தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்
by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி
ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக் கொண்டும் மக்கள் குறைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் காலங்கடத்திக் கொண்டும் மண்ணின் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்.
இதுவரை தமிழறியாத பிற மாநிலத்தவர் தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதற்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டரசு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், ஒன்றிய அரசின் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என அனைத்திலும் தமிழக அரசின் தமிழ்த் தேர்வுத்தாளை எழுதுவதைக் கட்டாயமாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழறிந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதும் இதனால் தமிழ் ஆட்சிமொழித்திட்டம் முழுமையாக நிறைவேற வாய்ப்பு கிட்டும் என்பதும் முதல் மகிழ்ச்சி.1990 களில் தேர்வாணையத்திலிருந்து வல்லுநர்கள் சிலரை அழைத்து இது குறித்துக் கருத்தரங்கம் நடத்தினார்கள். அப்பொழுது நான் தெரிவித்த கருத்துகள் படிப்படியாக நிறைவேறிக் கொண்டுள்ளன. அவ்வகையில் ஒன்றான இத்திட்டமும் நிறைவேறுவதால் இரண்டாவது மகிழ்ச்சி. என்றாலும் பெரும் வருத்தங்களும் உள்ளன.
தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான நூல் தொல்காப்பியம். ஆனால், அடிப்படைப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியம் இல்லை. பட்ட, பட்ட மேற்படிப்பு நிலையில் இலக்கணம் என்ற அளவிலும் பண்பாட்டுத்தாளிலும் தொல்காப்பியம் இடம் பெற்றுள்ளது. எனவே, அறியாமல் நேர்ந்த தவறு என்று சொல்ல இயலாது. திட்டமிட்டுத் தொல்காப்பியத்தை தேர்வுத்திட்டக் குழுவினர் மறைத்துள்ளனர் என்று கருத இடம் உள்ளது. இந்திய வரலாற்றை எழுதுபவர்கள் தொல்காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்பார் பேராசிரியர் இலக்குவனார். தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல. வாழ்வியல் நூலாகும். ஆனால், அதனைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்காதது மிகப்பெரும் தவறாகும். எனவே, உடனடியாகத் தொல்காப்பியத்தைத் தேர்வுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
திருக்குறளில் 19 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். பொதுவாகப் பார்த்தால் அல்லது ஐந்தால் வகுபடும் எண்களைக் குறிப்பிடுவார்கள். அது என்ன 19 என்று தெரியவில்லை.
ஈராண்டிற்கு ஒரு முறை 25 அதிகாரங்களைத் தேர்வுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் வேலைக்கான தகுதி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவதன் மூலம் திருக்குறள்களைத் தொடர்ந்து அறிய வாய்ப்பு கிடைக்கும்.
தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது.
தேர்வுத் திட்டத்தில் பெருங்குறைபாடு ஒன்றும் உள்ளது. சமற்கிருதம் என்பது ஒரு தாளாக உள்ளது. பழைய தேர்வுத் திட்டத்திலும் உள்ளதால், கடந்த ஆட்சியிலேயே சேர்த்திருப்பார்கள் எனக் கருதுகிறேன். பல மொழிகளுக்குமான தேர்வுத்தாள் இருப்பின் சமற்கிருதத்திற்கும் வைத்திருந்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் வேலை பார்ப்பதற்கு எதற்குப் போலியான செம்மொழியான சமற்கிருதத்திற்கு எனத் தனித்தாள் தேவை? ஒன்றிய அரசு சமற்கிருதத்தைத் திணிப்பது போதாதா, தமிழக அரசும் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமா? எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாகச் சமற்கிருதத் தேர்வுத்தாளை அகற்ற வேண்டும்.
வரலாற்றுப் பாடத்திலும் தமிழர் நாகரிகமும் தமிழர் பண்பாடும், தமிழக வரலாறும் முதன்மை பெறும் வகையில் தேர்வுத்திட்டத்தை அமைக்க வேண்டும். சங்க இலக்கியம் என்பது பெயரளவிற்கு இல்லாமல் அதன் முழுமையான சிறப்பை அறியும் வகையில் தேர்வுத்திட்டம் இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்புப் போர்கள் வரலாற்று முதன்மையானவை. எனவே, ஒன்றிய அரசு எதிர்க்கும் என்று எண்ணாமல் தேர்வுத்திட்டத்தில் இவையும் இடம் பெற வேண்டும். ஆங்கில மொழித் தேர்வுத்தாளிலும் தமிழ், தமிழர் வரலாறு இடம் பெற வேண்டும்.
காலந்தோறும் தமிழ் எழுத்து முறை என்பது தவறான வரலாறாகும். “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்கள் தொன்று தொட்டு மாறாமல் எழுத்து வடிவங்கள் உள்ளன எனக் கூறுகின்றன. சிற்சில மாற்றங்களைத் தவிர எழுத்தமைப்பில் மாறுதல்கள் இல்லை. கல்வெட்டு எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியாகக்கருதக் கூடாது. ஓலைச்சுவடிகளில் அத்தகைய மாற்றங்கள் இல்லை. எனவே, தவறான வரலாறாக உள்ள எழுத்துவடிவ வளர்ச்சி குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.
காண்க. More should be done for Tamil in TNPSC exams: Scholar
Leave a Reply