[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா)

 

  பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை.

  ஆட்சிக்கு வந்த புதிது என்பதால், பேரறிஞருக்குத் தவறு எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது. எனவே, அதிகாரிகளை மீறி எதுவும் செய்ய விரும்பவில்லை. சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர்-முதன்மைப்பேராசிரியர் பணியைப் பேராசிரியர் இலக்குவனாருக்கு வழங்க முடிவெடுத்தனர். இதிலும் காலத்தாழ்ச்சிதான். மே 28,1967 இல்நடைபெற்ற பேராசிரியர் இலக்குவனாரின் மூத்த மகன் பொறி.இ.திருவேலன் அவர்களின் திருமணப் பரிசாக மணமகன் தந்தைக்குப் பணியமர்த்த ஆணை தர விரும்பியும் அதிகாரக்கூட்டத்தார் காலத்தாழ்ச்சி செய்வதாகப் பேரறிஞர் அண்ணா கடிந்துரைத்தார். சூன் 19 அன்றுதான் கோடை விடுமுறைக்குப்பின் கல்லூரி திறக்கும் என்றும் அதற்குள் ஆணை வழங்கப்பட்டு விடும் என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

  தமிழுக்காகப் போராடிச் சிறைவாழ்க்கை உற்றுப் பதவி இழந்த ஒருவருக்கு அவரது உழைப்பால் ஆட்சியில் அமர்ந்தவர்கள் உடனே ஆணை பிறப்பித்திருக்கலாம். அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், சிக்கன நடவடிக்கையாக இவ்வாறு ஒத்திப்போட்டனராம் மேதைகள்! சூன் 16 வரை ஆணை கிடைக்கப் பெறாமல் முதல்வரைச் சந்திக்கச் சென்றார் பேராசிரியர் இலக்குவனார். முதல்வரின் செயலர், பேராசிரியர் இலக்குவனார் முதல்வரைச் சந்தித்தால் சிலருக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே, கல்விச் செயலரைச் சந்திக்கச் செல்லுமாறும் கூறினார். கல்விச் செயலர், முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இசைவாணை கிடைத்து விட்டது என்றும் இன்றே பணியில் சேரலாம் என்றும் கூறினார். கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் தொலைபேசி வழியாக அன்றைக்குப் பேராசிரியர் இலக்குவனார் பணியில் சேர ஆயத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார். ஆனால், ஆணை வழங்குவது தொடர்பாகச் செயலர் உசாவிய பொழுது உரிய கோப்பு எங்கே இருக்கின்றது என்றே தெரியவில்லை.

  பேராசிரியர் இலக்குவனார்பால் அன்பு கொண்ட செயலகப் பணியாளர் ஒருவர் கோப்பினைக் கண்டு பிடிக்க உதவினார். பேராசிரியர் இலக்குவனாரும் அவருடன் சென்றார். தொடர்புடைய எழுத்தரிடம் தொடங்கி அங்கே, இங்கே, இங்கே, அங்கே என்று எங்கெங்கோ, பற்பல இடங்களில் சுற்றிய பின்னர், உரிய எழுத்தரே அக்கோப்பினைக் கீழே போட்டு வைத்திருந்ததைக் கண்டனர். நாடறிந்த ஒருவருக்கே, அதுவும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவசரம் எனக் குறிப்பிட்டுவந்த கோப்பிற்கே இந்நிலை என்றால், அரசின் சிவப்பு நாடா முறையால் எளியோர் எத்தகைய இன்னலுக்கு ஆளாவர் எனப் புரிந்து கொள்ளலாம். அக் கோப்பினைக் கண்டறிந்த பின்னர் ஊதியம் குறிப்பிடாமல் ஆணை வழங்கினர்.

  இதற்கிணங்க 18.06.67 இல் சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். என்றாலும் சிக்கல் தொடர்ந்தது. துறைத்தலைவர் பணியை ஆற்றவேண்டும் என்றாலும் துறைத்தலைவருக்குரிய முதல்நிலைப் பேராசிரியருக்கான சம்பளம் தர இயலாது என்றனர். இரண்டாம்நிலைப் பேராசிரியர் பணி நிலை முதல்வரின் பணிநிலைக்கு இணையானது. அதனினும் மேம்பட்டது முதனிலைப் பேராசிரியர் பணியிடம். முதனிலைப் பேராசிரியர் பணிநிலையில் மேல்வரம்பில் சம்பளம் வரையறுப்பதாகக் கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்ட பின்னும் அவ்வூதிய நிலையைத் தரவில்லை. பல்வேறு போராட்டங்களில் சில திங்கள் கழிந்த பிறகே முதன்மைப் பேராசிரியர் நிலையிலான துறைத்தலைவர் பணியிடச் சம்பளம் தர அரசு அதிகாரிகள் முன் வந்தனர். பேரறிஞர் அண்ணா அவர்கள் விழைந்தவாறு 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் ஓராண்டு மட்டுமே பணியாற்றும் வகையில் ஆணை பிறப்பித்தனர். இதிலும் வேதனை தரும் போக்குதான்.

   பேராசிரியர் இலக்குவனார் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில் தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப் படுத்துவார். இது போல் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார்(வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப்பண்பு):

 “மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலைவகுப்பில் (B.A.) தமிழ்ச் சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்கு முன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு இல்லை. முதன்முதல் புலவர் விழாவை நடாத்தி மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டினார். சிறந்த முறையில் சிறப்புத்தமிழ் பயிலும் மாணாக்கர் உதவித்தொகை பெற ஏற்பாடு புரிந்தார். ஆசிரியப் பெருமக்களிடையேயும், மாணாக்கரிடையேயும்,  ஆராய்ச்சி உணர்வும் திறனாய்வுப் புலமையும் பெருகக்  கருத்தரங்குகள் நடத்தினார். இளங்கலை முதுகலை மாணாக்கர் தமிழ் உணர்வும் புலமையும் முற்றிச் சிறக்க ஆண்டுதோறும் ஆய்வுக் கட்டுரை ஏடுகள் உருவாக்கும் திட்டத்தைக் கொணர்ந்தார். துறைப் பணிகள் அனைத்தையும் தமிழிலேயே நடாத்தினார். அடிக்கடித் தமிழ் விழாக்கள் நடத்தி ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் தமிழ் இன உணர்ச்சியையும் தமிழ் மொழி உணர்வையும் உருவாக்கினார்.

 பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தமிழ் இன உணர்ச்சியும், தமிழ் மொழி உணர்வும் சான்ற மூதறிஞர் ஆவார். தமிழினத்தின் வரலாற்றுத் தொன்மையிலும், தமிழ்மொழியின் வளமான தன்மையிலும் அசைக்க முடியாத பெரு நம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தமிழ்க் கொள்கை அவருள்ளத்தே இறுதிவரை ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழ்நாடு மீண்டும் பண்டைய பொற்காலத்தை அடையவேண்டுமென்று அயராது தொண்டாற்றினார். குறள்நெறிக் காவலராகவும் விளங்கினார். அடையாத இன்னல்கள் அடைந்திட்டபோதும் உடையாத உள்ளத்தோடு உயர்ந்து நின்றவர் பேராசிரியர் இலக்குவனார். வாழ்வு வளத்திற்காகத் தன்மானம் குன்றாத் தமிழ்ச்சிங்கம் அவர்; வறுமையிலும் செம்மை காத்த தண்டமிழ்ச் சான்றோர்.

 தாய்த்தமிழை அழிக்க வந்த இந்தி எதிர்ப்பு அறப்போரில் முன் நின்று பாசறை அமைத்துப் பரணிபாடிச் சிறைக்கோட்டம் சென்று அச்சிறைக் கோட்டத்தைச் செந்தமிழ்க் கோட்டமாக்கிய செம்மல் அவர். கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கும் மொழித்திட்டம் வெற்றி பெறக் கால்நடைச் செலவு மேற்கொண்ட கன்னித்தமிழ்ச் சான்றோர் அவர். தமிழே ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் வேண்டும் என்ற குறிக்கோளில் உறுதியாக நின்று அதன் வெற்றிக்காகப் பாடுபட்டார். அனைத்தும் தமிழிலேயே நடைபெறவேண்டும் என்ற வேணவா மிக்குடையவராக விளங்கினார். குறள்நெறிப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்பது அவர்தம் தலையாய குறிக்கோள். உலக மொழிகளில் தமிழ்தான் முதன்மொழி என்பது அவர்தம் ஆராய்ச்சியின் திரண்ட முடிபாகும்.”

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்