[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) 

  பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து,

இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள்

என்றார் முத்தமிழ்க்காலர் கி..பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான காரணங்களைப் பின்வருமாறு வெளியீட்டு விழாவில் பேராசிரியரும் தெரிவித்துள்ளார்.

இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந் தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று  தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செகிறார்கள். நான் அவர்களைக் குறை கூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை.

 செய்தியிதழ்களில் புலவர்களுக்குப் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது. அரசியல் தலைவர்களின் பேச்சுக்கும் திரைப்பட அரசிகளின் படத்துக்கும்தான் அவை பெருமதிப்பு அளிக்கின்றன. திரைப்பட அரசிகளில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கும். ஆனால், மக்களுடைய வினாக்களுக்கு அவர்கள்தான் விடை எழுதுவார்கள். மக்களிடையே இதற்கான ஆர்வம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்காது.

[குறள்நெறி வெளியீட்டு விழாவில் பேராசிரியர் சி.இலக்குவனார் உரை:

குறள்நெறி (மலர்1: இதழ் 12): தை19, 1995: 1.2.64]

  இந்தி முதன்மையை எதிர்ப்பதைத் தலையாய கடமையாகக் கொண்டு குறள்நெறி வெளிவருவது குறித்துப் பேராசிரியர் பின்வருமாறு இதழிலும் தெரிவித்தார்:

இந்தி முதன்மையைத் தடுப்பதும் தமிழைத் தூய நிலையில் வளம்படுத்துவதும் குறள்நெறியில் மக்கள் வாழ்வதற்கு ஒல்லும் வகையால் உழைப்பதும் மக்களாட்சி முறை மாண்புற வழிகாட்டுவதுமே நம் இதழின் குறிக்கோளாகும்.

 குறள்நெறியைப் பரப்பி மக்களைக் குறள்நெறியில் வாழச் செவதுதான் தலையாய நோக்கம். அந்நோக்க அடிப்படையில் கட்சிச் சார்பற்ற அரசியல் இலக்கியப் பண்பாட்டுத் தமிழியக்க வெளியீடாகப் பணிபுரிந்துவருகின்றது என்பதனை அறிந்து, இதழைப் போற்றி ஒல்லும் வகையால் உதவுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

 குறள்நெறி ஓங்குக! தமிழ் வெல்க. மக்களாட்சி மாண்புறுக!

(குறள்நெறி (மலர் 1: இதழ் 12): ஆனி 18,1995; 1.07.1964)

  அவர் காலத்தில் இவ்விரண்டிலும் வெற்றி கண்டார் எனலாம். தமிழ் மக்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வை உருவாக்கவும் பரப்பவும் குறள்நெறி ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், கருநாடகம், கேரளம், ஆந்திரா, மகாராட்டிரம், முதலான மாநிலங்களிலும் தில்லியிலும் குறள்நெறி அன்பர்கள்  உருவாயினர்.

 தமிழர்களில் கற்றவர்கள் எனப்படுகின்றவர்கள் தமிழினுயர்வை நிலைநாட்ட முயலாது தம்முயர்வை நிலைநாட்டுவதிலேயே காலங்கழித்துவருகின்றனர்.

 தென்மொழி, தேன்மொழியாகவும்  இந்தியத் தேய மொழி யாகவும் ஆவதற்குரிய செயல்முறைகளைச் செய்திட  வேண்டும்.

 தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை.

(குறள்நெறி (மலர்3: இதழ்10):  வைகாசி19, 1997: 1.6.1966)

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்