(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி)

 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ)

 ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்:

  தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப் போர் வரலாற்றில் அழியா இடம் பெற்று விளங்குகிறார். எனவே, இவரை 1965 மொழிப்போர்த் தந்தை எனக் குறிப்பிடல் மிகையாகாது. (பக்கம் 105-106: பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர்த்தந்தை)

  குறள்நெறி இதழுக்குப் பரவலான வரவேற்பிருந்தது. எனினும் தொழில்முறை விற்பனையாளர்கள் சரிவரத் தொகையை அனுப்பாத இடர்ப்பாடும் இருந்தது. கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் திரட்டிப் பணம் அனுப்பிக் குறள்நெறி இதழ்களைப் பெற்றமையே உதவியாக அமைந்தது. தமிழ் ஆர்வலர்களும் தாமே முன்வந்து முன்தொகை அளித்துக் குறள்நெறியைப் பெற்று ஊக்கப்படுத்தினர். அடுத்துப் பேராசிரியர் இலக்குவனார்,  குறள்நெறி இதழை ஆங்கிலத்திலும் (Kural Neri) திங்கள் இருமுறை இதழாக நடத்தினார். அதற்கான தேவையைப் பின்வருமாறு கூறினார்:

  தமிழகச் செய்திகள், தமிழ்த் தொண்டு பற்றிய நிகழ்ச்சிகள், தமிழர்களின் உள்ளக்கிடக்கை முதலியன பற்றி அயல்நாட்டவர்க்கு அறிவிக்க வேண்டியது தமிழ்ப் பற்றாளரின் தவிர்க்கலாகாக்  கடனாகும். ஆகவே, நமது குறள்நெறி இதழை ஆங்கிலத்திலும் வெளியிடத் துணிந்துள்ளோம்.

 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி     

 இன்பம் பயக்கும் வினை

எனும் திருவள்ளுவரின் திருவாய்மொழிக்கொப்ப, சிறைப்படினும், பதவியை இழப்பினும், தமிழ்த் தொண்டில் இன்பம் காணும் யாம் இப் புது முயற்சியிலும் ஈடுபடத் துணிந்துள்ளோம்.

குறள்நெறி (மலர் 2 இதழ் 18): புரட்டாசி15,1996: 1.10.65

 சிறை வாழ்க்கையும் பதவிப்பறிப்பும் பேராசிரியர்  இலக்குவனாரை மாற்றி இருக்கும்; அவர், தம் கொள்கைப்பாதையில் இருந்து விலகிவிடுவார் அல்லது  சற்றேனும் இறங்கித் தம் உணர்வில் நீர்த்துப் போவார்; எனவே, எளிதில் மாணவர் பட்டாளத்தையும் இளைஞர் உலகத்தையும் திசை திருப்பி விடலாம் என அரசு கணக்குப் போட்டது பிழையாயிற்று. பேராசிரியர்  இலக்குவனார் முன்னிலும் முனைப்பாகத் தமிழ்க்காப்பிற்கான தமிழ்த்தொண்டில் ஈடுபட்டார். பதவியில் செலவழிக்க வேண்டிய நேரத்தையும் இந்தி முதன்மை எதிர்ப்பிற்கும் தமிழ்க்காப்பிற்கும் செலவிட வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ந்தார். தடைமேடுகளையும் படிமேடைகளாக ஆக்குவதுதானே போராளியின் பண்பு? பேராசிரியர்  இலக்குவனாரும் அவ்வாறே தடைகளை உடைத்து முன்னேறினார். தமிழுக்கே முதன்மை, தமிழில்தான் எல்லாம் என்னும் நிலையை உண்டாக்க அயராது உழைப்பதே தம் வாழ்நாட்பணி என்றார். இதனைப் பின்வரும் ஆசிரிய உரைப்பகுதி விளக்கும்.

“ஒன்றே குலமும் ஒருவனே” தேவனும் எனும் கொள்கை அடிப்படையில், உறுபசியும் ஓவாப்பிணியும், செறு பகையும்   நீங்கிய மக்களினத்தை உருவாக்கவும் மொழிவழி மாநிலங்கள் முழுத் தன்னாட்சி பெற்று முழு உரிமையுடன் சாதி மத வருக்க வேறுபாடு அற்ற மக்களாட்சிச் சமநிலைக் குடியரசுகளாய் இணைந்து வாழும் வன்மைமிக்க பாரதக் கூட்டரசை உருவாக்கவும், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகட்கே முதன்மை என்ற அடிப்படையில் மொழிகளின் சமஉரிமையை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை  தமிழில்தான் எல்லாம் என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே இனி எனது வாழ்நாட் பணியாகும்.

குறள்நெறி (மலர்2: இதழ் 12): காரி 16: 1.12.65

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்