(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி)

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ)

  குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு:

நற்றமிழில் உரையாடவேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால் கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.

 நமக்கோ நாளும் நாளும் செந்தமிழ் சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு பாழும் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. ‘மெல்லத்தமிழ் இனிச் சாகும்’ எனும் பேதை மொழியை நாம் அணுவாகச் செத்தேனும் பொயாக்க வேண்டும் என்று உறுதி பூண்டுவிட்டோம். உள்ளம் உடைமை உடைமை எனும் திருவள்ளுவரின் திருவாய் மொழிக்கேற்ப உள்ள நாம் செந்தமிழ் காக்கும் பணியில் இச்செய்தியிதழை ஆளாக்க முற்பட்டு விட்டோம்.

 நாட்டு மக்களின் நல்லெண்ணம் நம்பால் உள்ளது எனும் துணிவுடையோம். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது. ஆயினும் இன்று ஆளுங்கட்சியாம் காங்கிரசு இந்திமொழித் திணிப்புக்கு உடந்தையாய் இருப்பதனால் தமிழ்காப்புக்கு உரிமை கொண்டாட இயலாது. இந்தி முதன்மை நாளும் நாளும் சுமத்தப்பட்டு வருகின்றது. இதனை அகற்றலே தமிழ்க் காப்பின் முதற்பணியாகும். உண்மைத் தமிழ்ப் பற்றுடைய காங்கிரசுக் கட்சியினர் உள்ளத்தால் நம் பக்கமே இருப்பர்.

குறள்நெறி நாளிதழ்: ஐப்பசி16,1997:செவ்வா: 1.11.1966:

  பெரும் பெரும் பணமுதலைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நாளிதழ் நடத்த வேண்டும் என்ற முடிவே பேராசிரியர் இலக்குவனாரின் பெரும் துணிவையும் தமிழ்க்காப்பிற்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்த அவரின் தமிழ்ச்சால்பையும் வெளிப்படுத்தின எனலாம். தமிழ் நாளிதழ் என்றாலும் உலகச்செய்திகளைத் தமிழக மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகப் பன்னாட்டுச் சிக்கல்கள்பற்றி யெல்லாம் கருத்துகளை வெளியிட்டார். மாணவ நிலையிலேயே ஆழ்ந்து படித்தச் சிறந்த படிப்பாளராயிற்றே பேராசிரியர் இலக்குவனார். ஆகவே, படிப்போருக்காக எட்டுத் திக்கும் அறிந்து செய்திச்செல்வங்களைக் கொணரும் ஆற்றலுடன்  நாளிதழை நடத்தியமையால் பெரிதும் வரவேற்பு பெறலாயிற்று.

 செய்திகளைத் தெரிந்து கொள்ளும் துடிப்பும் நல்ல தமிழை அறிந்து கொள்ளும் ஆர்வமும் மாணவர்களிடையே பெருகியமையால் குறள்நெறி அவர்களிடையே செல்வாக்கு பெற்றது. பின்னர்க் குறள்நெறி நாளிதழ் நின்று போனாலும் அதன் தேவை இன்றைக்கும் மிகுதியாக உள்ளது. கடந்த கால வரலாற்றை உணராமல் மொழிக்கொலை புரியும் ஊடகத்தில்  நாளிதழ்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. நல்ல தமிழில் நடத்த  வேண்டும் என்ற நோக்குடன் வெளிவரும் ‘தமிழோசை‘ இதழைத் தான் நாம் பாராட்ட வேண்டும். ஆனால், அவ்விதழினரும் விற்பனைக் குறைவிற்குக் காரணம் தமிழ்நடை எனத் தவறாகப் புரிந்து கொண்டு செய்தித் தலைப்புகளிலும் கட்டுரைகளிலும் அயற் சொல்லிற்கு இடம் கொடுத்து வருகின்றனர்.

தமிழ்உணர்வுச் செய்திகளையும் நல்ல தமிழில் எழுதுவதற்கான தொடரையும் வெளியிடும் ‘தினமணி’யிலும் கலப்பற்ற நல்ல தமிழ்நடைக்கு முதன்மை கொடுக்காத போக்கே உள்ளது.

 நாம்தமிழர் உணர்வை விதைத்த பெரியார் ஆதித்தனாரின் குடும்ப இதழ்களான மாலைமுரசு போன்றவற்றில் இன உணர்வுச் செய்திகளும் கட்டுரைகளும் முதன்மையாக இடம் பெற்றாலும் மக்களிடம் நல்ல தமிழ்நடையைக் கொண்டு செல்ல வேண்டிய அரும்பணியை ஆற்றாதது வருந்தத்தக்கதே.

  குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன்  சேர்க்க வேண்டும் என்று போராடிய பெருந்தகை இராமசுப்பு அவர்கள் நிறுவிய ‘தினமலர்‘ இதழ்கூட மக்கள் சிக்கல்களில் கருத்து செலுத்துவது போல் மொழிச்சிக்கலும் மக்களுக்கான சிக்கல் என உணராமல் நல்ல தமிழை மறந்து விடுவதும் தமிழுக்கு எதிரான கருத்துகளுக்கு முதன்மை அளிப்பதும் வருத்தத்திற்குரியதே.

 தமிழின விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் தந்தை பெரியாரின் ‘விடுதலை‘ இதழில் ஒற்றுப்பிழையில்லா ஒரு தொடரைக்கூடக்காண இயலவில்லை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்