தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – தொடர்ச்சி)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங]
3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)
“போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு : பக்கம்23-24)
ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளது போன்று பேராசிரியர் இலக்குவனார் அமைத்துத் தந்த தமிழின மறுமலர்ச்சிக்கான அடித்தளமே தமிழ்க்காப்புப் போர்க்களத்தை வடிவமைத்தது. அஃதாவது, பேராசிரியர் இலக்குவனாரின் பேருரைப்பணிகூட போராளியின் போருரையாக அமைந்தமையால் ஏற்பட்டனவே, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரின் வெற்றியும் 1967 இல் நடைபெற்ற ஆட்சி மாற்றமும்.
பேராசிரியர் இலக்குவனாரின் பொழிவுகள், கட்டுரைகள், நூல்கள், இதழ்கள் முதலான யாவுமே தமிழ்நலம் சார்ந்தவையே. மறைக்கப்பட்ட தமிழின் சிறப்பைப் புலப்படுத்துவனவே. ஆரியப் பற்றாளர்களும் அதனை அறியாமல் ஏற்றவர்களும் ஏற்படுத்திய மாசினை அகற்றிய போராட்ட உணர்வினவே. தமிழ்த்தாய் ஆரியக் கடனால் பிழைத்து வருவதாகத் தவறாக உரைப்போர்க்கு நுண்மாண்நுழைபுலத்துடன் ஆராய்ந்து அறிந்து தமிழின் தொன்மையையும் தூய்மையையும் தமிழ் வரிவடிவத்தால் வரிவடிவம் பெற்றுத் தமிழின் சொல்வளத்தால் சொற்பெருக்கம் பெற்ற ஆரியத்தின் தமிழ்ச்சார்பு நிலையையும் தெளிவாக எடுத்துரைத்தார். திருக்குறளில் உள்ள சொற்கள் யாவுமே தனித்தமிழ்ச் சொற்கள் என நிறுவினார்; சங்க இலக்கியங்கள் தமிழ்ப்பண்பாட்டை, தமிழர் வரலாற்றை உணர்த்தும் தனித்தமிழ்ப் படைப்புகள் என்பதை மெய்ப்பித்தார்; தொல்காப்பியம் முதல் நூலே எனவும் கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சிற்றெல்லையாகவும் கி.மு.10ஆம் நூற்றாண்டைப் பேரளவாகவும் கொண்டது என்றும் உணர்த்தினார்; மலைபடுகடாஅம் தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் என்பதை வெளிப்படுத்தினார்; ஆரியத்தால் தமிழுக்கு நேர்ந்து வரும் தீமைகளைப் புலப்படுத்தினார்; தமிழ் வாழத் தமிழர் சிறந்து வாழ வேண்டும் என்றும் தமிழர் வாழத் தமிழ் நிலைத்து வாழ வேண்டும் என்றும் வேண்டினார்; இவற்றை எல்லாம் மக்களிடையே பரப்புவதற்காகத் தன்னலம் கருதாப் போராளியாக வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் முதன் முதலில் அஞ்சல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் இலக்குவனாரே.(முனைவர் மறைமலை: பக்கம் 83 : இந்திய இலக்கியச்சிற்பிகள்: சி.இலக்குவனார்) தமிழ் இலக்கியத்திற்கான தனிப்பயிற்சிக் கல்லூரியை நிறுவிய முதலாமவரும் பேராசிரியரே ஆவார். பணியாற்றும் இடங்களில் எல்லாம் தமிழ்க்கல்விக்கான மாலைநேரப் பயிற்சியை அளித்த பெருந்தகையும் அவர்தாம். ‘தாம் பெற்ற கல்வி பெறுக இவ்வையம்’ என மக்களின் கல்வி நலனுக்காக வாழ் நாளெல்லாம் உழைத்த போராளி அவர்.
கற்பித்தல் என்பது தாம் அறிந்தவற்றை மாணவர்க்கு மட்டுமல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துதல் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் அழுத்தமான கருத்து. இவ் வடிப்படைக் கொள்கையும் இக்கொள்கை வழி நின்று நிலைத்ததுமே பேராசிரியர் இலக்குவனாரின் வாழ்வைப் போர்க்களமாக்கியது. கற்பித்தல் குறித்த பேராசிரியர் இலக்குவனாரின் பின்வரும் விளக்கம் இதனை உணர்த்தும்:
“தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பயின்றவர்கள் இன்றுள்ள தமிழின் நிலையை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள். வருந்துகின்றோர் தமிழைக் காக்கத் தம்மால் ஆனதைச் செய்ய முற்படுவதுதான் இயல்பு. யானும் தமிழைக் காக்கும் தொண்டில் ஈடுபட்டேன்.”
கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களோடு தொடர்பு கொள்ளுதல் மட்டும் போதாது. வகுப்புக்கு வெளியிலும் பொதுமக்களோடு தாம் கற்ற பரந்த கல்வியின் பயனால் ஆழ்ந்த ஆராய்ச்சியின் தொடர்பால் பெற்றுள்ள அறிவை மக்களுக்கு வரையாது வழங்க வேண்டும். இக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே பெருநகரங்களில் மக்கள் தொடர்புச் சொற்பொழிவுகள் பேராசிரியர்களைக் கொண்டு நிகழ்த்துவிக்கின்றனர். பேராசிரியர் எனும் பொருளைத் தரும் ‘புரபசர்’ என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பொருள், “தாம் அறிந்ததைக் காய்தல் உவத்தல் அகற்றிப் பிறர்க்கு வெளிப்படுத்துதலைத் தொழிலாக உடையவர் என்பதாகும்.” (பேராசிரியர் சி.இலக்குவனார்: செந்தமிழ்க் காப்பு தந்த சிறை வாழ்வு குறள்நெறி:1.1.66)
இதன் தொடர்ச்சியாக இவற்றிற்கிணங்கத் தாம் ஆற்றிய பணிகளைப் பேராசிரியர் இலக்குவனாரே மேற்குறித்த கட்டுரைத் தொடரில் பின்வருமாறு குறித்துள்ளார்:
ஆகவே, யான் ஆராய்ந்து கற்றறிந்தவற்றைச் சொற்பொழிவு வாயிலாக வெளிப்படுத்தினேன். விடுமுறைக் காலங்களில் வெளியூர்கட்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றும் திட்டங்களை யானே மேற்கொண்டேன். பணிபுரிந்த ஊர்களில் தமிழோடு தொடர்புடைய கழகங்கள் ஏற்படுத்தி ஞாயிறு தோறும் சொற்பொழிவுகளும் வகுப்புகளும் நடத்தும் திட்டங்களை உருவாக்கினேன். மதுரையிலும் தமிழ்க்காப்புக் கழகம் எனும் ஒன்றினை ஏற்படுத்தினேன்.
சொற்பொழிவுகள் என்றால் இன்றைக்கு உள்ளதுபோல பெருந் தொகைகளைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஊர்தி வசதிகளையும் தங்குமிட வசதிகளையும் கேட்டு எய்தி மக்கள் நலன் பற்றி எண்ணாமல், துணுக்குத் தோரணங்களை அள்ளிவீசிவிட்டு வருவதல்ல. தம் சொந்தச் செலவில் பயணங்களை அமைத்துக் கொண்டு தமிழ் நெறிபரப்பும் பணிகளைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மேற்கொண்டமையாகும். அன்றைய நிலையில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் முதுநிலைத் தமிழ்ப்பேராசிரியர், பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே. அப்போது துணைவேந்தர்களாக வந்த தமிழ்ப்பேராசிரியர்கள் எல்லாம் பிற துறைகளில் இருந்து தமிழ் ஆசிரியராக வந்து அரசியல் செல்வாக்கால் பதவி அடைந்தவர்களே. ஆனால், வேறு பணிக்கும் வேறு துறைக் கல்விக்கும் வாய்ப்பு இருந்தபோதும் அவற்றை உதறிவிட்டுத் தமிழ்க்கல்வியையும் தமிழ்ப்பணியையும் தேர்ந்தெடுத்த பேராசிரியர், கூடுதல் ஊதியம் பெற்றாலும் அவற்றைக் குடும்பத்திற்காகச் செலவிடவில்லை. அவ்வாறு அவர் நடந்து கொண்டிருந்தால் பெரும் செல்வந்தர் ஆகி இருப்பார். ஆனால், ஆசிரியர் வேலை என்பது பொழுதுபோக்கிற்காக என்பதுபோல் வேறுவகையில் வருவாய் திரட்டும் சிலர் போல் அல்லாமல் – ஏதோ வேலை பார்க்கிறோம் என்ற அளவில் ஒப்புக்கு வேலைபார்ப்போர்போல் அல்லாமல் – பயிற்றுவிக்கும் கடமையைச் செவ்வனே செய்தால் போதும் எனக் கற்பிப்பதில் கருத்து செலுத்தும் சிலர் போல் அல்லாமல் – ஆசிரியர்களின் வேலை மன்பதைக்குக் கற்பிப்பது எனக் கொண்டு வாழ்ந்த பேராசிரியர், தம் வருவாயைத் தமிழ் விழிப்புணர்வுப் பணிகளுக்காக மேற்கொண்டார். அன்றைக்கு அவர் நான்கு சுவர்களுக்குள் அல்லது கல்விநிலைய வளாகத்திற்குள் தம் பணியை அடைத்து இருந்தார் எனில் செல்வர் பட்டியலில் வேண்டுமானால் இடம் பெற்றிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் தம் கல்விப்பணிப் பரப்பைக் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் விரிவாக்கியமையால், பரந்த தமிழ் உலகத்தவர் உள்ளமெங்கும் இன்று இடம் பெற்றிருக்கின்றார்.
“ஆற்றலுக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம்” என்பதே பேராசிரியர் கொள்கை (என் வாழ்க்கைப் போர்: இளமைப்பருவம்) எனவே ஒல்லும் வகையெல்லாம் தமிழ் பரப்பலுக்கும் உரிமைக்கும் என உழைத்தார். பொருள் ஈட்டுவதற்கான பணியில் பெற்ற வருவாயில் அடிப்படைத் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு அவற்றிற்கென மட்டும் செலவழித்து விட்டு எஞ்சியதைத் தமிழ் மன்பதைக்காகச் செலவிட்டார். இப்படி ஒரு பேராசிரியரை இனி உலகம் காணாது என அவர் மாணாக்கர்களும் தமிழன்பர்களும் சொல்லிய வண்ணம் பிறருடன் ஒப்பிட இயலாத அளவிற்குத் தம் உடல், பொருள், ஆவியைத் தமிழுக்குத் தந்தார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply