அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர், திருக்குறள் 256)

உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும்.

“நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்”

“வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது வாங்கினால் என்ன?”

“நாம் வாங்காவிட்டாலும் நமக்குத் தந்ததாகக் கணக்கு காட்டப் போகிறார்கள். அதற்கு நாமே வாங்கினால் என்ன ?”

என்பனபோன்ற எண்ணங்கள் தேர்தலுக்கான அன்பளிப்புகளை வாங்கத் தூண்டுகின்றன. அதுமட்டுமல்ல வாக்காள மக்களே, யார் என்ன தருவார் என்ற எதிர்பார்ப்பிலும் இருப்பதால், வேட்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு அன்பளிப்பு மழையைப் பொழிகின்றனர்.

மக்களே வளர்த்தெடுக்கும் இம் முறைகேடு வளர்நிலையில் உள்ளதால் தடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போகின்றன. தேர்தல் அன்பளிப்பு கொடுக்கும் வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தால், மற்றொரு வேட்பாளரை இதே  போன்ற முறையில் களமிறக்கும் கட்சிகள். அப்படியானால் தடை செய்யப்பட வேண்டியவை தேர்தல் அன்பளிப்புகளில் ஈடுபடும் கட்சிகள் அல்லவா? ஆளுங்கட்சிகளே இத்தகைய  முறைகேடுகளில் ஈடுபடுவதால், அதற்கு எவ்வாறு வாய்ப்பு வரும்?

கட்சித் தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் வழிச்செலவு, உணவு, தங்குமிடம் போன்ற செலவினங்களுக்கு இவற்றை விருந்தோம்பும் கடமையாகக் கருதிப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கட்சியினர் அல்லரோ! அவர்கள் வாக்காளர்களையும் தொண்டர்களாக்காட்டி அவர்களுக்குத் தர வேண்டியவற்றைத் தந்து தம் வயம் இழுப்பார்கள் என்பதுதானே நடைமுறையாக மாறிவிடும்.

 ஒருவர் ஒரு கட்சியில்தான் தொண்டராக இருக்கு முடியும் என்று வரையறை விதித்தாலும் குறுக்கு வழி காண்பதில் வல்லவர்கள் நம்மவர்களாயிற்றே! இப்பொழுதும் செய்வதுபோல்   தொண்டர்கள் மூலம் அன்பளிப்புகளைக் கொண்டு சேர்ப்பர்.

அப்படி என்றால் என்னதான்செய்வது?

வேட்பாளர்கள் செலவுகளைத் தேர்தல் ஆணையமே அல்லது அரசே ஏற்க வேண்டும் என்ற குரல் அவ்வப்பொழுது எழுகிறது. அவ்வாறு செய்யலாமா? குறுக்கு வழியில் வாழும் வேட்பாளர்களுக்காக நம் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும்?

தேர்தல் செலவின  வரையறைத் தொகைக்கு உட்பட்ட செலவினத்தை வேட்பளார் அல்லது கட்சி ஆணையத்திடம் அளித்திட வேண்டும். அனைத்துச் செலவினத்தையும் தேர்தல் ஆணையமே அவர்கள் சார்பில் செலவழிக்க வேண்டும். .

தேர்தல் ஆணையத்தினர் செலவில் முறைகேடு  செய்து சுருட்ட எண்ணினால், இவ்வித்தையை அறிந்த வேட்பாளர்களும் கட்சியினரும் சும்மா இருக்க மாட்டார்கள்.

பண வலிமை இல்லா உண்மையான வேட்பாளர்  சம வாய்ப்புடன் போட்டியிடும் சூழலும் ஏற்படும்.

அரசுதான் செலவழிக்கிறதே எனக் கட்சி சார்பற்ற தன் விருப்பர்(சுயேச்சைகள்) எண்ணற்றவர் போட்டியிட முன் வரலாம். அதைத் தடுப்பதற்கு பழந்தமிழ்நாட்டில் இருந்தமை போன்று தகுதியுடைமை, தகுதியின்மை குறித்த உரிய வழிமுறையை வகுத்துப் பின்பற்ற வேண்டும். அல்லது குலுக்கல் முறையில் இருபத்தைவர்  அல்லது குறிப்பிட்ட ஏதேனும் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு சில வரையறைகளை வகுத்துக் கொண்டு வேட்பாளர் அல்லது கட்சி சார்பில் எச்செலவும் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும். வீடுவீடாகச்  சென்று பரப்புரை மேற்கொள்வதால்தான் அன்பளிப்புகள் வழங்கவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடைசெய்ய வேண்டும்.

தொண்டர்கள் அல்லது பொறுப்பாளர்கள் கூட்டங்களும் தேர்தல் ஆணையம் மூலமே அவர்கள் முன்னிலையிலேயே நடத்தப்பெற வேண்டும். அக்கூட்டத்திலும் அன்பளிப்புகள்தடை செய்யப்பெற வேண்டும்.

அனைத்துத் தரப்பாருக்கும்  சம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஊடகம் மூலமான பரப்புரைகள் நிகழ்த்தப்பெற  அரசு ஆவன செய்ய வேண்டும். இவற்றால் வேட்பாளர்கள் வீடுதோறும் செல்லாமலே வீடுகளுக்குச் சென்று பரப்புரையாற்ற வழிவகுத்ததாக அமையும்.

இத்தகைய நடைமுறைகள் மூலம் அன்பளிப்பு பெற்று வாக்களிக்கும் முறையைத் தடுக்க வேண்டும்.

மக்கள் சார்பாளர்களும் அதிகாரிகளும் நேர்மையாகச் செயலாற்றுவதன் மூலம் மக்களிடையே அன்பளிப்புபெறும் எண்ணங்கள் தோன்றாச் சூழலை உருவாக்கலாம்.

எல்லாவற்றிலும் முதன்மையானது வாக்களிக்கும் கடமைக்காக அன்பளிப்புகள் வாங்குவது தீங்கானது என்றும்  வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் கொடுப்பது  இழிவானது என்றும் மக்களை உணரச் செய்வதுதான்.

அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை!

அறவழியிலே தேர்தல் தேவை!

  • இலக்குவனார் திருவள்ளுவன்