திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து
திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம்
சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத் தமிழிசையும் சைவ சமயமும் அடங்கி ஒடுங்கின. ஆனால், அச்சமணர்களால் அவற்றை ஒழிக்க முடியவில்லை. தமிழர் கலை மரபுகளுள் ஒன்றாகிய தமிழிசை தமிழரின் உணர்வில் அடிவேராக ஊன்றியது; தமிழர் வாழ்வோடு பிணைந்தது. அதனால், அத்தமிழிசையைச் சமணர் மட்டுமன்று, வேறு எவராலும் எப்போதும் அழிக்க முடியாது. எனவே, சமண ஆதிக்கத்தால் தமிழிசையும் சைவமும் மங்கிய நிலையினை எய்தியிருந்தன. ஆனால், சமணர்கள்தாம் தமிழிசையைத் தடுத்தனரேயன்றி, சமணக் காப்பியங்கள், தமிழிசையை எடுத்துக்கூறத் தயங்கியவில்லை. தமிழிசை மக்களிடம் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தது.
-புலவர் செந்துறைமுத்து:
திருமுறையும் தமிழிசையும்:
பக்கம்.86-87
Leave a Reply