தலைப்பு-வடமொழியாளர்தமிழ்ஒலியமைப்பைச்சிதைத்தனர் - பரிதிமாற்கலைஞர் :thalaippu_vadamozhiyalar_thangalolikerpa_thamizhaichithaiththnar

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத்

தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.

இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்மொழியின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.

  வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள மொழியோடு இருவகை வழக்கமுள்ள மொழியொன்று கூடி யியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது மொழி நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.

பரிதிமாற்கலைஞர்,
 தமிழ்மொழியின் வரலாறு