தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை!

நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “ உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம்.” எனத் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறார். இவ்வாறு அறிஞர்களும் கல்வியாளர்களும் வற்புறுத்தும் தாய்மொழிவழிக் கல்வியை அரசியலாளரான இந்தியக் குடியரசின் துணைத்தலைவர் மேதகு வெங்கையா (நாயுடு) தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவரைப்போல் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் தாய்மொழிக்கல்வியை தொடர்ந்து வலியுறுத்தவில்லை.

இவரது உரைகள் பலவற்றின் அடிப்படையில் தாய்மொழிக்கல்வி  மீதும் தாய்மொழிவழிக் கல்வி மீதும் இவர் கொண்டுள்ள தீராக் காதலைக் காணலாம். 5.09.2017இல் தேசிய ஆசிரியர் விருது வழங்கு விழாவிலும், 19.12.2017 அன்று சிறுபான்மையர் தேசிய ஆணையத்தின் பத்தாவது ஆண்டு உரையிலும் தாய்மொழிக் கல்வியைக் கற்பிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியுள்ளார்.

 “(ஒரே நாடு என்பதால்) நாம் நமது வேர்களை, நம் மொழிகளை, நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று பொருளல்ல. நாம் அவற்றை வளப்படுத்த வேண்டும். ஏனெனில் அவை நம்மை வளப்படுத்துகின்றன. நம் பன்முகத்தன்மைக்கு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது.”  எனப் பேசியுள்ளார். இதன் மூலம் ஒரே நாடு என்பது உணர்வு அடிப்படையிலானது. அதே நேரம் நாட்டின் பன்முகத்தன்மையின் சிறப்பைப் புரிந்து கொண்டு அனைத்து மொழிகளையும் சமமாகப் பேண வேண்டும் என்கிறார். இதனை மொழித் திணிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‘என் சொந்த மொழியில் பேசுகிறேன்’(Speaking in my own tongue) என இந்தியன் எக்சுபிரசு இதழில் (21.02.2018) வெங்கையா(நாயுடு) கட்டுரை எழுதியுள்ளார்.  அதில், தனிப்பட்ட தாய்மொழிகளை வலுப்படுத்துவதன் மூலமே பன்மொழி-பல பண்பாட்டு உலகம் அமையும் என்கிறார்.

“அனைத்து மாநில அரசுகளும் மாநில மக்களின் தாய்மொழிகளைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைக்க வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறார்.

புதுதில்லி மத்திரேயி கல்லூரிப்(Maitreyi College) பொன் விழாவில் 27.02.2018 அன்று பங்கேற்றார். அங்கும் பூனாவில் 29.03.2018 அன்று நடைபெற்ற பட்டீல் வித்தியாபீடத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழாவிலும்  தாய்தந்தையர், தாய்நாடுபோல் தாய்மொழியையும் மறக்கலாகாது என வலியுறுத்தினார்.

 “அனைவரும் நமது மொழியை நினைவில் வைத்துக்கொள்வதுடன் அதைப் பாதுகாக்கவும் வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் உயர்நிலை கல்வி வரை தாய்மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்.”

“வாழ்க்கைப் பெருமரத்தின் வேர் தாய்மொழிதான். எனவே இந்த அடித்தளம் வலுவாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாம் அனைவரும் நம் தாய்மொழிகளை நன்றாகக் கற்க வேண்டும். பேசியும் எழுதியும் இலக்கியங்கள் படைத்தும் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தியும் தாய்மொழியை நிலையாக வளப்படுத்திப் பேண வேண்டும்.” எனத் தாய்மொழிகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.

04.04.2019 இல் நடைபெற்ற தமிழ் நீங்கலான சமசுகிருதம் முதலான பிற செம்மொழி இலக்கியவாதிகளுக்கு அளிக்கப்படும் குடியரசுத்தலைவர் விருது, மகரிசி பத்திராயன் வியாசு சம்மன் (Maharshi Badrayan Vyas Samman) விருது ஆகியன வழங்கும் விழாவில் வெங்கையா(நாயுடு) மக்கள் மொழிகள் குறித்து அருமையான உரை ஆற்றி உள்ளார்.

“மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பன்முக அணுகுமுறை தேவை. இது தொடக்கப்பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்கி உயர் கல்விக்குத் தொடரப்பட வேண்டும். குறைந்தது தாய் மொழியில் செயல்பாட்டு கல்வியறிவு உறுதி செய்யப்பட வேண்டும்.” என்றார்.

இக்கூட்டத்தில் அவர் தாய்மொழிகளை எல்லா நிலைகளிலும் பயன்படுத்திப் பேணுவதற்குத் தேசிய இயக்கம் தேவை என வலியுறுத்தி உள்ளார்.

நாம் எதற்கெடுத்தாலும் மேல் நாட்டைப் பாருங்கள், சப்பானைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்கிறோம். ஆனால் வளர்ச்சி பெற்ற அந்நாடுகள் தத்தம் தாய்மொழியில் கல்வி அளிப்பதால்தான் வளர்ந்துள்ளன என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் தன் தாய்மொழி யல்லாத பிற மொழியில் படிக்கும் பொழுது பிற மொழிப்பாடமே ஒரு சுமையாக அமைகிறது. இதனால், அம்மொழியில் படிக்கும் துறைப்பாடங்களும் சுமையாக மாறிவிடுகின்றன. கல்வியாளர்களின் இக் கருத்தை உணர்ந்து எலலா நாடுகளும் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன.

பிற மொழிக்கல்வியால் உருப்போடும் மனனக்கல்விமுறைதான் வளர்கிறது. மாறாகத் தாய்மொழி வழிக்கல்வியானது ஆசிரியர் மாணாக்கர் உறவை மேம்படுத்தி ஐயங்களை அகற்றவும் தெளிவு பெறவும் உதவுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது.

நார்வே, சுவீடன் முதலான ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க வழிவகை செய்துள்ளன. நார்வே நாட்டில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. புலம் பெயர்ந்து வந்தவர்களும் தங்கள் தாய்மொழியை மறக்கக்கூடாது எனக் கருத்து செலுத்துகின்றது நார்வே.

பிற மொழிக் குழந்தைகள் சுவீடனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெற்றோர்களின் இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வாழ்ந்தாலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தாலும் தாய்மொழிக்கல்வியை அவர்களுக்கு அளிப்பதைச் சுவீடன் கல்வித்துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டிலோ இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அயல் மொழிக்கல்வியைத் திணிப்பதையே அரசுகள் கடமையாகக் கொண்டு செயல்படுகின்ற அவலம் உள்ளது.

22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று விவரம் திரட்டியது.  பெரும்பாலான மாணக்கர்களின் பள்ளிக்கல்வி முழுமை பெறாததற்கும் பிறமொழியைக் கற்கும் திறன் இழந்ததற்கும் தாய்மொழி அல்லாத பிற மொழிக்கல்விதான் காரணம் எனக் கண்டறிந்தது. இதனால் 2008இல் தாய்மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி  என்பதையே கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு வலியுறுத்தத் தொடங்கியது.

எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்தது.

பாப்பூ நியூ கினியா  நாட்டில் 800 மொழிகள் பேசப்படுகின்றன. கணிசமான தொகையில் மக்கள்பேசும் 450 மொழிகளைக் கல்வி மொழிகளாக அந்நாடு பின்பற்றுகிறது.

பிலிப்பைன்சு அரசாங்கம் 2012 இல் அனைத்துத் தொல்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்பதைக் கொள்கை முடிவாக எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் 731 மொழிகள் பேசப்படுகின்றன. ஆசிரியர் அந்தப்பகுதி மக்களின் மொழி யறிவு உடையவரா என்பதைப் பொறுத்தே  மொழிக்கல்வி அமைகிறது. எனினும் மக்களின் தாய்மொழிகள் கற்பிக்கப்படுவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

தாய்மொழி சார் கல்வி(mother tongue-based education) உள்ள நாடுகளில் கல்வி வளர்ச்சியும் பிற வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. அயல்மொழி சார் கல்வி உள்ள நாடுகளில் இவை பின்தங்கியே காணப்படுகின்றன.

பொதுவாக அயல்மொழியினர் ஆட்சியில் கட்டுப்பட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. இவற்றுள் எந்தெந்த நாடுகள் விழிப்படைந்து தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழிவழிக்கல்விக்கும் மாறியனவோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் காண முடிகிறது.

நாம் முழுமையாகத் தாய்மொழிக்கல்வியையும் தாய்மொழி வழிக்கல்வியையும் நடைமுறைப்படுததாவிட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. ‘தாய்மொழிக்கல்வி மூலம் தாய்நாட்டு வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா(நாயுடு) வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் நீதி மன்ற விழாக்களிலும் எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம்  தாய்மொழிக்கல்வி, தாய்மொழிவழிக்கல்வி, தாய்மொழிப்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எனவே, இவை சிறப்பாக நடைபெற இவர் மத்திய அரசு மூலம் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  1. தாய்மொழி நாள் (21/02) என்பது இப்பொழுது சமசுகிருத நாளாகத்தான் மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. அவ்வாறில்லாமல் எல்லா மொழியினரும் தத்தம் தாய்மொழி நாளைக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. உலகத்தாய்மொழி நாள் பிப்பிரவரி ஆனால் நம்நாட்டு மொழிகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்க்காப்பிற்காக 1937இல் நடைபெற்ற போராட்டக்காலத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து இந்தியத் தாய்மொழிகள் நாள் எனக் கொண்டாடச் செய்ய வேண்டும்.
  3. மொழிகளின் சமன்மையை நிலை நாட்ட எல்லா மொழிகளுக்கும் சம அளவிலேயே மத்திய அரசு செலவிட வேண்டும். எனினும் மொழியின் தொன்மை, வளத்திற்கேற்பச் சிறப்பு நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும்.
  4. கல்வித்துறையை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தாய்மொழி வழிக்கல்விக்கான ஒதுக்கீடுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்க வேண்டும்.
  5. பணி வாய்ப்பு இல்லாமல் தாய்மொழிக்கல்வி வெற்றி பெறாது. எனவே, எல்லாப்பணித்தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும்.
  6. மத்திய அரசின் எல்லாக் கல்வி நிலையங்களும் அயலகக் கல்வி நிறுவனங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அவை இருக்கும் மாநில மக்களின் மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும்.
  7. அரசியல் யாப்புப் பட்டியலில் உள்ள தேசிய மொழிகள் அல்லாத பிற தாய்மொழிக் கல்வியும் அவ்வம் மொழியினரின் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
  8. உயர்நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும் மாநில மொழிகளே ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும்.

இவரே குறிப்பிட்டதுபோல் தாய்மொழிக்கல்விக்கான தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும்! தாய்மொழிக்கல்வி ஆர்வலரான மேதகு மு.வெங்கையா(நாயுடு) தாய்மொழிக்கல்விக் காவலராகத் திகழ வாழ்த்துகள்!

இமயமலை போலுயர்ந்த

ஒருநாடும் தன்மொழியில்

தாழ்ந்தால் வீழும் (பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)

 

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 22.08.2019