[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி]

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2

  இன்னும்,  இந்  நாட்டைத்  தந்தை நாடென்று   கருதும்   பொழுது,  அத்  தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது   உரிமை,   மனத்தில்  முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து   உள்ளத்தைக்   கவரும்பொழுது  வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின்   உருவமாகவும்,  தந்தையை  வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல்  தமிழ்  வழக்காகும்.  அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு  என்று   நினைக்கும்   பொழுது  அன்பினால் இன்பம்  பிறக்கும்; தந்தை நாடு   என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ் வுண்மையை  உணர்த்தக்   கருதிய   பாரதியார்,  முதலில்   தாயன்பை அமைத்து,   பின்பு   தந்தையின்  வீரத்தைப்  பேசும்  முறை, அறிந்து போற்றுதற்குரியதாகும்.    இறைவனைத்    தாய்வடிவாகவும்   கொண்டு அம்மையப்பர்  என்று   வணங்கும்   முறைமையும்   இக்  கருத்தையே வலியுறுத்துகின்றது.    பாசங்களினின்றும்    நீங்கிப்  பேரின்பம்  பெற விரும்பிய  பெரியார்,   ‘அம்மையே,  அப்பா ஒப்பிலா மணியே’ என்று இறைவனை  முதலில்   அன்னையாகவே  கருதி அகங்குழைவாராயினர். ஆகவே,  செந்தமிழ்   நாடு,  முதலில்  எம்  தாய்நாடு;  அப்பால் எம் தந்தை   நாடு!    இதுவே    உண்மைத்   தொண்டராய்   உழைக்கும் உயர்ந்தோர்  உளப்   பான்மையாகும்;   மெய்யன்பு  வாய்ந்த   தமிழர் உணர்ச்சியாகும்.

  இத்    தகைய செந்தமி ழன்னையை  நாம் போற்றுவது மெய்யாயின் அத்   தாயின்    அருந்தவப்   புதல்வரை  ஆர்வத்தோடு  பேணுதல் வேண்டும்.    காவிய    நயங்களெல்லாம்  கனிந்தொழுகும்  நூல்செய்த கம்பரை     நாம்    இன்னும்   உரிய   முறையில்   போற்றவில்லை. தன்னேரிலாத   தெள்ளுதமிழ்ப்  புலவராய வள்ளுவரை இன்னும்  தமிழ் நாடு   தக்க    முறையில்   தெரிந்துகொள்ளவில்லை.  அருந்  தமிழ்ச் செல்வமே   பெரும்   பொருட் செல்வத்திலும் சிறந்த தென்று தெளிந்து இளமையிலேயே   துறவறம்   பூண்டு சிலம்பு பாடிய இளங்கோவடிகளது பெருமையை    இன்னும்    உணர்ந்தோமில்லை;  தமிழ்மொழிக்  குற்ற குறையைத்   தமக்குற்ற  குறையாகக் கருதி, மனமும் மெய்யும்  வருந்திய மணிமேகலை   ஆசிரியரது  மாண்பை  அறிந்தோ  மில்லை.  நெற்றிக் கண்ணைக்    காட்டினும்   குற்றம்   குற்றமே   என்று    முக்கணான் முன்னின்று   மொழியும்   கலைபயில்  தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த   பொய்யடிமை   யில்லாப் புலவரைப் போற்றுகின்றோமில்லை. முத்தமிழ்த்   துறையின்  முறைபோகிய மற்றைய உத்தமக்  கவிகளையும் நல்லிசைப்   புலமை   மெல்லியலாரையும்  மனக் கோவிலில் அமைத்து மகிழ்கின்றோமில்லை.    

  ஏனைய     நாடுகள்    தம்   புலவரையும், கவிஞரையும்    போற்றுகின்ற  பெருமையையும்,  நம்  தமிழ்    நாடு தமிழறிஞரைப்    புறக்கணிக்கின்ற    சிறுமையையும்   அறிவோமாயின், பிறரது  ஏற்றமும்   நமது  இழிவும் வெள்ளிடை மலைபோல் விளங்கும். இத்   தகைய    பொருந்    துயிலினின்றும்  விழித்து  அருந்தமிழைப் போற்றும் நாள் எந்நாளோ, அந்நாளே நம் நாட்டுக்கு நன்னாளாகும்.

தமிழ் இன்பம்

இரா.பி.சேது(ப்பிள்ளை)