[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)

  இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி இருக்கலாம்.  “தமிழார்வலருக்கே தமிழ்ப் பேராசிரியரை முதல்வராக அமர்த்த எண்ணம் வராவிடில் பிறர் எங்ஙனம் தமிழ்ப்பேராசிரியரை மதிப்பர்” என்ற எண்ணம் பேராசிரியர் இலக்குவனாருக்குத்  தோன்றியது.

 தாம் பணியாற்றும் கல்விநிலையங்களில் எல்லாம் அக்கால, இக்காலப் புலவர்கள் விழாக்களை நடத்துவது பேராசிரியர் வழக்கமாயிற்றே. அதேபோல் ஒரு முறை பாவேந்தர் பாரதிதாசன் விழா நடத்தினார். மூன்றுநாள் நடைபெற்ற பாரதிதாசன் விழாவில் ஒவ்வொரு நாள் விழா இறுதியிலும் தமிழ் வாழ்த்தே பாடப்பட்டது. விரல்விட்டு எண்ணும் மாணவர்கள்  நாட்டுப்பாடலைப் பாடாமல் அதற்கு அவமதிப்பு செய்து விட்டதாக எதிர்ப்பு தெரிவித்தனர். வெளியில் இருந்த பேராயக் கட்சியினர் இவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்து, ‘தேசத்துரோகி இலக்குவனாரைக் கைது செய்’ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் என்றாலே ஒவ்வாமையாக என்றும் கருதும் பேராயக் கட்சியினர் பேராசிரியருக்குத் தொல்லைகள் தந்தமையைப் பேராசிரியர் இலக்குவனார் பொருட்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ் விழாவில் தமிழ்ப்பாடல் பாடுவதே முறை என உறுதியாய் நின்று அதனை எதிர்கொண்டார் பேராசிரியர் இலக்குவனார்.

  தமிழ்ப்பற்று மிக்க தாளாளர், தமிழறிஞர்கள் அணி செய்யும் தமிழ்த்துறை ஆகியவற்றால் நீண்ட காலம் – சூலை 1959 முதல் சூன் 1965 வரை – தியாகராசர் கல்லூரியில்தான் பேரா. இலக்குவனார் பணியாற்றினார். எதிர்ப்புகளுக்கிடையே தமிழ்ப்பணி ஆற்றியவர், தமிழ்ச்சூழல் வாய்த்த பொழுது வாளா விருப்பாரா? வழக்கம்போல் பொதுமக்களுக்கான தமிழ் வகுப்புகள், இலக்கியப் பரப்புரைகள், இதழ்ப்பணிகள் எனத் தமிழ்த் தொண்டுகளில் தம் வாழ்வைச் செலவிட்டார். மதுரையில் தமிழ்க்காப்புக் கழகம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.

   இதுவரை பேராசிரியர் இலக்குவனார் நிறுவிய அமைப்புகள் நிறுவிய இடங்களில் மட்டும்  தொண்டாற்றின. ஆனால், தமிழ்க்காப்புக் கழகம் நாடெங்கும் கிளைகளாய் விரிந்தது. கோலார் முதலான  பிற மாநிலப்பகுதிகளிலும் காலூன்றியது.

 “வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில்,

 ஆங் கிலமா வேண்டும்?

 ‘மாணுயர்ந்த செந்தமிழால் வரைக’ என

 அன்னவர்க்குச் சோல்ல வேண்டும்!

 அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சோல்

  ஆக்குவதே அன்றி, அச்சோல்

 குறைவற்ற தொடராகக் குற்றமற்ற

  சோல்லாக அமையு மாயின்

 மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தா?

 தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?

 குறியுற்ற மறவர்களே! இப்பணியை

முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும்.”

என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய கூட்டத்தை உருவாக்கும் அமைப்பாகத் தமிழ்க்காப்புக் கழகத்தை நடத்தினார் பேராசிரியர்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்