namepost01

  தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப் போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்குவரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படைமறவர்களை நிறுவக் கருதினர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி ‘கவலை’ எனப்படும். இவ்வாறு பலவழிகள் கூடிய நெறியிற் செல்வார். தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னதெனத் தெரிந்து கொள்ள இயலாது. மயங்குதலியல்பு வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்பாடுதலாகா தென்றெண்ணிப் பண்டைத்தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசைகாட்டும் கல்லை நிறுத்தி அக்கல்லில் அவ்வழி செல்லும் ஊர்ப்பெயரையும் எழுதியிருந்தனர். ஆங்கே பலவூர்க்கு செல்வாரும் சிறிதுநேரம் இளைப்பாறுதல் இயல்பாதலின், அவர் வழிபடுதற்குரிய கடவுள் அம்பலம் அமைக்கப் பெற்றது.

செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை

(மலைபடுகடாம் அடிகள் 394-396)

எனப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் கூறுவதனால் இவ்வுண்மை தெளியலாம்.

– தமிழ்ச்சிமிழ் (மலைபடுகடாம் 343 – 390)

malaipadukadaam01