தமிழ்நாடும் மொழியும் 35: 2.1.தமிழின் தொன்மையும் சிறப்பும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 34: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி)
2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தொடர்ச்சி
அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார்.
‘தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை‘.
தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார்.
1.தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக் கிடக்கின்றது; தனித் தமிழ்ச் சொற்களையே காணுகின்றோம். இத்தகைய செந்தமிழ் நடையை மக்கள் ஒரே காலத்தில் உண்டாக்கி இருத்தல் அரிது. பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும்.
2.தமிழ் நிகண்டுகளின் விரிவுப் பெருக்கம் தமிழின் தொன்மையைக் காட்டும். 68500 சொற்களை யாழ்ப்பாணத்துத் தமிழ் அகராதியில் காணலாம். வின்சுலோ என்ற ஐரோப்பியரின் பெரு முயற்சியால் வெளிவந்த பல்கலைக் கழக அகராதியில் 84000 சொற்கள் காணப்படுகின்றன.
3.பழங் கன்னடம், பழைய மலையாளம், துளுவம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை தமிழின் தொன்மையைக் காட்டும்.
4.வடமொழிச் சொற்களைத் தமிழாக்கி வழங்கும் தன்மை தமிழின் பழமையைக் காட்டுவதாகும்.
5.பழைய கல் வெட்டுகள் எல்லாம் பழந்தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளமை தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும்.
6.தெலுங்கின் முதற் சொற்களும் விகுதிகளும் தமிழின் முதற் சொல் விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியாக இருப்பதும் தமிழின் தொன்மையை விளக்கும்.
அடுத்து, தமிழின் தொன்மை குறித்துத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம். அவர் எழுதியிருப்பதாவது:
“தமிழ் மொழியின் இயலே தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றது. தமிழின் தொன்மை வரலாற்றுக் காலத்தையும் கடந்து நிற்பதொன்று. உலகில் நிலவும் பல மொழிகளுள் நம் தமிழ் மொழி மெல் லோசை உடையது என்பது வெளிப்படை மெல்லோசை மொழி நேற்றோ இன்றோ தோன்றியிராது.”
தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மை வாய்ந்த நூல் ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியமே என்பதைத் தமிழ் மக்கள் எல்லோரும் நன்கு அறிவர். அஃது இற்றைக்குச் சற்றேறக் குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். ஒரு மொழியில் இலக்கண நூல் எப்பொழுது தோன்றும்? அம் மொழியில் இலக்கியங்கள் பல நூருயிரமாகப் பெருகிப்பெருகி வளர்ந்த பின்பே இலக்கண நூல் தோன்றுதல் இயல்பு. எனவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தோன்ற வேண்டுமானுல் அதற்கு எத்தனை ஆண்டுகட்கு முன்னுல் இலக்கிய நூற்கள் பல தமிழில் தோன்றியிருத்தல் வேண்டும்?
ஒரு மொழியில் இலக்கியங்கள் திடீரெனப் புற்றிசல்கள் போலத் தோன்றுதல் என்பது நடவாத காரியம். அந்த மொழியில் சுவைமிக்க இலக்கியங்கள் தோன்ற வேண்டும் என்றால் அந்த மொழி பலநூறு ஆண்டுகட்கு முன்பே தோன்றி மக்களிடையே வழங்கி, பின் புலவரிடையே தவழ்ந்து சொல்வளம் பல்கியிருத்தல் வேண்டும். இதிலிருந்து தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கும் முந்திய ஒரு தொன்மை மொழி என்பது விளங்கும்.
கி. மு. வில் செய்யப்பட்ட (உ)ரோம நாடகம் ஒன்றில் கன்னட மொழிக் காட்சி ஒன்று வருகிறது. கன்னட மொழி என்பது தமிழ் மொழியின் சேய் மொழிகளுள் ஒன்று என்பதை அறிஞர் எல்லாரும் கூறுவர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும். மோகஞ்சோதாரா, ஆரப்பா என்னும் சிந்துவெளிப் புதையற் பொருட்களிலே காணப்பட்ட எழுத்துகள் எல்லாம் தமிழ் எழுத்துக்களை ஒத்திருக்கின்றன எனப் பேரறிஞர் ஈராசடிகள், மார்சல் என்பவர்கள் கூறியிருக்கின்றனர். இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.
வட மொழியிலே மிகவும் தொன்மையான நூல் இருக்கு வேதமாகும். அஃது இற்றைக்கு ஏறத்தாழ பதினையாயிரமாண்டுகட்கும் முந்திய பழமையுடையது எனச் சொல்லப்படுகிறது. அந்த நூலிலே மயில், முத்து முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று வடமொழிப் பேரா சிரியர்களே கூறியுள்ளனர். அது மட்டுமல்ல; பாரதம் இராமாயணத்துக்கும் முந்திய நூலாகும். அந்தப் பாரதப் போரிலே தமிழ் மன்னன் பங்கு கொண்டு அப் பாரதப் போர்ப் படைகட்கு உணவு அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இதிலிருந்தும் தமிழின் தொன்மை நன்கு விளங்கும்.
சென்னை உயரற மன்ற நடுவராக இருந்த திரு. சதாசிவ ஐயர் கூறிய கீழ்வரும் கூற்றும் தமிழின் தொன் மைக்குச் சான்ருகும்:-
தமிழ் மொழியில் க, ச, ட, த, ப போன்ற எழுத்துகள் ஒவ்வொன்றே இருக்க வடமொழியில் இவற்றிற்கு நன்னான்கு எழுத்துகள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று எழுத்துகள் மிகுதியாக உள்ளன. இது வடமொழியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது புலனாகும். இதிலிருந்து வட மொழிக்கும் தமிழ் முந்தியது என்பது புலனாகும். இதுமட்டு மல்ல; எபிரேய மொழியிலாய பைபிளிலே தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. தோகை, இஞ்சி, அரிசி என்பனவே அச் சொற்கள். இவற்றோடு மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள மலைகள் மிகவும் பழமை வாய்ந்தது எனப் பேராசிரியர் தீட்சதர் கூறியிருக்கிறார். இதிலிருந்தும் தமிழின் தொன்மை விளங்கும். தெலுங்கு, மலையாளம் போன்ற கிளை மொழிகளின் சொற்கள் பலவற்றுக்கும் வேர்ச்சொற்கள் தமிழிலேதான் காணப்படுகின்றன. வடமொழியாளர் தமிழிடம் பெற்ற சொற்களும் கருத்துகளும் எண்ணற்றவை.
இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழின் தொன்மை நன்கு அங்கைச் செங்கனிபோல விளங்கும். மேலும் தமிழ் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல; மென்மையும், இளமையும், வளமையும், ஒண்மையும், நுண்மையும் உடைய ஒரு சீரிய செம்மொழியாகும். இதனாலன்றோ,
“ஆரியம்போல் உலகவழக்
கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே”
“சது மறையா ரியம்வருமுன்
சக முழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென
மொழிகுவதும் வியப்பாமே !”
என்றார் பேராசிரியர் சுந்தரனார்.
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
Leave a Reply