thamizh_vazhka01

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!

 

  தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.

  சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும் வருகின்றனர். “இறக்குமதி செய்யப்பட்ட சொற்கள் இல்லாமல் அவர்களால் எழுதவும் பேசவும் முடியும். ஆனால், அதைப் பற்றிய கவலையில்லாமல், ஆங்கிலேய எழுத்தாளர்கள் வழக்கத்தில் இருக்கின்ற எல்லாச் சொற்களையும் பயன்படுத்தி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்”  என்று கடந்த 10.05.15 ஆம்  நாளிட்ட தினமணியில்கூட ஒருவர் எழுதியிருந்தார்.

  பொருளாதார வளர்ச்சியிலும் ஆட்சி விரிவாக்கத்திலும் ஆங்கிலேயர் கவனம் செலுத்தியதால்தான் ஆங்கிலம் பல நாடுகளில் பேசும் நிலையை எட்டியது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்திற்கு மதிப்பில்லை! சப்பான், சீனா முதலான பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் ஆங்கிலத்திற்கு வேலையில்லை.  நாம்தான் ஆங்கிலேயரை விரட்டிவிட்டு ஆங்கிலத்தைச் சுமந்துகொண்டு இருக்கின்றோம்.

  ஆங்கிலம் உருவான காலத்தில் இலத்தீன், கிரேக்கம் முதலான சொற்களை ஈர்த்துத்தான் உருவானது. எனினும் காலம் செல்லச் செல்லத் தனிஆங்கிலம் குறித்த விழிப்புணர்வை ஆங்கிலேயர்கள் அடைந்தனர்.  1917இல் அடிசன், தம்முடைய இதழில் (Spectator No.165), “நம்முடைய சட்ட அமைப்பில்  சட்டங்கள், உரிமைகள், வாணிகங்கள் முதலியவற்றைக் காக்க மேற்பார்வையாளர் நியமிக்க விதி இருக்கின்றது. அங்ஙனமே வேற்றுமொழிச் சொற்கள் நம் மொழியில் வந்து கலவாமலிருக்குமாறு காக்க மேற்பார்வையாளர் நியமிக்கவும் விதி வேண்டும்”  என ஆங்கிலமொழித்தூய்மை குறித்து வலியுறுத்தியுள்ளார்(பேராசிரியர் சி.இலக்குவனாரின்  பழந்தமிழ் பக்கம் 217). 1913 இல் தூய ஆங்கில இயக்கத்தைத் (Society for Pure English)தோற்றுவித்தனர்.

  எந்த மொழியும் பிற மொழி ஒலியன்களுக்காகத் தன் மொழியமைப்பை மாற்றுவது இல்லை. ஆனால், நாமோ நம் மொழி எழுத்துகளின் ஒலிப்பைப்பற்றிக் கவலைப்படாமல் பிற மொழிஒலிகளைக்காக்க மன்றாடுகிறோம்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

என்றுதான் பாரதியார் சொன்னாரே தவிர, அயல்மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துமாறு கூறவில்லை

 “வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ  போ!”  என்று  பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவோரை விரட்டவும் செய்கிறார்.

  பிற மொழிகளைக்காட்டி அயற்சொற்களைக் கலக்க வேண்டும் என்று சொல்வது,   வீடுதோறும் பிச்சை எடுத்து உடல்வலுவுடன் உள்ளவனுடன் ஒப்பிட்டுச் செல்வர் வீட்டு நோஞ்சான் குழந்தையையும் பிச்சை எடுக்கச் சொல்வதுதற்குச் சமம் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.

   ஆங்கிலம் தன்னிடம் இல்லாத சொற்களைக் கடன் வாங்கியிருக்கலாம். ஆனால் தமிழில் இருக்கும் சொற்செல்வங்களைத் தொலத்துவிட்டல்லவா பிற மொழிக் குப்பைகளைப் பயன்படுத்துகிறோம். ஆங்கிலம் தனக்குரிய நெடுங்கணக்கை அமைத்துக் கொண்ட பின் ஓர் எழுத்தைக்கூடச் சேர்க்கவோ மாற்றவோ இல்லை. பிற மொழி எழுத்துகளின் வாயிலாக நாம் பிற மொழிச் சொற்களைப் புகுத்துகிறோம். பிற மொழிச் சொற்களை நாம் பயன்படுத்தும் பொழுது அங்குஇருக்க வேண்டிய நம் மொழிச் சொற்களை விரட்டி விடுகிறோம். சிலர் அயலவர்  கண்டுபிடிப்பிற்கெல்லாம் தமிழில் பெயர் சூட்டுவானேன் என்கின்றனர். தமிழில் இருக்கின்ற சொல்வளம் மூலம் புதுப்புதுச் சொற்களை நம்மால் உருவாக்க இயலும். எனவே, புதிய சொற்களை உருவாக்கும் பொழுது பொருள் புரிதலும் பயனறிதலும் எளிதாக அமையும். ஒரு சொல்லின் அடிப்படையில் அல்லது அதனை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ பயன்படுத்தும் பொழுது  முதலில் உருவாக்கப்படும் அல்லது மீளாக்கம் செய்யப்படும் சொல் பல சொற்கள் உருவாகக் காரணமாகின்றது. சான்று ஒன்று பார்ப்போம்.  தெலபோன் / telephone என்பதை நாம் தொலைபேசி என்றோம். தொலை என்பதன் வேர்ச்சொல்லான தொல் என்பதில் இருந்துதான் தெல / tele சொல் உருவானதாக அறிஞர் ஞானகிரியார் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும் நாம் தொலைபேசி என்றதும் அதற்கு முன் தந்தி என்று சொன்னதையும் தொலை வரி என்றோம். தொலைக்காட்சி,  தொலைச்செயலி, தொலைநிலைக்கல்வி, தொலைநோக்கி, தொலைப்படம், தொலைப்பதிவி, தொலையச்சு, தொலையஞ்சல்,தொலையளவியல் என்பன போன்று நூற்றுக்கணக்கான சொற்களைப் பயன்படுத்துகிறோம்.தெலபோன் என்றே பயன்படுத்தியிருந்தால் பிற சொற்களும் அவ்வாறேதான் அமைந்திருக்கும்.

  எனவே, நாம் அறிய வேண்டியது கடன் வாங்கியோ இரவல் வாங்கியோ பொருள்களைச் சேர்ப்பது எவ்வாறு செல்வமாகாதோ  அதேபோல்,  கடன் வாங்கியும் இரவல் வாங்கியும் சொற்களைப் பயன்படுத்துவது மொழியின் வளமாகாது. எனவே, தமிழ்ச்சொற்களால்தான் தமிழை வளப்படுத்த வேண்டும் என உணர்ந்து பிற மொழிச் சொற்களையோ பிற மொழி எழுத்துகளையோ பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

ilakkuvanar_thiruvalluvan+9– இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை

அகரமுதல 80 வைகாசி 10, 2046 / மே 24, 2015

feat-default

thamizh08