[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு)  தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ)

இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி

  1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு வே.வ.இராமசாமி அவர்களும் கூட்டாதரவு முறையில் அறிவியல் அறிஞரையே ஆதரித்தார். ஆனால்,  தேர்தல் முடிந்ததும் நாடார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே நாடார் தலைவரை எதிர்ப்பதா எனக் கருதிய கல்லூரி ஆட்சிக்குழு பேராசிரியர் இலக்குவனாரைப் பணியில் இருந்து நீக்கியது. ஆனால், அதே போல் நாடார் தலைவரை எதிர்த்த கல்லூரிச் செயலர் நாடார் என்பதால் அவரை நீக்கவில்லை. பேராசிரியர் இலக்குவனாரைக் கருஞ்சட்டை இயக்கத்தின் தீவிரவாதி எனக் குறிப்பிட்டு வேலை நீக்கம் செய்யுமாறு முன்பு அரசு மடல் அனுப்பிய பொழுது, கல்லூரியில் தம் கடமையைச் செவ்வனே ஆற்றும் அவர் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் பணிகளுக்காக அவரைக் கல்லூரியை விட்டு நீக்க முடியாது என எந்தக்கல்லூரி ஆட்சிக்குழு அவரை நீக்க மறுத்ததோ, அதே கல்லூரி, சாதிச் சேற்றில் உழன்று மனங் கலங்கியது; நிலை குலைந்தது; அறம் பிறழ்ந்தது; பணியில் இருந்து நீக்கியது.

 பணி நீக்கத்திற்காகக் கொடுத்த குற்றச்சாட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அவர் தமிழ் விழாக்களை நடத்தினார் என்பதுதான். பேராசிரியர் இலக்குவனார் நடத்திய தமிழ் தழைக்கும் விழாக்களால் புகழ் பெற்று மகிழ்ந்த கல்லூரி ஆட்சிக் குழுவினர் அவரை வேண்டாதவராகக் கருதியதும் அவற்றையே குற்றமாகக் கருதினர். போராளிகளைக் கண்டு அஞ்சுவதுதானே அரசுகளின் இயல்பு. ஒருவரை வேண்டியவராகக் கருதும் பொழுது ஒரு நிலையும்  வேண்டாதவராகப் புறக்கணிக்கும் பொழுது மறு நிலையும் எடுப்பதுதானே ஆள்வோர் இயல்பு. அதற்கேற்பவே இக்கல்லூரியினரும்  சாதித்திரையால் கண்களை மறைத்துக் கொண்டு பேராசிரியர் இலக்குவனாரைப் பணியில் இருந்து நீக்கினர். விருதுநகர் மக்கள் திரண்டு ஊர்வலமாகச் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெரியார் முதலான தலைவர்களும் பணி நீக்கத்தைக்  கைவிட வேண்டினர். பின்னர்ப் பேராசிரியர் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியத்தையே தம் குமுறலாக எழுதி வெளியிட்டார்.

 பேராசிரியர் இலக்குவனார் தஞ்சாவூர் சென்று இலக்கியம் அச்சுக்கூடம், பெரியார் தனிப்பயிற்சிக் கல்லூரி, இலக்கியப்பண்ணை ஆகியவற்றை நிறுவியதுடன், திராவிடக் கூட்டரசு என்னும் தமிழ் இதழையும்  Dravidian Federation ஆங்கில இதழையும் நடத்தித் தம் தொண்டினைத் தொடர்ந்தார். உயர் செல்வம், உயர்பதவி உடையவராயினும் தமிழ்ப்பகைவர் எனில் அவரைத் தம் பகைவராகவும் மிகவும் எளியராக இருப்பினும் தமிழ் அன்பர் எனில் அவரைத் தம் உறவாகவும் கருதுபவர் பேராசிரியர் இலக்குவனார். எனவே, தமிழ் நலனுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் கடுமையாக எதிர்ப்பதையே தம் கடமையாகக் கொண்டார்.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து

  தரணியொடு வானாளத் தருவரேனும்

 மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம்

  மா(த்)  தமிழுக்கே அன்பர் அல்லராகில்

 எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி

  இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடையரேனும்

 தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில்

  அவர்கண்டீர் யாம் வணங்கும்கடவுளாரே.

எனப் பேராசிரியர் இலக்குவனாரே தமிழன்பர் எத்தகைய இழி வாழ்க்கை நடத்தினாலும் அவரே தாம் வணங்கும் கடவுளர் எனவும் தமிழன்பர் அல்லாதவர்  வான்அளவு செல்வம் தந்தாலும் அவர்களை மதியேன் எனவும் கூறியுள்ளார். அவரது இந்நெஞ்சுரத்திற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஒன்றைப் பார்ப்போம்.

(தொடரும்)