(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21 தொடர்ச்சி)



குறிஞ்சி மலர்
அத்தியாயம் 9

 

பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்பு
பூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்
பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்
பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி
      —
சது.சு.யோகி


அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த இரவில்தான் அரவிந்தனின் எல்லையற்ற மனப்பரப்பை அவள் கண்டுணர்ந்தாள். அந்த இரவில் தான் மீனாட்சி அச்சக உரிமையாளர் அவளைச் சந்தித்துத் தம் வண்டியிலேயே திருப்பரங்குன்றத்தில் கொண்டு போய் விட்டு அரவிந்தனோடு திரும்பினார். அரவிந்தனும் அவளும் பேருந்து நிலையத்துக்கு வெளியே மழையில் நின்று கொண்டிருந்த போது நல்ல வேளையாக அவர் வந்து உதவினார். அந்தப் பெரியவரின் உதவி அவளுக்கு வாழ்நாள் நெடுகிலும் தொடர்ந்து கிடைக்க இருந்ததற்கு அது ஓர் அடையாளமா?

அதன் பின்னர் கடந்த சில வாரங்களில் அவள் வாழ்விலும் அவளைச் சூழ்ந்திருந்த வாழ்விலும் தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. மாளிகை போல் பெரிய வீட்டில் இருந்து பழகிவிட்ட பின் சிறிய இடத்தில் புதிதாகக் குடியேறிய வீட்டில் குறுகிய வசதிகளைப் பழக்கப்படுத்திக் கொண்டாள் அவள். செல்வத்தோடும் வசதிகளோடும் வாழ்வதற்கு முயல வேண்டியதில்லை. ஆனால் ஏழ்மையோடும் வசதி குறைவுகளோடும் வாழப் பழகிக் கொள்ள முயற்சி தானே வேண்டும். சிறிய தம்பிக்கு கைக்கட்டு அவிழ்த்தாயிற்று. ஏறக்குறைய கை சரியாகிக் கூடி விட்டது. அவன் முன் போல் தன் அண்ணனோடு பள்ளிக்கூடம் போகத் தொடங்கிவிட்டான். புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் பொய்யும் புளுகுமாகக் கணக்குக் காண்பித்து பூரணி எதிர்பார்த்திருந்த தொகைக்குச் சரிபாதி கூடத் தேறாத ஒரு தொகையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார். அரிய முயற்சியின் பேரில் அப்பாவின் சேமிப்பு நிதியில் கல்லூரிப் பங்குக்கு உரிய ஒரு பகுதி வந்து சேர்ந்தது. சாதாரணமாக மாதக் கணக்கில் காலந்தாழ்த்தி கிடைக்க வேண்டிய பணம் அது. அனுதாபமுள்ளவர்களின் உதவியாலும், கல்லூரி முதல்வர் காட்டிய அக்கறையாலும் தான் அவளுக்கு அவ்வளவு விரைவில் கிடைத்ததென்று சொல்ல வேண்டும். மீனாட்சி அச்சக உரிமையாளரும், அரவிந்தனும் அவளுடைய தந்தையின் நூல்கள் ஒழுங்காகவும், முறையாகவும் வெளி வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

காலையில் வீட்டு வேலைகளும் மாலையில் மங்கையர் கழகத்தில் வகுப்பு நடத்தும் வேலைகளும் இருந்ததனால் பூரணிக்கு ஓய்வு அதிகமாக இல்லை. துன்பங்களையும் கவலைகளையும் நினைத்தே குமுறிக் கொண்டிருந்த அவள் மனத்தில் சற்றே அமைதி நிலவியது. மின்சார விசிறி ஓடத் தொடங்கி விட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது. நிற்கும் போதுதான் பிளவுகள் தெரிகின்றன. ஒரு செயலுமின்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போதுதான் உலகம் பெரிய துன்பங்களும் மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுபட்டுத் தெரிகிறது. உழைப்பு ஒரு நல்ல மருந்து. அதில் மனப்புண்களும், கவலைகளும் ஆறுகின்றன. சோர்வும் தளர்வும் ஒடுங்கிவிடுகின்றன.

கமலாவின் பெற்றோர்கள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசிக்கொண்டு திரும்பி விட்டார்கள். அடுத்து எல்லா ஏற்பாடுகளும் தொடர்ந்து நிகழலாயின. கமலாவின் பெற்றோர் ஊர் திரும்பிய மறுநாளைக்கு அடுத்த நாள் மாலையே பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தார்கள். கமலாவின் தாயாருக்கு உதவியாக உடன் இருந்து வந்தவர்களுக்கு உபசாரம் செய்வதற்காகப் பூரணியும் அன்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். பூரணி தன் கைகளால் தானே கமலாவுக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டி, பார்க்க வந்தவர்களுக்கு முன்னால் கொண்டு போய் அழகுப் பதுமையாய் நிறுத்தினாள். கமலாவை அழகு புனைவதும், அழகு பார்ப்பதுமாக அந்த ஒருநாளை விளையாட்டுத்தனமான மகிழ்ச்சியில் கழித்தாள் பூரணி. கமலாவின் திருமணம் உறுதியாயிற்று. அதே தை மாதம் திருமணத்துக்கென்று நாளும் குறித்துவிட்டார்கள்.

இது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் பூரணிக்கு மிகவும் வேண்டியவர்கள் வீட்டில் இன்னொரு திருமணமும் அவசரமாக முடிவாயிற்று. ஓதுவார்க்கிழவர் பெரிய இடமாக ஆங்கிலப் படிப்பும் படித்துப் பெரிய வேலை பார்க்கும் பையனைத் தன் பேத்தி காமுவிற்குப் பார்க்க முடியாது. அவருக்கு அவ்வளவு வளமான வசதிகள் எல்லாம் இல்லை. உறவுக்குள்ளேயே கோயிலில் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பையனைப் பிடித்துக் காமுவுக்கு முடிபோட ஏற்பாடு செய்துவிட்டார். கமலாவின் திருமணம் நிகழ இருந்த அதே நாள் தான் காமுவின் திருமணத்துக்கும் ஓதுவார்க் கிழவர் பார்த்திருந்தார். அவசரமாகப் போய்ச் சேரவேண்டிய கடிதத்தை உடனே அஞ்சலில் சேர்த்துவிடத் துடிக்கிறாற் போல் அந்தத் தை மாதத்தின் முகூர்த்தங்களுள் தத்தம் பெண்களை வாழ்க்கைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் பெற்றோர்களைத் தன்னைச் சுற்றிலும் கண்டாள் பூரணி. அப்படி அவசரப்படவும் துடிக்கவும் யார் இருக்கிறார்கள் அவளுக்கு. அவளுக்கு அவள் தான் இருக்கிறாள். ஓதுவார் வீட்டுத் திருமணத்துக்கு முன் தாம்பூலம் மாற்றிக் கொள்கிற அன்று அவளும் போயிருந்தாள். அப்போது ஓதுவார் வீட்டுப் பாட்டி “என்னடி பெண்ணே? இப்படி எத்தனை நாளைக்கு மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்குமாக நடந்து ஒண்டிப் பிழைப்புப் பிழைக்கப் போகிறாய்? கமலாவுக்கும் எங்கள் வீட்டுக் காமுவுக்கும் உன்னைவிடக் குறைந்த வயதுதான் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ, இப்படியே இருந்துவிடலாமென்று பார்க்கிறாயா? யாராவது ஒரு நல்ல பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அவன் நிழலில் போய் இருந்து கொண்டு தம்பிகளையும் தங்கையையும் படிக்க வைக்கலாமே! இல்லாவிட்டால் இப்படித்தான் நீ மட்டும் தனி மரமாக நின்று கொண்டு இருக்கப் போகிறாயா? உனக்கு உன் மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள்? நீயாகத்தானே தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று பூரணியின் அருகில் வந்து நீட்டி முழக்கிக் கொண்டு கேட்டாள்.

பூரணி ஏதும் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்து மௌனமாக இருந்தாள். ‘எதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லையோ, எந்த இடத்தைப் பற்றி பேசும்போது என் வார்த்தைகள் வெற்றோசையாய் ஆற்றலற்றுப் போகின்றனவோ, எந்த உணர்ச்சியைத் தேடும்போது என் சொற்களின் பொருளுணர்ச்சி மங்கிவிடுகிறதோ – அந்த உணர்வை – அந்த இடத்தை இந்தப் பாட்டி விளக்கச் சொல்லிக் கேட்கிறாள். எப்படி விளக்குவேன்? எங்கிருந்து விளக்குவேன்?’ என்று ஏங்கிக் குமைந்தாள் பூரணி. அன்று முழுவதும் இந்த எண்ணம் அவள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்கிற நாய்கள் மாதிரி ஏன் இப்படித் தானும் பறந்து கொண்டு மற்றவர்களையும் பறக்க அடிக்கிறார்கள். இப்படித் திருமணம், வளைகாப்பு, குழந்தை – குடும்பம் – மறுபடியும் திருமணம், வளைகாப்பு என்று ஓட ஓட விரட்டுவது தான் வாழ்க்கையா? இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா? என்று நினைத்தபோது ஏதோ ஓருணர்வு கல்லாகக் கனத்துப் பரவி அவள் நெஞ்சை இறுக்கி நசுக்குவது போல் இருந்தது. அன்று இரவு படுக்கையில் தலையணை நனைத்து ஈரமாகும்படி நெடுநேரம் அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

பூரணி ஒவ்வொரு நாள் மாலையும் மங்கையர் கழகத்துக்குப் போய் அதே வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நாள் தவறாமல் அரவிந்தனைச் சந்திக்க நேரமிருக்காது அவளுக்கு. இரண்டொரு நாள் கழகத்து வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது அவனைப் பார்க்க நேரிடும். அப்படிப் பார்க்கும் போது சிறிது நேரம் பேசிவிட்டு வருவாள். சில நாட்களில் பகலில் அரவிந்தனே திருப்பரங்குன்றத்துக்கு வந்து அவள் தந்தையின் வெளிவர வேண்டிய நூல்களுக்கான கையெழுத்துப் படிகளை வாங்கிக் கொண்டு போவான். இன்னும் சில நாட்களில் மங்களேசுவரி அம்மாளும் இளைய பெண் செல்லமும் வந்தார்கள். முருகனைத் தரிசனம் செய்துவிட்டு பூரணியின் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.

புதிய வீட்டில் ஓர் அறையை முழுவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அப்படியும் இடம் போதவில்லை. நெருக்கடியோடு சிரமப்பட்டுப் புத்தகங்களை அதற்குள் அடுக்கியிருந்தாள். புத்தகங்களைத் தவிர நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார இடமிருக்கும் அங்கே. தம்பிகளுக்குச் சாப்பாடு போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பின் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புத்தக அறைக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும் பூரணிக்கு. அப்பா சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உலகில் மூழ்கிவிடுவாள் அவள். அப்படி மூழ்கினால் தான் தினந்தோறும் மங்கையர் கழகத்து வகுப்புகளில் தன்னிடம் படிக்கும் பெண்களுக்குப் புதுப்புதுக் கருத்துக்களைச் சொற்பொழிவு செய்ய அவளால் முடியும். குழந்தை மங்கையர்க்கரசியால் அவள் படிப்புக்கு இடையூறு இருக்காது. வீட்டுக்குள்ளேயோ, வெளியில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனோ விளையாடப் போய்விடுவாள் அவள். சில சமயங்களில் கமலாவாவது காமுவாவது அரட்டைப் பேச்சுக்கு வருவார்கள். திருமணம் நிச்சயமான பின்பு இரண்டு பெண்களுமே வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். அதனால் பூரணிக்குக் கிடைப்பதற்கரிய தனிமை கிடைத்திருக்கிறது. அந்தத் தனிமையில் அவளுடைய மனத்தின் குறிக்கோள்கள் மேலும் நன்றாக மலர்ந்தது. தன் இலட்சிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டாள் அவள்.

திருமண நாளன்று பூரணி இரண்டு வீடுகளிலும் மாறி மாறி இருந்து உதவினாள். கமலாவின் வீட்டில் அவள் இருந்து செய்யாவிட்டாலும் செய்வதற்கு வேறு மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் ஓதுவார் வீட்டுத் திருமணம் ஏழைத் திருமணம். குறைவான ஏற்பாடுகளுடன் நடந்தது. பூரணி அங்கே தான் அதிக நேரமிருந்து உதவினாள். வந்தவர்களுக்குச் சந்தனம், வெற்றிலை பாக்குக் கொடுத்தாள். ஓடியாடிச் சாப்பாடு பரிமாறினாள். அந்த இரண்டு வீட்டுத் திருமணங்களிலும் எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிகிறார் போலவும், எல்லா காரியங்களிலும் அவளே முன் நின்று செய்கிறாள் போலவும் வந்திருப்பவர்களுக்குத் தோன்றும்படி பம்பரமாகச் சுழன்றாள் அவள். இரண்டு வீட்டுத் திருமணங்களுக்கும் வந்திருந்த எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவள் இவள் ஒருத்திதான். கமலாவின் கணவனுக்கோ வடக்கே எங்கோ வேலை. திரும்பவும் ஒருமுறை வந்து கூட்டிக் கொண்டு போக வசதிப்படாதாம். திருமணம் முடிந்த நாலாவது நாளோ, ஐந்தாவது நாளோ கூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான். கமலாவை வழியனுப்ப தொடர்வண்டி நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. ஓதுவார்க் கிழவருடைய மாப்பிள்ளை உறவுக்காரனாக இருந்தாலும் வேறு ஊர்க்காரன். தெற்குச் சீமையில் ஏதோ ஒரு சிறிய ஊரில் கோயிலில் ஓதுவார் அவன். ஒரு வாரத்தில் அவனும் காமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். அன்றும் தொடர்வண்டி நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. தோழிகளை வடக்கிலும் தெற்கிலுமாக வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பொழுதுகளில் அவள் மனம் நலிந்து வருந்தியது. நல்ல கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது யாராவது உடனுக்குடன் அடித்துத் தட்டி எழுப்பிவிடுகிற மாதிரி அந்தப் பிரிவுகள் அவளை வேதனையுறச் செய்தன. என்னென்னவோ எண்ணினாள் அவள்.

வாழ்க்கையே இப்படித் தொடர்ந்து வழியனுப்பிக் கொண்டிருக்கிற ஒரு சடங்குதான் போலும். ஊருக்கு வழியனுப்பினால் பயணம்! உயிர்களை வழியனுப்பினாலும் அது ஒருவகைப் பிரயாணம். தோழிகள் ஊருக்குப் போன பின் இரண்டு மூன்று நாட்களுக்கு அவள் உள்ளம் இத்தகைய நலிவுள்ள நினைவுகளையே நினைத்தது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி