திரைத்துறையினரே!

பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா?

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 813)

  கிடைக்கும் பயனை அளந்து பார்த்துச்செயல்படுவதும் தமக்குத் தரக்கூடிய பொருளின் அடிப்படையில் உடலை விற்பவரும் திருடர்களும் இணையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

  தமிழில் படங்கள் எடுத்துத் தமிழர்களின் செல்வத்தால் செல்வமும் புகழும் சேர்க்கும் நீங்கள் இத்தகையவரா இருக்கலாமா? பயன் அளந்து பழகுபவரும் பரத்தையர்களும் ஒன்றுதான் என்கிறார் திருவள்ளுவர். நீங்களும் அவ்வாறுதானே நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா? உங்களில் சிலர் விலைமக்கள் போல் நடந்து கொள்ளாவிட்டாலும் உங்கள் செயல்களால் அவர்களுக்கும் அவப்பெயர் வருவது தெரியவில்லையா?

  எதைக் குறிப்பிடுகின்றேன் எனப் புரிகிறதா? திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டினால் தமிழக அரசு முழுமையான வரிவிலக்கு என்று அறிவித்தது(2006); அதற்காகத் தமிழ்ப்பெயர் சூட்டினீர்கள்  தமிழல்லாப் பெயரையும் பெயர்ச்சொல் என்று சொல்லி வரிவிலக்கு பெற்று நன்மை அடைந்தீர்கள். இப்பொழுது வரிவிலக்கு நிறுத்தப்பட்டதுடன் தமிழ்ப்பெயர் வைப்பதையும் நிறுத்தி விட்டீர்கள். அப்படியானால், பொருளுக்காக உடலை விற்பவர்களுக்கும் உங்களுக்கும்  வேறுபாடு இல்லை என்றுதானே பொருள்? ஏன் இந்த இழி நிலையில் உங்களைத் தள்ளிக் கொள்கிறீர்கள்?

  இவ்வாண்டில் வெளிவந்த படங்களில் ஓநாய்கள் (ஞ்)சாக்கிரதை, விதி மதி உல்டா, ஃச்கெட்சு, மெர்குரி, பக்கா, பாஃகர் ஒரு (இ)ராஃச்கல், ஆந்திரா மெஃச், டிராபிக் ராமசாமி, செம போத, (ஞ்)சுங்கா, க(ஞ்)சினிகாந்த், காட்டுப் பய சார் இந்த காளி, பியார் பிரேமா காதல், லக்ஷ்மி , டார்ச் லைட்,  தொட்ரா, ஓடு ராசா ஓடு, யூ டர்ன், 4 (ஞ்)சி, (ஞ்)சனோ, (ஞ்)சருகண்டி, என்(ஞ்)சிகே, சைக்கோ,   முதலான பலவற்றில தமிழ் இல்லை. இனி வர உள்ள பேட்ட, ஸ்டிரீட் லைட்,சூப்பர் டீலக்சு, உத்தரவு மஃகாராசா, யங் மங் சங், அவுசு ஓனர், முதலான பல படங்களிலும் தமிழைக் காணவில்லை.

  அவளுக்கென்ன அழகிய முகம், வஞ்சகர் உலகம், 60 வயது மாநிறம், இமைக்கா நொடிகள், மேற்குத்தொடர்ச்சி மலை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் முதலான பல படங்களுக்குத் தமிழில் பெயர்  சூட்டியவர்களுக்கு நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

 ஆனால், இவர்களையும் முழுமையாகப் பாராட்ட இயலவில்லை. ஏனெனில்  படப்பெயரைத் தமிழில்  வைத்துவிட்டு அதற்கான விளம்பர முழக்கம், பிற விவரங்களை ஆங்கிலத்தில் அளிக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்காகத்தானே விளம்பரம். அவ்வாறிருக்க ஆங்கில விளக்கம் ஏன்?

  தமிழ்ப்பெயர் வைக்கும் சிலர், பேட்ட, போத என்பனபோன்று கொச்சை வடிவில் வைப்பது  ஏன் என்றும் தெரியவில்லை! நம் மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால் வேறு யார்தான் பயன்படுத்துவார்கள் என்ற உணர்வு இல்லையே!  பயன்படுத்தா மொழி அழிந்துபோகும் என்ற உணர்வும் உங்களுக்கு இல்லையே! தமிழாலும் தமிழராலும் பிழைக்கும் நாம்  அவர்களுக்குக் கடமைப்பட்டடவர்கள் என்ற நன்றியுணர்வுகூட இல்லையே!

 தமிழ்ப்பெயர்கள் தெரியாமையாலும் தமிழில் சரியாக எழுதத் தெரியாமையாலும் இவ்வாறு பெயர்கள் சூட்டுகின்றனர் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் யாரிடம் தமிழில் தலைப்புகளைக் கேட்கலாம் என்றாவது அறிந்து இருப்பார்கள். ஆனால், பிற மொழிப் பெயர்கள் அல்லது பிற மொழி எழுத்துகளைக் கலந்து எழுதினால்தான் வெற்றி கிட்டும் என்ற தவறான நம்பிக்கையில் சிலர் இருக்கின்றனர். அவர்களது திறமையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களோ தங்கள் திறமைகளை நம்பாமல் இவ்வாறு அயற்பெயர்களில் நம்பிக்கை வைக்கின்றனர். இனியேனும் அவர்கள் மாறிக் கொள்ள வேண்டும்.

 கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர்களையே சூட்ட வேண்டும் என்று நாம் பன்முறை வேண்டுகோள் விடுத்ததற்கு நல்ல பயன் உள்ளது. பலரும் தமிழ்ப்பெயர்களையே கதை மாந்தர்களுக்குச் சூட்டுகின்றனர். பாராட்டுகள். எல்லாரும் இவ்வாறு தமிழ்ப்பெயர் சூட்டும் நிலையே தமிழ்த்திரை உலகில் நிலவ வேண்டும்.

  கலைஞர்களை அறிமுகப்படுத்தும் பொழுதும் தமிழ்ப்பெயர்கள் சூட்டியே  அறிமுகப்படுத்த வேண்டும். பிற மொழிப்படங்களில் சாதிப்பட்டங்களுடன் திரிந்தாலும் தமிழ்த்திரைஉலகில் அவற்றைத் தூர எறிய வேண்டும்.

பெயர் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல!  பண்பாட்டைக் குறிப்பதாகவும் வரலாற்றை உணர்த்துவதாகவும் உள்ள குறியீடுமாகும். எனவே, பெயர்தானே என்று அலட்சியமாக இல்லாமல் பெயர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.

 தூய வாழ்க்கை என்பது மொழித்தூய்மையையும் குறிக்கும் என்று தெளிதல் வேண்டும். அயல்மொழியில் பெயர் சூட்டுவதோ அயல் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதோ நம் தாய் தந்தையரை  இழிவுபடுத்துவது போன்றது என உணரவேண்டும். பொது வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபாடு காட்டும் கலைஞர்கள் மொழி வாழ்க்கையிலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.

 படங்களில்  பெயர்களின் தலைப்பு அல்லது முதல் எழுத்துகளைத் தமிழிலேயே குறிக்க வேண்டும். படக்கலைஞர்கள் குறித்துத் தெரிவிக்கும் விவரங்களையும் தமிழிலிலேயே குறிக்க வேண்டும். இயக்குநர், ஒளி இயக்குநர், ஒளி ஓவியர் என்பன போன்று தமிழில் குறிப்போரும் இடைவேளை என்பதை ஆங்கிலத்தில் குறிப்பது ஏன் என்று தெரியவில்லை.

  இளம் முன்னணி நடிகர்கள் பலர் பொதுநிகழ்ச்சிகளில் வேட்டி அணிந்து தமிழர் மரபைப் பேணப்போவதாக அறிவித்து அதன்படி நடந்து கொள்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.

 இசையமைப்பாளர், நடிகர், பாடகர் வெ.பிரகாசு(G.V.PrakashKumar) தமிழிலேயே கையொப்பம் இடப்போவதாக அறிவித்து உள்ளார். பாராட்டுகிறோம்.  அதே நேரம், கிரந்தம் விலக்கி எழுதுமாறும் வேண்டுகிறோம்.

  தமிழ்வழிப்பள்ளிகள் மூடப்படுதைத் தடுக்கத் தன்னாலான சிறு உதவியைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இவரைப்போல் அனைத்துக் கலைஞர்களும் அவர்களின் நேயர் மன்றங்களும் முன் வந்தால் தமிழ் தமிழ்நாட்டில் நிலைக்கும் அல்லவா?

  கலைஞர்களே! உங்கள் பின்னர் உங்களைப் பின்பற்றும் கூட்டங்கள் இருப்பதை அறிவீர்கள். அவர்களை வழி நடத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதை உணருங்கள். நீங்கள் மொழித்தூய்மையைப் பேணினால் அவர்களும் மொழித்தூய்மையைப் பேணுவார்கள் என்பதை அறியுங்கள். உங்கள் தாய்மொழி எது என்பது முதன்மை அல்ல!  நீங்கள் தமிழால் வாழ்கிறீர்கள் என்பதுதான் முதன்மையானது.   அப்படியானால் உங்களை வாழவைக்கும் தமிழைத் தாயாகக் கருதி அதைனப் போற்றுங்கள். திரைப்படத்தின் எல்லா நிலையிலும் பயன்பாட்டு மொழியாகத் தமிழே இருக்குமாறு செயல்படுங்கள்.

தமிழால் நிலைக்கும் நீங்கள், தமிழையும் நிலைக்கச் செய்யுங்கள்.

வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல