(தமிழ்நாடும் மொழியும் 7 தொடர்ச்சி)

கடைச்சங்கக் காலம்

தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்கக் காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த என்போரின் குறிப்புகளும், பெரிப்புளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம்.

தமிழ் வேந்தர்கள்

சங்கக் காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ 300 பேர் தமிழகத்தை ஆண்டனர். வளமிக்க வயல் சூழ்ந்த நகரப் பகுதிகளும் கடற்கரையும் முடியுடை மன்னரால் ஆளப்பட்டன. குன்று நிறைந்த பகுதிகளும், காடும் மேடும் நிறைந்த சிற்றூர்களும், வேளிர்கள், வள்ளல்கள் ஆகிய குறுநில மன்னரால் ஆளப்பட்டன. குறுநில மன்னருள் முடியுடை மூவேந்தர்க்கு அடங்கியோரும் உண்டு; அடங்காது தனித்து விளங்கியோரும் உண்டு.

தமிழகத்தை மூவேந்தர் பாகுபாடு செய்துகொண்டு ஆண்டார்கள். அவர்கள் ஆண்ட மூன்று பகுதிகளும் முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என வழங்கப்பட்டன. எனவே அவர்கள் சேர சோழ பாண்டியரெனப்பட்டனர்.

வடக்கே வானியாறு, தெற்கே கோட்டாறு, கிழக்கே மேற்குத்தொடர்ச்சி மலை, மேற்கே கடல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலம் சேர நாடு ஆகும். பாண்டிய நாடு என்பது தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ளதாகும். சோழ நாடு என்பது வெள்ளாற்றுக்கும் தென் பெண்ணைக்கும் இடையே பரந்து விளங்குவது. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடாகும்.

பாண்டியருக்கு வேப்பந்தாரும், சேரருக்குப் பனந்தாரும், சோழருக்கு ஆத்திமாலையும் அடையாள மாலைகளாம். பாண்டியரின் சின்னம் மீன்; சோழரின் சின்னம் புலி; சேரரின் சின்னம் வில். பாண்டியரின் தலை நகர் மதுரை நகர்; கடற்கரை நகர் கொற்கை. சோழரின் தலைநகர் புகார், உறையூர்; துறைமுகம் புகார். சேரருக்குத் தலைநகர் வஞ்சி; துறைமுகம் முசிறி. இன்று மலையாளம் வழங்கும் பகுதி முழுதும் சேர நாடாய் விளங்கியது. அந்நாடு அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாகவே இருந்தது. நெடுநாளைக்குப் பின்னரே அது மலையாள நாடாயிற்று.

இன்று கிடைக்கும் இலக்கியச் சான்றுகளின் மூலம் மிகவும் பழமையான, சிறப்பான சோழ மன்னன் கரிகாலன் என்பதை அறிகிறோம். இக் கரிகாலனே சோழ மன்னர்களிற் சிறந்தவன். “வலிமை மிக்க புலி கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போல பகைவரது சிறையிலிருந்து வளர்ந்த கரிகாலன் பிள்ளைப் பருவமுதலே வலிமை மிக்கவனாகவும், சீற்றத்திலே முருகப்பெருமானை ஒப்பவனாகவும் விளங்கினான். பின்னர் அவன் பகைவரை வென்று முறைப்படி அரசுரிமையைப் பெற்று, பகைவர் நாடுகளைக் கைப்பற்றிச் சோழ வல்லரசை நிறுவினான். பகைவர் ஊர்களில் கூகைகள் இருந்து குழறின; மதில்கள் அழிந்தன. சேர பாண்டியரை வெண்ணியில் வெற்றிகண்டவன்; ஆத்தி மாலையை அணிபவன்; நினைத்தவற்றை நினைத்தவாறே முடிக்கும் ஆற்றல் பெற்றவன்; அருவா நாட்டார், குட்ட நாட்டார், வடநாட்டார், இருங்கோ வேளிர் முதலியவர்களை வென்றவன்; காடு கெடுத்து நாடாக்கியவன்; குளம் தொட்டு வளம் பெருக்கியவன்; கோயில் கட்டியவன்; தமிழ்க்குடிகளைக் காத்தவன்” என்றெல்லாம் பத்துப்பாட்டு இவனது அருமை பெருமைகளைக் கூறுகின்றது.

கரிகாலன் சோழநாட்டரச பதவியை அடைவதற்கு மிகவும் பாடுபட்டான். அரசனானதும் முதலில் உள்நாட்டுக் குழப்பத்தைத் திறம்பட அடக்கினான். தன்னை எதிர்த்த சேரனையும் பாண்டியனையும் வெண்ணி என்னும் இடத்தில் வெற்றிகண்டான். இதன் பிறகு இவன் வடநாட்டின் மீது படையெடுத்தான் எதிர்த்த வடநாட்டு மன்னரை எல்லாம் முறியடித்தான். பின் இமயம் சென்று தன் புலிக்கொடியைப் பொறித்து மீண்டான். பேராசிரியர் பண்டித மு. இராகவய்யங்கார் கரிகாலன் இமயத்தில் புலி பொறித்த இடம் சிக்கிம், பூட்டான் என்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள மலைகள் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். ‘இம்பீரியல் கெசட்டீர் ஆப் இந்தியா’ ( Imperial Gazetteer of India ) என்ற நூலும் மேற்குறித்த இடத்தில் ‘சோழன் மலை’, ‘சோழன் கணவாய்’ என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன என்று கூறுகின்றது.

வடநாடு சென்று வாகையுடன் திரும்பிய கரிகாலன் அடுத்து இலங்கை மீது படையெடுத்து அதனை வென்றான். 12000 கைதிகளைப் பிடித்துக்கொண்டு தன்னாடு திரும்பினான். திரும்பிய பின்னர் அக்கைதிகளைக் கொண்டு காவிரி நதியின் இரு கரைகளையும் செப்பனிட்டான். ஈழத்தின் பழங்கால நூல்களான மகாவமிசம், தீப வமிசம் இதனைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன. கரிகாலனது காவிரி அணை நூறு கல் நீளம் இருந்ததென இவை கூறுகின்றன. கரிகாலனது இவ்வழியாப் பணியைப் பற்றித் திருவாலங்காட்டுப் பட்டயங்களும், ரேனாட்டுச் சாசனங்களும் நன்கு கூறுகின்றன.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்