தலைப்பு-திமுக-கசப்பு, திரு :thalaippu, thimuka,kasappu,thiru

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!

  மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய அவர்மீதான வெறுப்பு என்பது இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த வெறுப்பலையைத் தாண்டித்தான் அவர் வெற்றியும் பெற்று வருகிறார். ஆனால் அதற்குக் காரணம் அவரது கட்சியினரல்லர். தி.முக.கவிற்கான வாக்கு வங்கி என்பது 15% இலிருந்து 20% வரை இருக்கலாம். ஆனால்  கட்சிக்கு அப்பாற்பட்டு, அவர்தான் தமிழ்நலன், சமயச்சார்பின்மை முதலானவற்றிற்கு ஏற்ற தலைவர் என்ற நம்பிக்கை கொண்ட, வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காத 15%இற்கு மேலுள்ள இன நல ஆர்வலர்களால்தான் திமுகவின் வெற்றி அமைந்துள்ளது.

  திமுகவினருக்குத் தங்கள் கட்சியின் மீது வருத்தம்  ஏற்படும் பொழுதெல்லாம், வாக்களிப்பைப் புறக்கணிப்பார்களே தவிர,  பிற கட்சி எதற்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், அவ்வாறு தொடக்கத்தில் இருந்த  திமுகவின்பால் பற்றுக்கொண்ட தமிழ் நல ஆர்வலர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் பக்கம் சாய்வதையே திமுகவைப்  புறக்கணிப்பதாக அமையும் என்ற முடிவில் உள்ளவர்கள்.

  திமுகவின் மீதான கசப்பு அவர்களுக்கு மிக, மிக, திமுகவால் ஊட்டி வளர்க்கப்பட்ட தமிழுணர்வு வீணாகக்கூடாது எனத் தமிழ்நலக்கட்சிகள் அல்லது அமைப்புகள் எனக்கருதும் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி அல்லது தமிழ்த்தேசிய அமைப்புகளின்பால் நேரடி ஈடுபாடுகாட்டும் நிலைக்கு மாறிவிட்டனர்.

 பொதுவாக எல்லாத் தலைவர்களிடமும் நிறைகளும் குறைகளும் உள்ளன. ஆனால், கலைஞர் கருணாநிதியின் மீதுள்ள குறைகள்மட்டும் பெரிதுபடுத்தப்படுவதன் காரணம் என்ன? “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதில் இவர் பேச்சில் காட்டிய வேகம் “எங்கும் தமிழ்இல்லை! எதிலும் தமிழ்இல்லை!” என்ற செயலிலும் இல்லாததுதான். ஒருவேளை அறிஞர் அண்ணா இவரைப் பொதுப்பணித்துறை யமைச்சராக ஆக்காமல் கல்வி அமைச்சராக ஆக்கியிருந்தால், தமிழ்சார்ந்த கல்வியில் புரட்சியை உருவாக்கியிருப்பார். ஆனால், இவருக்குக்கிடைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி தமிழ்ச்சுவையிலிருந்து செல்வச்சுவையின் பக்கம் திருப்பிவிட்டது. இவரது ஆட்சிக்காலத்தல்தான் ஆங்கில வழிக்கல்விநிலையங்கள் பெருகின. இவரது ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்வழிக்கல்விக்கான மூடுவிழாவிற்கு அடிக்கல்நாட்டப்பட்டன.  கல்வி வணிகமானதும் இவரது ஆட்சியில்தான் தொடங்கியது.  அதிமுகவும் அதைத்தான் பின்பற்றியது என்றாலும் தொடக்கமும் தொடர்ச்சியும் இவரால்தானே விளைந்தன!

  கல்வித்துறையிலிருந்து தமிழ் விரட்டப்படும்பொழுது தமிழ்நல ஆர்வலர்கள் எங்ஙனம் இவர் பக்கம் இருப்பர்?

  கலைஞர் கருணாநிதியின் மீது சாட்டப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, குடும்ப அரசியல். இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது மிகுதியாகவே உள்ளது. இதற்கு வித்திட்டவர் சவகர்லால் நேருதான். என்றாலும் இவரை மட்டும் குற்றம் சுமத்துவது தவறு. என்றாலும், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதிலிருந்து முதன்மையான முடிவுகள்  இவரின் மனைவி, துணைவி, மகன், மகள், மருமகன், பேரன் எனக் குடும்பத்தினரால் மட்டும் எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கும் பொழுது, மக்கள்நாயக உணர்வில் வளர்க்கப்பட்ட திமுகவினருக்கே வெறுப்புணர்வு வந்ததில் வியப்பில்லை.

  முதுமை வர வர முதிர்ச்சியும் வரும் என்கிறார்கள். பற்றற்றதன்மையும் முதிர்ச்சியின் பகுதிதான். ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு முதுமைவரவர, தம் குடும்பமக்கள்மீதான பாசம் பெருகிப் பொங்குகின்றது. இதன் விளைவு நாட்டுமக்கள்நலன், வீட்டுமக்கள் நலனுக்காகத் தாரை வார்க்கப்படுகிறது. இதன் மோசமான பகுதிதான் ஈழத்தமிழர்கள் ஏறத்தாழ இருநூறாயிரவர் இனப்படுகொலைக்கு ஆளான பெருந்துயரம்! இதற்குமுன்பு வரை கூட, நம் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் செய்யும் தவறுகளுக்குப் பொறுமை காப்பதுபோல் பொறுத்திருந்தவர்கள் இனப்படுகொலையில் கலைஞர் கருணாநிதியின்  துணைமை அல்லது பொருட்படுத்தாமை அல்லது அமைதி அறிந்ததும் எப்படி அமைதி காப்பார்கள்?

  இனப்படுகொலை நிறுத்த வேண்டி கலைஞர் கருணாநிதியின் உண்ணாநோன்பு, தொடங்கும்பொழுதே நாடகமாடலாம் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதை மத்திய அரசு எப்படி முடிவிற்குக் கொண்டுவந்தது? அதற்கு இவர் உடன்படவேண்டிய அச்சத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு உள்ளானமை எதனால்? அத்தகைய மிரட்டலுக்கு ஆளாகும் நிலைக்கு இவரது குடும்பத்தினர் அரசியல் வாழ்க்கை இருப்பதே தவறுதானே!

  ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் மீக் கொடுஞ்செயல்பாடுகளின் வித்தும் உரமும்  பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான். ஒருவேளை அக்கட்சியுடன்  கூட்டணி வைக்காமல் இருந்தால், வேறுவழயில்லை என எண்ணி ஆதரிக்க  இருந்தவர்களும் விலகக்காரணமே படுகொலைாயாளிகளுடனான கூட்டணிதான். அதுவும் இக்கூட்டணி  கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டது என்று பெருமையாகச்சொல்லிக்கொள்ளும்பொழுது – அதிமுக மீளவும் ஆளக்கூடாது என்பதற்காகத் – திமுகவிற்கு ஆட்சியுரிமை வழங்குவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதுபோல்தானே!

  கொள்கைக் கூட்டடணி என்றெல்லாம் உண்மை விளம்பிகளாக இல்லாமல்,  காங்.தலைவர்களை மிகுதியும் மேடையேற்றாமல், அக்கட்சியினரை வீதிப்பரப்புரைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் திமுகமீதான கசப்பு அமிழ்ந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லாதபடி திமுக நடந்துகொள்ளும் பொழுது என் செய்வது?

 ‘நமக்கு நாமே நாடகத்தை வெற்றியாகப் பரப்புவதும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான். தலைவராகச் செயல்படும் பொருளாளரைச் சந்திக்கும் ஆர்வத்தில் திமுகவினரில் ஒரு பகுதியினரும் நாடகப்பாத்திரங்களாக அழைத்துவரப்பட்டவர்களில் ஒரு பகுதியினரும் நிறைந்ததுதான் ‘நமக்கு நாமே’ அவைக்களம். இதனால், மதில்மேல் பூனையாக இருந்த திமுகவினரை ஈர்த்தலில் தாலினுக்கு வெற்றி எனலாம். நாடக அரங்கேற்றங்களில் தாலின் மேற்கொண்ட கடுமையான உழைப்பு என்பது பொதுமக்களை ஈர்க்கவில்லை என்பதே உண்மை.  மதுவிலக்கு நாடகங்களும் ஆழ்நிலவளி(மீத்தேன்வாயு) திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு அறியாமையால் நிகழந்தது எனப்போடும் வேடமும் மக்களைக்கவரவில்லை. நடந்துவிட்ட தவறுகளுக்கு   மன்னிப்பு கேட்கும் தாலின், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பிலும் மன்னிப்பு கேட்டிருக்கலாமே! ஏன், அதற்கு மனம் வரவில்லை?

  அதிமுகவிற்கு எதிராக உருகிவரும் எதிர்ப்பு உணர்வுகளை எளிதில் அறுவடை செய்யாமல், அதற்கு எதிரான வலுவான கூட்டணி வேண்டும் எனக் கூறித் தன் வலிவின்மையை ஒத்துக்கொள்ளுதல்; ம.ந.கூட்டணியை அதிமுகவின் ‘ஆ’ அணி  எனச்சொல்வதன் மூலம், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எதிர்ப்பான வாக்குகளை அக்கூட்டணி பெறும் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை திமுகவின் தேர்தல் கள அச்சத்தின் வெளிப்பாடுகளாகத்தான் தோன்றுகின்றன.

  அதிமுகவின் எதிர்ப்பு உணர்வுகளை ஒருமுகப்படுத்தித் திமுகவின் பக்கம் திருப்பிவிட இன்னும் வாய்ப்பு உள்ளது. அதற்குப் பிற கட்சிகளைப்பற்றித் தவறாகக்கூறி அதிமுகவின் வலிமையைப் பெரிதாகக் காட்டும் முயற்சியைக் கைவிட வேண்டும். தமிழ்நலன், தமிழர் நலன் தொடர்பில் திமுக ஆட்சியில் செய்யத் தவறியவற்றைப் பட்டியலிட்டு ஒப்புக்கொண்டு, இனி அத்தவறுகள் நேரா என உறுதி அளிக்க வேண்டும்.  நீண்ட காலம் நிலைத்திருந்து மக்கள்நலத்திட்டங்களையும் தமிழர் நலச் செயல்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய திமுக வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீள இதுவே உதவும்!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)

 

– இலக்குவனார் திருவள்ளுவன்