தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி]
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே)
இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி
பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி பெறாது. ஆகவே, பெரியார் அவர்கள் காங்கிரசுக் கட்சிக்கு உதவுவதை விடுத்துத் தம் உயிர்க் கொள்கைக்கு உறுதுணையாய் நிற்போரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகிறேன்.
பிரிவினை என்பது நாட்டைத் துண்டுபோடுவது அன்று. உரிமை ஆட்சியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் அளித்துப் பின்னர்க் கூடிவாழும் சூழ்நிலையை உருவாக்குதலே.
(குறள்நெறி 15.5.66)
பேராசிரியர் இலக்குவனார் நடத்திய இதழின் தலைப்பில் (திராவிடக்) கூட்டரசு இருப்பினும் முன்னர்த் தெரிவித்ததுபோல் தனி உரிமை உடைய மொழிவழி நாடுகள் அமைய வேண்டும் என்றும் அவை விருப்பத்திற்கேற்ப கூட்டரசு அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தி வந்தார். இந்தியத்திற்கு மட்டுமல்லாமல் தனித் திராவிடத்திற்கும் எதிராகவே மொழிவழித் தேசியத்தை அன்றைய நிலையில் வேறு யாரும் வலியுறுத்தவில்லை. பேராசிரியர் தொலைநோக்கு உணர்வுடன் கூறுவது போல் இந்தியக் கண்டம் மொழி வழி அமையும் நாடுகளின் கூட்டரசாகத் திகழ்ந்தால் அக்கூட்டரசு வலிவும் பொலிவுமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் பள்ளியை நடத்த பணியாட்சி அறிந்த கல்வியாளர் தேவை என்பதால் பேராசிரியரை அழைக்க அவரும் அங்கே சென்று முதல்வர் பொறுப்பை ஏற்றார் (30.11.52-30.09.53). கல்லூரியில் இருந்து பள்ளிக்கு வந்து விட்டோமே என எண்ணாமல் கல்விக்கூடம் யாவுமே கோயில் என எண்ணிப் பணியாற்றினார்.
திருவெறும்பூர் முக்குலத்தோர் பள்ளியின் முதல்வராகப் பேராசிரியர் பணியாற்றிய பொழுது அங்கே எழுத்தராக இருந்த பல்குரல் மன்னன் திரு முருகு பாண்டியன் பேராசிரியர் பற்றிய நினைவைப் பின்வருமாறு போற்றுகிறார்:
“இப்பள்ளி நிதிநிலையில் மிகவும் இடர்ப்பட்ட நிலையில் இருந்த பொழுதுதான் பள்ளிச் செம்மைக்கெனப் பேராசிரியரை முதல்வராக ஆக்கினர். அவர் வந்தபின்புதான் பாண்டியராசன் என்னும் பெயரை மாற்றி முருகுபாண்டியன் எனப் பெயர் சூட்டி, நான் தமிழ் படிக்கவும் வழி செய்து தந்தார். பள்ளியில் சம்பளத்திற்கான பொருளுதவி வராத சூழலில் பேராசிரியர் நகைகளை அடகு வைத்துப் பள்ளிச் செலவிற்கென அளித்து விடுவார். என்றேனும் ஒரு நாள் அவருக்குப் பணமுடை மிகுதியாக இருந்தால் ‘என்னய்யா பள்ளிக்கு எதுவும் வருவாய் வந்துள்ளதா’ என்பார். அவ்வாறு ஏதேனும் வருவாய் வந்திருக்கும் பொழுது நான் அதில் இருந்து அவர் தந்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுப்பேன். இதை மறவாமல் குறித்துக் கணக்கு வைத்துக் கொள் என்பார். ஆனால், ஒரு நாளும் அவர் பள்ளிக்கு நிதி உதவிய பொழுது அதைக் கணக்கில் வைத்துக் கொள் என்று சொன்னதில்லை.
அவர் இப்பள்ளியை விட்டு நீங்கி ஐந்தாண்டுகள் ஆன பின்புதான் அவருக்கு வர வேண்டிய சம்பளத் தொகை வந்தது. அதை மட்டும் தவறாமல் அனுப்பி வைத்தோம். அப்பொழுது கூட அவர், ‘நான் பள்ளிக்குத் தந்த பணம் வரவில்லையா? எப்பொழுது வரும்?’ என்றெல்லாம் கேட்டதில்லை.”
இவ்வாறு நினைவுகூர்ந்து வியக்கும் திரு முருகுபாண்டியன் பேராசிரியர் பற்றிய மற்றொரு செய்தியையும் உணர்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.
(தொடரும்)
Leave a Reply