தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்

 அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.

 நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார். அவரது  அணியே/கட்சியே அ.இ.பே.(காங்கிரசு) ஆனது. இதுபோல்சூழல்  அதிகமுகவிலும் இப்பொழுது உள்ளது.

  மக்களின் ஆதரவும் ஆதரவின்மையும் மாறிமாறி நிகழ்வனவே! கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்களால் ஏற்கப்பெற்றால் ஒருவர் ஆட்சியமைக்கவும் முடியும். இதுவே நம்நாட்டு அரசியல் சூழல். இச்சூழலில் தினகரன் நிலைப்பாட்டைப் பார்த்தால் ஆட்சிகளின் செயல்பாடுகளால்,  தாழும் நிலையிலிருந்த அவர் ஆளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பதே உண்மை.

 அவருக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் அல்லது அரசுகளின் நடவடிக்கை யாவும் அவருக்க்கு உரமாகவே அமைகின்றன.

 இப்பொழுது எந்தக்காரணம் கூறி, இரட்டை இலை பன்னீர்-எடப்பாடி அணிக்குத் தரப்பட்டதோ அந்தக் காரணத்தைக் கூறித்தான் சசிகலா அணிக்கு இரட்டை இலை கோரப்பட்டது. அப்பொழுது ஏற்கத்தக்கதல்ல என்ற காரணம் இப்பொழுது பாசகவின் செல்லப்பிள்ளைகளுக்கு வழங்க ஏற்றதாய் அமைந்துவிட்டது. இதனால், நடுநிலையாளர்களும் பாசகவின் ஆதிக்கத்தை விரும்பாத கட்சியினரும் தினகரன் பக்கம் சாய்கின்றனர். இரட்டை இலை மறுப்பு, தினகரனுக்கு ஆதாயம் என்னும் நிலையைத்தான் உருவாக்கிவருகிறது.

பன்னீருக்கு ஆதரவு என்பது மாயை. எடப்பாடி பழனிச்சாமிக்’கு ஆதரவு என்பது ஆட்சி தரும் கவசம். நாளை இந்தக் கவசம் அகற்றப்பட்டால், ஆதரவு காணாமல் போய்விடும்.  இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். இருந்தும் அதிகாரவலிமையுடையவர்களின் ஆட்டத்தால் இவர்கள் ஆட வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும் தினகரனைக் கண்டு அஞ்சி எடுக்கும் நடவடிக்கைகள் அவருக்குக் கேடயமாக மாறுகின்றன.

இரட்டை இலை இல்லை என்றவர்க்குச் சின்னமாகத் தொப்பி தருவதில் என்ன அச்சம்? அதுதான் தரவில்லை, சமைகலன்(குக்கர்)தந்த பின்னும் ஏன் அச்சம்?  இதுவரை தேர்தலில் சின்னம் தரப்படும் முன் மேற்கொள்ளும்  தேர்தல் பரப்புரைக்குத் தடை விதித்ததில்லை. ஆனால், சின்னம் இல்லாமல் பரப்புரை கூடாது என 4 நாள் தினகரன் தரப்பாருக்குப் பரப்புரைக்குத் தடை ஏன்? இத்தகைய அச்சமே தினகரனின் செல்வாக்கைக் கூட்டுகின்றது.

அதிமுகவின் மீதுள்ள வெறுப்பு தினகரன் பக்கம் சாராமல் அவரைக் காப்பாற்றும் செயல்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகள்.

 அதிமுகவில் தேவை ஒற்றுமையே!

ஆளும் அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் திறமைமிக்கவர்களே! இல்லாவிட்டால், இப்பொழுது பதவிகளில் இருக்கமாட்டார்கள். அதிமுக தோல்வியுற்றால், பாசகவின் ஆளுமைதான்  காரணம் எனச் சொல்லி அதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணி அதன்  தோல்வியை அதிமுகவினரே விரும்புகின்றனர். இன்றைய சூழலில் அதிமுகவில் உள்ள மனக்குறைவர்கள் வலிமையான எதிர்க்கட்சியான திமுகவின் பக்கம் சென்றிருக்க வேண்டும் ஆனால், அத்தகைய ஆளும் வாய்ப்பைத் திமுக பெறவில்லை. அதற்குரிய நிலையான வாக்குவங்கி பெருகவில்லை. அதிமுகவில் உள்ளவர்கள் அதிமுகவில் உள்ள ஏதேனும் ஓர் அணியின் பக்கம்தான் இருக்க விரும்புகின்றனர். தினகரனின் சிரிப்பும் அரவணைப்பும் தொண்டர்களை அவர் பக்கம் ஈர்க்கின்றன. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணைப்பு அரசியலை நாடுவதே அதிமுகவினருக்கு நன்மை தரும்.

சமவாய்ப்பு கோருவது பன்னீர் அணிக்கு ஏற்றல்ல!

இரண்டு அணிகள் இணைந்ததாகச் சொல்லப்பட்ட  பின்னரும் பன்னீர் அணி, பழனிச்சாமி அணி எனச் சொல்லிக்கொண்டிப்பதால் பயனில்லை. பழனிச்சாமி அணியில் சமஉ எண்ணிக்கையில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு  சமஉறுப்பினர்களை மட்டும்  கொண்டிருந்த பன்னீர் அணியினர் இணைப்பிற்குப் பின்னர்ச் சமவாய்ப்பு கேட்பதும் முறையல்ல! இணைந்ததாகச் சொன்ன பிறகு அந்த அணி, இந்த அணி என்று  சொல்வது எப்படி இணைந்ததாகும்? அதிமுகவின் ஒற்றுமை இன்மைதான் பாசகவின் அடிமையாக இருக்கச்செய்கிறது என்பதை உணர வேண்டும். எனவே, தங்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும்  ஒரே கட்சியாக இணைய வேண்டும்.

 அதே நேரம் இவர்கள், சசிகலா, சசிகலா குடும்பத்தினரைப் பணிந்து நின்றவர்களே! பன்னீர் பிரிந்து நின்றபொழுது ஏன் அவ்வணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கவில்லை. நாளை அவ்வணி தன் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான்! பாசக பின்னால் இருந்து இயக்காவிட்டால், ஆளும் அதிமுகவினர், இன்றைக்கும் சசிகலா-தினகரன் துதிபாடிக்கொண்டுதான் இருப்பர். இதனை அக்கட்சித்தலைவர்கள் உணர வேண்டும். தினகரனும் இணைந்த அதிமுக செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.

இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அல்லது ஆளுங்கட்சியைவிடக் கூடுதல் வாக்கு பெற்றால், கட்சியில் பெரும்பான்மையர் அவர் பக்கம் சென்றுவிடுவர். நிழலாட்சியால் முதலிடத்தைப் பெற இயலவில்லை என்றால், தேர்தலே ஒத்திவைக்கப்படும்.

  பொதுத்தேர்தல் வந்தால் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் சூழலும் வரலாம். அதிமுக எதிர்க்கட்சியாக மாறினாலும் ஒற்றுமை இருந்தால்தான் கட்சி நிலைத்து நிற்கும். ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதைவிடக் கட்சி நிலைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. எனவே, எந்நிலை வந்தாலும் கட்சிக்குத் தேவை ஒற்றுமை என்பதைக் கட்சித்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவின் ஒற்றுமை இன்மை அதன் வலிமையைக் குறைத்து நாட்டிற்குக் கேடு நல்கும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதைக் கட்சியினர் புரிந்து கொள்  வேண்டும்.

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள. (திருவள்ளுவர், திருக்குறள் 521)

அதிமுகவினர் தங்கள் பழமையை நினைந்து இணைந்து செயலாற்ற வேண்டும்! ஓங்குக ஒற்றுமை!

  • இலக்குவனார் திருவள்ளுவன்