(படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.)

 

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார்.

சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும்.

2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன.

2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும் 27/2/2017-ஆம் நாளில் சென்னையில் நடைபெற்ற  சிலப்பதிகாரப்பெருவிழாக்கள் சென்னை எம்ஞ்சிஆர். சானகி கல்லூரியுடன் இணைந்து அக் கல்லூரியில் நடைபெற்றன.

    முனைவர் எம்ஞ்சிஆர். சானகி கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் புரட்சித்தலைவர் அவர்களின் புகழ்பூத்த குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகிய திருமதி. இலதா இராசேந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவுக்கு ஒளியும் பொலிவும் வழங்கினார்.

  முத்தமிழ்க்கலா வித்துவ இரத்னம் ஔவை தி.க.சண்முகனாரின் மூத்த புதல்வர் முதிர்ந்த இசைவாணர் தமிழிசைத்தென்றல் தி.க.ச.கலைவாணன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்

   மாசி 15, 2048 / 27/2/2017-ஆம் நாள் காலை 10-30 மணிக்குத் தொடங்கிய விழாவில் இக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் மொழிப்புலத்தின் முதன்மையராகவும் பணியாற்றும் பேராசிரியர் அபிதாசபாபதி கல்லூரியின்  சார்பாக வரவேற்புரை  வழங்கினார்

விழாக்குழுவின் சார்பில்  கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்  வரவேற்புரையாற்றினார். அவர் தமது வரவேற்புரையில் சிலம்பின் தனிச்சிறப்புப் பற்றியும்  சிலப்பதிகார அறக்கட்டளை நிறுவிய சிலம்பொலியார் அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும் விரிவாகப் பேசினார்.

ப.கு.பெ. கல்விக்குழுமங்களின் தலைவரும் தொழிலதிபருமாகிய பழனி கு.பெரியசாமி அவர்கள் விழாவுக்குத்  தலைமை தாங்கினார். புரட்சித்தலைவரின் பேரன்பினைப் பெற்றவர் பழனி கு.பெரியசாமி. மக்கள்திலகத்தின் உடல்நலனைப் பேணும்வகையில் தக்கநேரத்தில் உற்ற துணை புரிந்தமையால் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அளவிலாப் புகழ்பெற்ற அருஞ்செயலாளர். சிறப்புவாய்ந்த பேராசிரியராக அமெரிக்கநாட்டில் பெருமிதமிக்க பணியாற்றியவர். கழனி செழிக்கவும் கட்டடங்கள் பெருகவும்  மருத்துவம் சிறந்தோங்கவும் தொழில்பல ஆற்றிடும் தொழிலதிபர். இவற்றை விடச் சிலம்பொலியாரின் சிறப்புமிக்க மாணவர்களுள் தாமும் ஒருவர் என்பதனைப் பெருமையாகக் கருதும் பெருந்தகையாளர். அழகுத்தமிழில் அருமைமிக்க தலைமையுரை ஆற்றினார்.

  சென்னை உயர்நீதிமன்றத்தின் மக்கள்நீதிமன்ற நடுவர், நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் விருதுகள் அளித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாட்டில் துலைக்கோலின் முள்ளாக முறைவழங்கும் நடுவர்களின் நாயகம் எனப் பாராட்டத்தக்க நீதியரசர் தி.ந.வள்ளிநாயகம் இனிய தமிழில் சிலம்பின் சீர்மையையும் சிலம்பொலியார் அவர்களின் தொண்டுள்ளத்தையும் போற்றித் தமது வாழ்த்துரையை வழங்கினார்.

 2016-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன்.கோ.சரவணன் செல்வி கோ.சு.சிம்ஃகாஞ்சனா ஆகியோர்க்கு பேராசிரியர் இராம.குருநாதன், விழிகள் தி.நடராசன் ஆகியோரால் வழங்கப்பட்டன.

  2017-ஆம் ஆண்டுக்கான இளைய சிலம்பொலி விருது செல்வன் அருணை மா.மதன்குமார், செல்வி ஆர் சிரீகீர்த்தனா ஆகியோர்க்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர்.மணிமேகலை வழங்கப்பட்டது.

 2016-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது ‘சிலம்பொலியாரின் சீர்மிகு முன்னோடியாகிய  சிலம்புச்செல்வர் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பெற்றது. ம.பொ.சி. அவர்களின் அன்புப்புதல்விகள் மாதவி பாசுகரன், கண்ணகி, சிலம்புசெல்வரின் புதல்வர் திருநாவுக்கரசு  பிள்ளைகளுக்கு எனப் பகிர்ந்து (உரூ.35,000 வீதம்) வழங்கப்பெற்றன.

  2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருது சேக்சுபியரையும் மில்டனையும் கீட்சையும் முழங்கிய வாயால் சிலப்பதிகாரத்தைச் செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் உலகெலாம் பரப்பிவரும் முனைவர் கா.செல்லப்பனார், ‘சிலம்பு மறு வாசிப்பு’ என்னும் நூலை இயற்றிய திறனாய்வாளர் பேராசிரியர் தி.சு.நடராசன் ஆகியோர்க்குப் பகிர்ந்து (உரூ.50,000/ வீதம்) வழங்கப்பெற்றன.

 நிறைவாக முனைவர் கா.செல்லப்பனார், இளங்கோ அடிகளையும் சேக்சுபியரையும் ஒப்பீடு செய்து ஓர் அரிய உரையாற்றினார்.

  முனைவர் எம்ஞ்சிஆர். சானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பதின்மர் கொண்ட நாட்டியக்குழு வித்தகக் கலைஞர்களின் வழிகாட்டுதலில் முத்தமிழ்க்காப்பியமாம் சிலப்பதிகாரத்தை நாட்டிய நிகழ்ச்சியாகக் கலைநலன் மிளிர நடத்தி அவையினர் அனைவரையும் வைத்த கண் இமைக்காமல் பார்க்கவைத்தனர்.

விரிவிற்குக் காண்க:

http://paechu.blogspot.in/2017/02/2017.html

 

-முனைவர் மறைமலை இலக்குவனார்