[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே)

……..  (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: )

 இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன்? இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள்.

 ஒரு மொழிக்கு உரிமை என்பது அதனுடைய நாட்டில் அது எல்லாத் துறைகளிலும் முதன்மையிடம் பெற்றிருப்பதே. தமிழ் நாட்டில் தமிழ் இன்னும் அத்தகைய இடத்தைப் பெற்றிலது. ஆட்சித் துறையிலும் பல்கலைக்கழகத்திலும் நீதி மன்றத்திலும் கோயிலிலும், தமிழ் தனக்குரிய இடத்தை இழந்துள்ளது. இழந்த இடத்தைப் பெறும் நாள்தான் தமிழ்த்தா உரிமை பெறும் நாளாகும்.

 மக்களாட்சி முறையில்  தமிழ்ப் பேராசிரியர்க்கு உள்ள கடமைக்கும் உரிமைக்கும் ஏற்பத் தமிழ் மக்களிடையே தமிழார்வத்தைப் பெருக்கும் வகையில் சோற்பொழிவுத் தொண்டாற்றப் புறப்பட்ட எனக்குக் கிடைத்த பரிசு சிறைவாழ்வும் வேலையிழப்புமாகும். எவ்விதமான குற்றமும் உள்ளத்தாலும் நினைக்காத எனக்கு இழைத்துள்ள கொடுமைகள்; குற்றமற்ற கோவலனைக் கள்வனென்று கொலை செததைவிடக் கொடுமையாகும். இவ்வறஞ்சாராக் கொடுஞ்செயல் நிகழலாமா என்று கடிந்துரைக்கச் சிலரே முன் வந்தனர். நாட்டுப் பெருந்தலைவர்களில் பலர் இவ்வநீதியைக் கண்டு உள்ளம் வருந்தினரேனும் இப்படிச் செயலாமா? என இடித்துரையாது வாளா இருந்து விட்டதன் பொருள் விளங்கிலது.  தமிழ்நாட்டில் தமிழால் வாழும் ஒருவர் தமிழுக்காக  வாழ முற்படுவதும் குற்றமாகக் கருதப்படுகின்ற கொடுமையை என்னென்பது? தமிழை வாழ்விழக்கச் செயத் துணை போவார்க்குத்தான் இனித் தமிழ்நாட்டில் வாழ்வு போலும். பெற்ற தாயை மறக்கும் பிள்ளைகள் போல உற்ற தமிழைப் புறக்கணித்து உயர்வுபெறும் சூழ்நிலை தோன்றுவது தடுக்கப்படல் வேண்டும். உதட்டளவில் தமிழின் உயர்வு பேசி உள்ளத்தால் பதவியை நச்சி உயர்வுபெறும் ஏமாற்றுச் செயல் புரிவோர்க்கு இனி ஏற்றம் அளித்தல் கூடாது. தமிழின் பேரால் ஏமாற்றுவோர் கருதியது கிட்டாது ஏமாற்றமுறல் வேண்டும். உண்மைத் தமிழ்ப்பற்றாளரே உயர் பதவிகளில் அமருமாறு செதல் வேண்டும். பதவிகட்குரிய தகுதிகளில் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்புலமையும் இடம் பெறுதல் வேண்டியது இன்றியமையாததாகும். அடுத்து நின்று பணிபுரியும் ஆள் முதல் அமைச்சர் பதவி வரை உள்ளோர் அனைவரும் தமிழ்ப்பற்றில் ஐயத்துக்கிடமற்றவராக இருத்தல் வேண்டும் என்ற நியதி தோன்றுதல் வேண்டும்.

 தமிழின் உரிமையே தமிழர் உரிமையாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையில்லை என்றால் தமிழர்க்கு முதன்மை இல்லை என்றுதான் பொருள். அயல்மொழிகளாம் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் உள்ள முதன்மைகள் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும். ஆதலின் தமிழ் மொழிக்கு முதன்மையளிக்கும் பணியில் ஈடுபடுதல் தமிழர்களின் பிறவிக் கடனாகும்.

இந்தி முதன்மை அகற்ற வேண்டுமானால் காங்கிரசுக் கட்சி ஆளும் நிலையிலிருந்து அகற்றப்பட வேண்டும். காங்கிரசுக் கட்சி ஆளும் நிலையிலிருந்து அகற்றப்பட வேண்டுமானால் காங்கிரசல் லாத பிற கட்சிகள் தமக்குள் ஒன்றிட வேண்டும். சாதிகளின் பேராலும் பிறவற்றின்பேராலும் புதிய கட்சிகள் தோன்றுதல் கூடாது.

மொழிப் புலவரைப் போற்றல்

  பரதக்கண்டத்தின் குடியரசுநாள் போன்ற சிறப்பு நாட்களில் ஆரிய மொழிப் புலவர்களையும் அரபுமொழிப் புலவர்களையும் போற்றிச்  சிறப்பிக்கின்றனர். ஆனால் ஏனைய மொழிப் புலவர்களை எண்ணிப் பார்ப்பதும் இல்லை. இவ்வொருதலைப் பாராட்டு என்றும் கூடாது. கூட்டரசு மொழிகள் அனைத்திலும் புகழ்பெற்று விளங்கும் புலவர்களைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தலே ஏற்றது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு புலவராகச் சிறப்புச் செய்யும் வழக்கத்தை வரும் குடியரசு நாளிலிருந்தாவது கொண்டு வருவார்களாக. மொழிகளிடையே சமத்துவ நிலையைக்கடைப் பிடிக்கின்றோம் என்பதை இச்செயல் உறுதிப்படுத்தும்; மொழிகளின் சமநிலையே மக்களின் சமநிலையாகும்.

எம் உழைப்பு வீணாகவில்லை என்பதையறிய பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம். தமிழைப் பாடமொழியாகக் கொள்ளலாம் என்றுள்ள கல்லூரிகளில் மிகுதியான மாணவர்கள் சேர்ந்துள்ளனராம். எல்லா வசதிகள் அளித்தும் இன்தமிழைப் பாடமொழியாகக் கொள்வார் யாருமிலரே எனத் தமிழ்ப்பகைவர் கூறி வந்தனர். அவர் நாணுமாறு கோயம்புத்தூர் கல்லூரியில் மட்டும் 60க்கு 48 பேர் சேர்ந்துள்ளனராம். பூண்டிக் கல்லூரியிலும் நிறையச் சேர்ந்துள்ளனராம். எம் திட்டத்தைச் செயல்பட விட்டிருப்பின் இன்று எல்லாக் கல்லூரிகளிலும் எல்லா வகுப்புகளிலும் தமிழிலேயே கற்பிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கும். அந்தோ! தமிழக அரசு தடுத்து விட்டதே! ஆயினும் ஓரளவேனும் பயன் ஏற்பட்டிருப்பதையறிந்து உவகை கொள்கின்றோம். தமிழைப் பாடமொழியாகக் கொண்ட மாணவர்களை உளமாரப் பாராட்டுகின்றோம். இன்றமிழ் வழியாகப் படித்து ஏற்றம் பெறுவார்களாக.

நோன்பினைக் கைவிடுக!

என்னைப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தி யுள்ளமைக்காக வருந்திய சில நண்பர்கள்-இளைஞர்கள்-யான் விடுதலையாகும்வரை ஒரு வேளை உணவே கொள்ளும் நோன்பைக் கொண்டனர் என்றும் சிலர் தாடி மீசை வளர்த்துக்கொண்டனர் என்றும் அறிகிறேன். யான் விடுதலை பெற்று விட்டேன். ஆகையால் தம் நோன்பைக் கைவிடுமாறு அன்போடு வேண்டுகின்றேன்.

 தமிழின்பால்  கொண்டுள்ள பற்றால் தமிழ்த் தொண்டனுக்கு ஏற்பட்ட இடுக்கண் கருதித் தவநோன்பு மேற்கொண்ட அன்பர்களின் உள்ள உறுதி பாராட்டுதற்குரியது. யான் விடுதலை பெற்றபோதும் தமிழ்த்தாய் இன்னும் விடுதலை பெற்றிலள். அயல்மொழிகளின் செல்வாக்கு அகலும்வரை அவள் விடுதலை பெற்றுவிட்டதாகக் கருத இயலாது. ஆதலின் அயல்மொழிகளின் செல்வாக்கை அகற்றி அன்னைத் தமிழின் விடுதலை பெற அயராது உழைப்போம்.

குறள்நெறி (மலர்2 : இதழ்18): ஆவணி16,1996: 1.9.65

  இன்றைக்குத் தமிழ் விடுதலை வேண்டுவோர் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. எனினும் பேராசிரியர் இலக்குவனார் விழைந்தவாறு தமிழ் விரைவில் விடுதலை பெற்றுத் தன்னுரிமையுடன் கோலோச்ச வேண்டும்.

(தொடரும்)

-இலக்குவனார் திருவள்ளுவன்