[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ)

 உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை  அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட்டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து  11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு:

 பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப் பெருநாடுகளின் பல்கலைக்கழகங்களின் மொழி ஆராய்ச்சித் துறையினரிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

 தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் முதலியனபற்றி விரிவுரையாற்றவும் இதுவரை வடமொழிப் பற்றாளரால் பரப்பப்பட்டுவந்துள்ள தவறான கருத்துகளைச் சான்றுகளுடன் மறுத்துரைக்கவும் இப்பயணத்தை மேற்கொள்கின்றார். இவருடன் இந்துக்கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவரும் புகழ்பெற்ற வழக்குரைஞருமான கிருட்டின பிள்ளையும் செல்லுகின்றார். இப்பயணம் திசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படலாம்.

 பணி நிறைவு தொடர்பாகத் துணைவேந்தர் சிக்கலை எழுப்பி நெருக்கடி அளித்தமையால் அப்பொழுது அயலகப் பயணம் மேற்கொள்ளவில்லை. நாகர்கோயிலில் இந்துக்கல்லூரி முதல்வராக 1971 மேத்திங்கள்வரை அதாவது 70-71 ஆம் கல்வி ஆண்டுமுழுமையும் பேராசிரியர் பணியாற்றுதற்கு உரியவர். ஆனால், துணைவேந்தர் தெ.பொ.மீ. நடைமுறை ஆண்டிலேயே ஓய்வு பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி  25.12.1970 இல் ஓய்வு பெற வைத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் போற்றத் தெரிந்தவர்களால் முற்றத்து முல்லையைக் காக்கத் தெரியாமையால் தமிழ், தமிழ், தமிழ் எனத் தமிழாக வாழ்ந்து வதைபடுபவருக்கு உரிய சிறப்புகளைச் செய்யத் தெரியவில்லை. எனவே, பணி விடுவிப்பு வழங்கப்பட்டகொடுமை நிகழ்ந்தது.

 தமிழ்நாடெங்கும் தம் சொந்தச்செலவில் பரப்புரை மேற்கொண்டு தமிழ்மொழி, இனப் பண்பாட்டுப்பற்றை விதைத்துத் தமிழ்உரிமை உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த பேராசிரியர் போதிய பொருள் வளம் பெற்றிருப்பின் தேமதுரத்தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்திருப்பார். அவ்வப்போது அமைந்த பணி நீக்கங்களும் தம்வருவாயை இதழ்ப்பணிகளிலும் பிற வகையிலும் எனத் தமிழ்நாட்டிலேயே செலவிட்டதும் அயலகப் பரப்புரையை மேற்கொள்ள இடம்தரவில்லை. எனினும் கீழை ஆசிய நாடுகளுக்குத் தமிழ்த்தூதராகச்சென்று வந்தார். அதை முன்னிட்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா  நடைபெற்றது. அதில் நிறைவாகப்  பேராசிரியர் நன்றிஉரையாற்றினார். அவ்வுரையின் ஒரு பகுதிச் செந்தமிழ் இதழில்(செட்டம்பர் 1971: பக்கம் 63)வந்துள்ளது. அது வருமாறு:

 கீழை நாடுகளில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். எனவே, அங்கு முதலில் செல்கிறேன். மேலும் வாய்ப்பு ஏற்படும்போது,மேற்கு நாடுகளுக்கும் செல்வேன். வெளி நாடுகளில் தமிழ்மொழியின் உண்மையான வரலாறு பரவவில்லை; தமிழின் மெய்ப்புகழ் தெரியவில்லை. அவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அங்கு எடுத்துச் சொல்வேன்.

 உலகில் பல மொழிகள் தோன்றுவதற்குமுன் இங்குத் தமிழ் பிறந்தது; வளர்ந்தது. மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் தோன்றியது. மாங்குடி மருதன் தலைமை தாங்க ஆயிரக்கணக்கான புலவர்கள் அங்குத் தங்கித் தமிழ் ஆராய்ந்தார்கள். அதற்குச் சான்றாக,

உலகமொடு நிலையஇய, பலர்புகழ்சிறப்பின்,

 மாங்குடி மருதன் தலைவனாக

 என்ற புறநானூற்றுப் பாடலையும் எடுத்துக் காட்டினார்கள்.

 மேலும்  அறிஞர் (டாக்டர் இலக்குவனார்) அவர்கள் பேசும்போது எனக்கு இறைநம்பிக்கை உண்டு. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் நிற்பவன் நான். தெய்வ நம்பிக்கை வேறு. புராணக் கதைகள் வேறு. புராணக் கதைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை.

 நாம், இன்று நமக்குப் புரியாத வடமொழியில் அருச்சனைகள் செய்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம். வாழ்த்துகின்றோம். நல்ல தமிழால் நாளும் இறைவனை வணங்க வேண்டும். தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்மொழியில் அருச்சனை நடைபெறவேண்டும்.

 தமிழ்மொழியில் அருச்சனைக்குரிய பாக்கள் நிறைய உள்ளன. மாணிக்கவாசகர் பாடிய, போற்றித் திரு அகவல் என்ற இலக்கியமே போதுமானதாகும். நான் வெளிநாடு சென்று வந்தபின் தமிழ் அருச்சனை தமிழ்நாட்டில் நடைபெறாவிடில், அதற்காகப் போராட்டம் ஒன்று தொடங்குவேன். அப் போராட்டத்தில் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்”- என்று அறிவித்தார்கள்.

 அதுபோன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 49 தமிழ் அறிஞர்களை மதிப்பியல் புலவர்களாகச் சேர்த்து ஒரு மன்றம் இச்சங்கத்தில் அமைக்க வேண்டும். அப்புலவர் மன்றம் தமிழ் நாட்டில்  வெளியாகும் நல்ல நல்ல நூல்களை நாடி அறிந்து அவற்றிற்குப் பரிசளித்துச் சிறப்பு செய்தல் வேண்டும். பயிற்சிமொழி என்ற தமிழ்நாடு அரசினரின் கொள்கையினைத் தமிழ்ச்சங்கம் பலவகையிலும் முயன்று பரப்புதல் வேண்டும். தனித் தமிழ் இயக்கத்தை இச்சங்கமே முன்னின்று நடாத்துதல் வேண்டும். இன்ன பிற நற்செயல்களை இத்தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்துமாயின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் உதவி இச்சங்கத்திற்கு உறுதியாகக் கிடைக்கும். பொதுமக்களின் ஆதரவும் இச்சங்கத்திற்குப் பெருகும்.

 வடநாட்டிலுள்ள சாந்திநிகேதன், விசுவபாரதி போன்று இத்தமிழ்ச் சங்கம் வளர்தல் வேண்டும்.

பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று மேற்குறித்த அவர்தம் கனவுகளை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நனவாக்க வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்