா சுற்றுலா விடுதிகளிலும் – தமிழ்நாடு உறைவகங்களிலும் – பெயர்ப்பலகை தமிழில் இன்மையைக் குறிப்பிடலாம். மிகச் சில இடங்களில் தமிழும் ஆங்கிலமும் இருந்தாலும் அரசாணைக்கிணங்க ஒரே பலகையில் அமையாமல் தனித்தனியே இருக்கிறது. அதற்குச் சான்றாகச் சில உறைவகங்களின் பெயர்ப்பலகைகளையே தலைப்புப் படத்தில் குறிப்பிட்டுள்ளோம். பெயர்ப்பலகைகளில் மட்டுமல்ல தமிழ்நாடு உறைவகம் முழுமையும் தமிழ்ப் பயன்பாட்டைக் காண இயலவில்லை.

அரசு அவ்வப்பொழுது தமிழில் பெயர்ப்பலகைகள் இருக்க வேண்டும் என்று ஆணை, சுற்றறிக்கை, நினைவூட்டுகளைப் பிறப்பிக்கின்றது. அவற்றைப் பார்க்கும் பொழுது கடுமையான நடவடிக்கைபோல் தோன்றும். ஆனால் அவை வெற்றுவேட்டு என்பதை உணர்ந்து அவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை.

சான்றாக 2010ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி வெளியிட்ட ஆணையைக் குறிப்பிடலாம். அதில் “மே மாதம் 31 ஆம் நாளுக்குள் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்து முதன்மையாக  இடம் பெறாவிட்டால், சூன் மாதம் 1ஆம் நாள் முதல் தமிழ்ப் பெயர் முதன்மையாக இராத பெயர்ப் பலகைகளைச் சென்னை மாநகராட்சி அகற்றும். இதற்குக் கால வாய்ப்பு யாரும் கேட்கக் கூடாது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  கடை உரிமையாளர்களின் உதடுகள் பின்பற்றுவதாகத் தெரிவித்தன. உள்ளங்கள் நகைத்துக் கொண்டு வாளாவிருந்தன.  இதைக் குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 2012இல் தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தில் இறங்கியது. பேச்சளவில் ஆர்வம் காட்டிய வணிகர்கள் செயலில் பாராமுகங்களாக இருந்து விட்டனர். கடைகள் என்னும் பொழுது உணவகம், உறைவகமும் அடங்கும். மிகப் பெரும்பான்மையான தங்கும் விடுதியை நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் விடுதிகளில் தமிழுக்கு இடம் தருவதில்லை. முகப்பில் உள்ள பெயர்ப்பலகையைக் கூடத் தமிழில் வைக்காதவர்களா உள்ளுக்குள் தமிழை அமர வைப்பார்கள்.

ஓட்டல்(Hotel)  என்பதன் மூலச் சொற்கள்(hôtel, hostel, hospitālis) வழிப்போக்கர் விடுதி, ஆண்டிமடம், துறவிமடம், தங்கிடம், புகலிடம், காப்பகம்,  எனப் பல பொருள்களைக் குறிப்பிடும். கூடாரம், வாழும் இடம், நிழலகம், குகை முதலிய இடங்களைக் குறிக்கும் shelter என்பதையும் இதன் பொருள்களாகக் குறித்தனர். பின்னர் தங்குமிடங்களில் பானங்கள் குடிப்பதற்கு அளித்தமையால் அருந்தகம் என்னும் பொருள் வந்தது. பின் உணவும் அளிக்கத் தொடங்கியதும் பயன்பாட்டுஅடிப்படையில் விருந்தகம், விருந்து மனை, விருந்தில்லம், விருந்தினர் மாளிகை  என்னும் பொருள்கள் வந்தன. Lunch Home என இரட்டைச்சொல்லாகக் குறிப்பிடுகையில்தான்-பகல் உணவகம் – என உணவகத்தைக் குறித்தது. தொடக்கத்தில் ஓட்டல் உணவகத்தைக் குறிப்பிடா விட்டாலும் இப்போது பெரும்பாலும் உணவகம் என்னும் பொருளில்தான் குறிக்கின்றோம். எனவே, ஓட்டல் எனத் தங்குமிடத்தைக் குறிக்கும் இடங்களில் உணவகம் என்பது பொருந்தாது எனக் கருதி ஆங்கிலத்திலேயே குறிப்போரும் உள்ளனர். நாம் முன்பே குறித்தாற்போல் இதனை உறைவகம் எனக் குறிப்பது சாலப்பொருத்தமாகும். உணவு தரும் மனைகளை, உணவகம், உணவு மனை, விருந்து மனை, விருந்தகம், உண்டிச்சாலை என்ற வகையிலும் தங்குவதற்கான இடங்களை, விடுதி, தங்கல் மனை, தங்ககம், வழித்தங்கல் மனை, பயணர் விடுதி, பயணியர் விடுதி, துயில் மனை, துயிற்கூடம், துயிலகம் என்னும் வகையிலும் தங்கும் இடத்துடன் உணவும் தரும் விடுதிகளை உறைவகம், உண்டி உறையுளகம் என்பன போலும் பயன்படுத்தலாம். இவற்றுள் சில சொற்களுக்கு வேறு பொருள்களும் இருப்பினும் இதற்கு இதுதான் பொருள் என்ற வரைமுறையை வகுத்துக் கொண்டு பயன்படுத்தலாம். அரசு அதற்கான ஆணை பிறப்பித்தால் தமிழில் ‘ஓட்டல்’ என்றே குறிப்பிடும் பழக்கம் நிற்கும். உணவகம் என்றால் உண்ணும் மனையைத்தான்குறிக்கும் என்று ஆழமாகப் பதிந்த பின்னர் தங்குமிடத்திற்கும் அதையே பயன்படுத்துவதில் குழப்பம் இருப்பதைப் புரிந்து வழிகாட்டினால்தானே தமிழில் குறிக்க எண்ணுபவர்கள் தமிழைப் பயன்படுத்துவர்.

வருவோர்க்குச் சிறப்பாகத் தங்குமிட ஏற்பாட்டைச் செய்யும் உறைவகப் பொறுப்பாளர்கள் எல்லா இடங்களிலும் தமிழும் வீற்றிருக்க வகை செய்வார்கள் எனில், தமிழ்த்தாய் அகம்மிக மகிழ்வாள் அல்லவா? அந்நாள் எந்நாளோ?

– இலக்குவனார் திருவள்ளுவன்