little india muruganantham

  இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவி செய்யாததால், வெளியேற்றப்பட்டதாகச்  சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் 21.12.13 சனிக்கிழமை யன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில்  சிற்றிந்தியா பகுதியில்  08.12.13 அன்று நேரிட்ட சாலைநேர்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல் உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஏறத்தாழ 30 பேர்  காவல்துறையினரால் தளையிடப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.

அதைத் தொடர்ந்து 53 இந்தியர்களைக் கலவரத்தில் தொடர்புடையதாகக் கருதி சிங்கப்பூர் அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள் எனப்படுகின்றனர். வெளியேற்றப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதியைச் சேர்ந்த முருகானந்தம், கருக்காகுறிச்சியைச் சேர்ந்த தினேசு ஆகியோர் சொந்த ஊர் திரும்பினர். இதுகுறித்து முருகானந்தம்,   வழக்கம்போல் விடுமுறை நாளில் உறவினர்களைச் சந்திப்பதற்காகச் சிற்றிந்தியா சென்றதாகவும், தான் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும் அந்த இடத்தின் அருகில்கூடச் செல்லவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் பின்வருமாறு தெரிவித்தார் :
“நான் வேலை செய்யும் இடத்திற்கு கடந்த 10-ஆம் நாள் வந்த சிங்கப்பூர்  காவல்துறையினர்,  என்னை  உசாவலுக்கு அழைத்துச் சென்றனர். நான் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை 3 நாட்கள் சிறையில் அடைத்து வைத்தனர். எங்களிடம் தமிழ் அதிகாரிகள் விசாரணை செய்தனர். நடந்ததைக் கூறினேன்.
உசாவலில் நான் கூறியவற்றைப் பதிவுசெய்யாமல் ‘குடிபோதையில் இருந்ததால் கலவரம் நடந்தது குறித்து ஏதும் நினைவில் இல்லை’ என்று பதிவு செய்தார்கள். குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். நான் முடியாது என்று கூறினேன்.

embassy singapore istana01இந்தியத் தூதரகத்தை நானும், என்னைப் போலப் பாதிக்கப்பட்டவர்களும் பெரிதும் நம்பி இருந்தோம். ஆனால், தூதரக அதிகாரிகள் பெயர், முகவரியை மட்டும் வாங்கிக்கொண்டு வேறு எதையும் கேட்காமல் சென்றுவிட்டனர். பிறகு நாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய சம்பளப் பாக்கியை வாங்கிக் கொடுத்து, விமானத்தில் ஏற்றி விட்டனர். வேறு எந்தத் தகவலையும் கூற மறுத்து விட்டனர். என்னைப் போலவே தவறு செய்யாத பல இந்தியர்களைச் சிங்கப்பூர் அரசு வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இதை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை”
இவ்வாறு முருகானந்தம் தெரிவித்தார்.

கருக்காகுறிச்சி தினேசு  சலிப்புடன் காணப்பட்டார். தகவல்கள் எதையும் கூற அவர் மறுத்துவிட்டார்.

“தமிழர் வாழும் பகுதிகளில் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகளை அமர்த்துமாறு மத்திய அரசிடம் வேண்டியும் ஒன்றும் செய்யவில்லை. தமிழக அரசும் இது குறித்து நடவடிக்கை எடுத்து வெற்றி காணவில்லை.  எனவே, இப்படித்தான் இருக்கும்” என ஊர்மக்கள் வருத்தப்பட்டனர்.