தமிழ் வரிவடிவம் காப்போம்! – 5
தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்
(22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி)
தமிழுக்கு ஆங்கில எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்கிற முறையில் இவர் எழுதியுள்ளதை அவரது வழக்கமான கவன ஈர்ப்பு உத்தி என்பதாக மட்டும் பார்த்துவிடக் கூடாது.
அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படும் ஆர்.எசு.எசு மனநிலை இதிலும் வெளிப்படுவதை நாம் கவனிக்கத் தவறலாகாது.
மொழிவாரி மாநிலம் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மாறாக, இந்தியாவை எழுபதுக்கும் மேற்பட்ட சிறு நிருவாக அலகுகளாகப் பிரித்து ஆள வேண்டும் என்பது அவர்களின் கருத்து. அதன் மூலம் மொழி, இனம் முதலான பிற அடையாளங்களைக் காட்டிலும் ‘இந்து’ என்கிற அடையாளத்தை எளிதாகக் கட்டமைக்கலாம் என்பது இதன் உள்நோக்கம்.
“கொஞ்சம் அசந்தால் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தேவநாகரி வரி வடிவத்தை வைத்துக் கொள்ளலாமே எனச் சொல்லவும் அவர்கள் தயங்கமாட்டார்கள். அதன் முதற்படிதான் இது” (-அ.மார்க்சு)
– நவின் மனோகரன்(Navin Manogaran)
இப்படித்தான் தமிழர், தமிழ்மொழிக்கு ஏதாவது கேடு விளைக்க வந்துவிடுகிறார்கள். ஏன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் எழுத்துகளையும் ஆங்கிலத்திலே எழுத வேண்டும் எனச் சொல்ல வேண்டியதுதானே!
_-சேக.ரா (Sega Ra)
இது தேவையில்லாத ஒரு விவாதம். தூய தமிழில் சமற்கிருதத்தைக் கலந்த ஆரியருக்கும், இன்று தமிழ் எழுத்துருவையே அழிக்க எண்ணும் இவருக்கும் என்ன வேறுபாடு? இவர் தமிழை வாழவைக்க எண்ணுகின்றாரா அல்லது அழிக்க எண்ணுகின்றாரா? தமிழைத் தமிழ் மொழியில் எழுதுவதுபோல் ஆங்கிலத்தில் எழுதினால் ஒலிப்புப் (உச்சரிப்பு) பிழைகள் ஏற்படாதா? ஆங்கிலத்தில் ‘அவர்கள்’ என்பதை ‘Avargal’ என்றே எழுத முடியும். இதை ‘அவர்கல்’ என்றே எல்லோரும் ஒலிக்கக்கூடும். ‘கள்’ ‘கல்’லாக மாறிவிடும். இது போன்று பல சொற்கள் தமிழில் உண்டு. “வாழ்க்கை” என்பதை “Valkai” என்றே பலர் எழுதுகின்றனர். ஆங்கிலம் மட்டுமே படித்த தமிழர்கள் அதை அப்படியே ‘வல்கை’ என்றே ஒலிக்கவும் செய்கின்றனர். இ்ந்த மொழிக் கொலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? தமிழ் தமிழிலேயே தமிழாக இருக்கட்டும்!
– சுப்பிரமணியம் குப்புசாமி (Subramaniam Kuppusamy)
இந்த எழுத்தாளரைப் பற்றி நல்ல எண்ணம் வைத்திருந்தேன் அதை மீளாய்வு செய்தே ஆகவேண்டும்.
இப்படி நடந்தால் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிரிந்த மாதிரி, ‘தங்லிசு’ பிரிந்து, பிறகு அதைப் பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் உருவாகி வழக்கம்போல் எல்லைச் சிக்கல், மொழிச் சிக்கல், தண்ணீர்ச் சிக்கல்என்று தமிழர்களும், தங்லிசுகாரர்களும்…
‘மெல்லத் தமிழ் இங்கு சாகும்’ என்று பாரதி சொன்னது பேரிடர் ஒலி அல்ல எச்சரிக்கை மொழி! அந்த வரிசையில் இந்த மூடக் கருத்தையும் ஒரு படிப்பினையாய்க் கொண்டு நடப்போம். காரணம், இன்று நம் நாட்டில் உலாவும் சில இதழ்களில் கூட இவரது கருத்தைக் காணலாமே!
– சிவகுமார் சுவாசிப்பவன் (Sivakumar Suvasippavan)
ஏன் இப்பொழுது இருக்கிற எழுத்து முறைக்கு என்ன கேடு?
– தேவப்பிரியம் இரமேசுகுமார் (Devapiriam Rameshkumar)
இஃது ஏற்கத்தக்கதல்ல! காலப்போக்கில் இது நம்மை அந்த மொழிக்கு மாற்றிவிடும். ஏறக்குறைய, நம் மொழியை மட்டுமல்ல, நம் பாண்பாட்டையும் அழிப்பதற்கான படியாகும்.
இத்தகைய அறிக்கைகளுக்குத் தமிழறிஞர்கள் இடம் தரக்கூடாது. அவர், புவியிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான எழுத்துவடிவம் வேண்டும் என விரும்புகிறாரா? எனக்கும் தமிழில் தட்டச்சிடுவதற்கு இடர்ப்பாடுகள் சில உள்ளன. இது வேறு. நான் தமிழை எழுத ஆங்கில வரிவடித்தைப் பயன்படுத்துகிறேன். என்றாலும் அடிக்கடி குற்ற உணர்வு எழுகிறது. படிப்படியாக இதை நான் மாற்றி விடுவேன். நாம் நமக்குரிய எழுத்து வடிவத்தையே பயன்படுத்த வேண்டும். அவருடைய வரிவடிவச் சிதைவுக் கருத்தை நாம் ஊக்கப்படுத்தக்கூடாது.
– சற்குணம் மாணிக்கம் (Sargunam Manickam)
நமக்குத் தமிழ் மீதான பற்று இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் ‘வாட்சு அப்’ போன்றவற்றிலும் தமிழ்மொழியைப் பரவலாகக் கொண்டு வர முடியும். தமிழில் படிப்பவர்கள் குறைவு எனில், அவர்களை ஏதாவது செய்து தமிழில் படிப்பவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட முயல வேண்டுமே தவிர, தமிழ்ப்பற்று இல்லாதவர்களுக்காகத் தமிழில் தட்டச்சு செய்பவர்கள் எல்லாரும் ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்யவேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.
– உதயகுமாரி கிருட்டிணன் (Uthayakumari Krishnan)
நானும் புறக்கணிக்கிறேன். தமிழ் நூல்களில் உரோமானியத் தமிழ் என்பது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு! இது நடைமுறையானால், இன்னும் பத்து ஆண்டுகளில் சுப்பிரமணி இருப்பார், ஆறுமுகம் இருப்பார். ஆனால், அவர் தாய்மொழியாகத் தமிழ் இல்லாது போகும்.
– கவிதா வீரமுத்து நவீதா (Kavitha Veeramuthu Navitha)
வருங்காலத்திற்காக அன்னையை யாரும் மாற்றிக் கொள்வார்களா? நிரம்பப் படித்ததில்லை, பண வசதியில்லை எனினும் என்றுமே என் அம்மாவை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்! அதே மாதிரிதான் என் அம்மா எனக்குத் தந்த தமிழையும்!!!!!!
– உதயகுமாரி கிருட்டிணன் (Uthayakumari Krishnan)
ஐயா! மொழி என்பது ஓர் இனத்தின் ஆணிவேர். இப்பொழுதே தமிழர்கள் தங்களை வேறினத்தவர்களாகக் காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். இதில் உரோமன் எழுத்துகளை ஏற்றுக்கொள்ள முயன்றால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். நமது அடுத்த தலைமுறைக்குத் தீந்தமிழை விடுத்துக் கலவைத் தமிழை விட்டுச் செல்வோமாயின் நாம் மொழிக்கொலை செய்த தலைமுறையென இழிச் சொல்லுக்கு ஆட்படுவோம். சிந்தித்துச் செயல்படுவோம்!. ஓலைத் தமிழை இணையத்தில் பதிவேற்றுவோம். அதை விடுத்து எதற்கு இந்த வீண் வேலைகள்???
– வீரசேனன் குணசேகரன் (Verasenan Gunasekaran)
ஆங்கிலத்தில் ழ் ல் ள் ந் ண் ன் ற் ர் ஆகியவற்றை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்? இவ்வாறான அறிவிலித்தனமானவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் படிக்கத் தெரியவில்லையெனில் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது கற்றுக்கொடுங்கள். அனைத்துத் திறன்பேசிகளில் இன்று அஞ்சல், தமிழ்99 போன்றவை தட்டச்சு செய்வதை எளிமையாக்குகின்றன.
Nasamani ponnaiyaa = நேசமணி பொன்னையா, இதை ‘நாசமா நீ போனியா’ என்று படித்தார் ஒருவர். அடுத்து Nedunalvaadai = நெடுநல்வாடை. இதை ‘நெடு நாள் வடை’ என்று படித்தார் இன்னொருவர். தமிழால் பிழைப்பு நடத்தும் இவர் போன்றவர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணம் தமிழை வளர்ப்பது அல்ல. தமிழை ஒழிப்பது.
– தமிழொலி ஏகாம்பரம் (Thamizholi Ekambaram
நாம் நமது தனியடையாளத்தை ஏன் இழக்க வேண்டும்? இது, நம் தாய்க்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும்.
– முரளி பாலா (Murali Bala)
தேவையற்ற விவாதம்… வேண்டாம் இத்தகைய மாற்றம்…
Leave a Reply