தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா?
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தினகரனுக்குச் செல்வாக்கு கூடி வருவதாக நாம் முதலில் குறிப்பிட்டதைத்தான் இப்பொழுது பிற ஊடகங்கள் கூறி வருகின்றன. இதனால் இராதாகிருட்டிணன் தொகுதிக்கான சட்ட மன்ற இடைத் தேர்தலில் அவர் முதலிடத்தில் இருப்பதாகப் பல இதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
பொதுவாக ‘நக்கீரன்’ இதழ் வாக்கெடுப்பின் மூலமான கணிப்பு மிகச் சரியாகவே இருக்கும். ஆனால், ’நக்கீரன்’ இதழ் வெற்றி வாய்ப்பினைத் தினகரனுக்கு அளிக்கவில்லை. ‘தமிழக அரசியல்’ இதழ் தினகரனே முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. வாக்குப்பதிவை ஒட்டி மறு வாக்கெடுப்பு எடுப்பின் தினகரனும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும்.
திமுகவினர் தினகரனுக்கு மறைமுகமாக உதவுவதாகச் செய்தியை உலவவிட்டு, அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்கின்றனர். தினகரன் வெற்றி பெற்றாலும் அதிமுக வெற்றி பெற்றாலும் திமுகவே காரணம் என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?
திமுகவிற்கு இத்தொகுதியால் பெரும் நன்மை இல்லை. இப்பொழுதே அரசின் ஆதரவு திமுகவிற்குக் கிடைக்கிறது. அதை இழப்பானேன் என்ற எண்ணம் திமுகவிற்கு உள்ளது. திமுகவோ தினகரனோ வெற்றி பெற்று ஆட்சியைக் கலைக்கும் சூழல் ஏற்பட்டால் திமுகவிற்கு இழப்பே! உடனடியாகத் தேர்தல் வராமல் குழயரசுத்தலைவர் ஆட்சியால் எப்பயனும் இல்லை. மாறாகப் பொதுத்தேர்தல் உரிய காலத்தில் வந்தால், திமுக மீளவும் அரியணை ஏறும் வாய்ப்பு கிட்டலாம். அதனாலேயே மறைமுகமாக அதிமுகவிற்கு ஆதரவாக நடந்து கொள்வதாகக் கூறுகின்றனர்.
நாம்தமிழர் கட்சி, தமிழ்நாட்டில் தமிழருக்கே முதன்மை என்ற நல்ல கொள்கை அடிப்படையில் போட்டியிடுகிறது. ஆனால் தொகுதி பரப்பரையில் பிற தொகுதி இளைஞர்கள்தாம் மிகுதியாக உள்ளனர். வந்தேறிகள் எனக் கூறிக்கொண்டு கணிசமான எண்ணிக்கையில் உள்ள தெலுங்கு பேசுவோர் வாக்கை எதிர்பார்க்க இயலாது. பாசகவைவிட இக்கட்சி கூடுதல் வாக்கு பெற வேண்டும்.
தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர். தினகரன் வெற்றி பெற்றால் உடனடியாகப் பொதுத் தேர்தல் வரும் வாய்ப்பு குறைவு.
இராதாகிருட்டிணன்நகர்த் தொகுதி வாக்காளர்கள் அன்பளிப்பு மழையில் நனைக்கப்படுவதால் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படலாம் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. அவ்வாறு மீண்டும் தேர்தல் ஒத்திவைத்தால், அரசிற்கு அதைவிட வேறு இழிவு இல்லை. ஆனால், அதிமுக தோல்வியைத் தழுவினால், அப்பொழுது தேர்தல் முறைகேடு என்ற சொல்லித் தேர்தல் முடிவைச் செல்லாது என அறிவிக்கலாம். தள்ளிவைத்துத தள்ளி வைத்து இடைத்தேர்தலுக்கு மாறாகப் பொதுத்தேர்தல் வரை காலம் கடத்தப்படலாம்.
தினகரன் வெற்றியால் தேர்தல் செல்லாது என்று அறிவித்தால், உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரியும் என்பதால் வேறு வகையிலும் மறு தேர்தலுக்கு வழிவகுக்கலாம். விசாலின் விண்ணப்பம் ஏற்கப்படாததும் சதி எனப்படுகிறது. எனவே, தேர்தல் முடிந்து அவர் வழக்கு தொடுத்தால் முறையாக வேட்பு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் செல்லாது என்று சொல்லப்படலாம்.
அடிப்படைச் சூழலை மாற்றாமல் எத்தனை முறை இடைத்தேர்தலை நடத்தினாலும் பயனில்லை. எனவே, யார் வெற்றி பெற்றாலும் அவர் எஞ்சிய காலம் முழுவதும் பணியாற்றும் வண்ணம் அரசு செயல்படவேண்டும்.
கடைசி நேரக் கவனிப்புகளால், ஆளுங்கட்சி வெற்றி பெற்றாலும் மக்கள் ஆதரவு நம்பிக்கையில் மாநிலத்தின் மாண்பைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற அல்லது பிற காரணங்களால் தினகரன் அல்லது திமுக வெற்றி பெற்றால், தமிழக அரசு அடகு வைக்கப்படும் நிலையை மீட்க வேண்டும்.
பாசகவிற்குத் தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குக் காரணம் அதன் தமிழ்ப்பகைச் செயற்பாடுகளே என்பதைப் பாசக உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை, இராதாகிருட்டிணன் நகரின் தொகுதி வாக்காளர்கள்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 504)
என்பதை உணர்ந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவிக்கும் வகையில் தங்கள் வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்த வேண்டும்.
அடகுமுறைச் செயற்பாடுகள் ஒழிக!
மக்களாட்சிச் செயற்பாடுகள் மாண்புறுக!
- இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply