தேர்தல் ஆணையத்தின் வன்முறை :

இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக?

 ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541)

 வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.

  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது நமது நாட்டில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் சாதிக்கேற்ற நீதி! இருப்பவனுக்கு ஒரு நீதி! இல்லாதவனுக்கு ஒரு நீதி! வேண்டியவர்க்கு நீதி! வேண்டாதவர்க்கு அநீதி! என்பனவே உள்ளன. எனவே, ஆட்சிஅதிகாரத்தில் உள்ளவர்கள், அடுத்தவரின் பெரும்பனை மரத்தையும்  பிளக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு அடிமைப்பட்டு  இருப்பவர்கள், தமக்குரிய புல்லைக்கூட வளைக்க முடியாமல் உள்ளனர்.

  இதற்கான அண்மையசான்றுதான் இந்தியத் தேர்தல் ஆணையம்  தமிழக ஆளுங்கட்சி மீது எறிந்துள்ள வன்முறைத் தாக்குதல்!  ஆளும் அதிமுக கட்சி இரட்டை இலைச்சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் கிளர்ச்சி அதிமுகவின் முறைப்பாடு. நடுவுநிலையுடன் ஆராய்ந்து இதனை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். ஆனால், வழக்கு தொடுப்பிற்கு உள்ளாகாத கட்சிப்பெயர் குறித்த ஆணை எதற்கு? நடுவுநிலைமைபோல் கூறுவதுபோல் இரு பிரிவினரும் அதிமுக என்னும் கட்சிப்பெயரைப் பயன்படுத்தக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பு என்ற பெயரில் வெடிகுண்டை வீசியுள்ளது.

  இந்த அதிகாரத்தை அதற்கு யார் தந்தார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி் ஆட்சியில் உள்ளது. பெரும்பான்மை மக்கள் சார்பாளர்கள் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி புரிகிறது.! மக்கள் அதற்கு எதிராக மாறியுள்ளார்கள் என்றால் அதை முடிவு செய்ய வேண்டியது அடுத்த பொதுத்தேர்தல்தான். மக்களுக்குள்ள அதிகாரத்தை எடுத்துக் கொண்டு  இப்படி ஒரு  தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது என்றால் யாருடைய சாட்டைக்கோ பம்பரமாகத் தேர்தல் ஆணையம் சுற்றியுள்ளது என்றுதானே பொருள்.

  இதே போன்ற நிலைமைகள‌ை இதற்கு முன்பும் தேர்தல் ஆணையம் சந்தித்துள்ளது. அண்மையில் உ.பி.யில் இதே போன்ற நிலை வந்தது. அப்பொழுது தேர்தல் ஆணையம் என்ன சொன்னது? மக்கள் சார்பை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் மக்கள் சார்பாளர்கள்தான் முதன்மையானவர்கள் என்பதை உணர்ந்தது. பெரும்பான்மை மக்கள் சார்பாளர்கள் வலிமை உள்ள அகிலேசின்  கட்சிக்குக்கட்சிக்குரிய சின்னத்தை (மிதிவண்டிக் குறியீடு) பயன்படுத்தும் உரிமையும் கட்சிப்பெயரைப் பயன்படுத்தும் உரிமையையும் வழங்கியுள்ளது.

  இரண்டிற்கும் இடையே பெரிய  கால வேறு பாடு உள்ளது என்றோ வேறு சில தீர்ப்புகள் மாறாக வந்துள்ளன என்றோ சொல்ல இயலவில்லை.  ஏனெனில் உ.பி.சமாசுவாடிக்கட்சியின் வழக்கு பூசல்எண் (dispute no.) 1/2017.   கிளர்ச்சி அதிமுகவால் வந்த இந்த வழக்கு பூசல் எண் 2/ 2017. ஒரே ஆண்டில் அடுத்தடுத்த வழக்கில்தான் முரண்பாடான தீர்ப்பு!

  முந்தையத் தீர்ப்புரையின் பக்கங்கள் 42. ஏனெனில் பல முன்நிகழ்வுகளை ஆராய்ந்து நடுவுநிலையைுடன் உரைத்தது.

  பிந்தையத் தீர்ப்புரையின் பக்கம் வெறும் 9தான். ஏனெனில் முன்நிகழ்வுகளை ஆராய்ந்தால் தீர்ப்பில் நீதி வழங்கப்படவேண்டுமே! அவற்றை எலலாம் மறைக்க வேண்டுமல்லவா? எனவேதான் ஒன்பது பக்கங்களிலேயே முடித்துக் கொண்டனர்.

  இதனால் கிளர்ச்சி அதிமுக மகிழலாம். ஆனால், திமுக நடுவுநிலையுடன் ஆராய்ந்து எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். மறைமுகமாகத் தமிழக அரசியலை  விழுங்க நினைக்கும் மத்திய ஆளும்கட்சி, நாளைக்குத் திமுகவிற்கு இதே போன்ற சிக்கல் வந்தால், இதனை முன்னெடுத்துக்காட்டாகக் கூறித் திமுகவின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கும்.

  திமுகவில் பிளவு வராது எனக் கருதக்கூடாது. உடன்பிறப்புகளிடையே  பிளவு உள்ள கட்சிதான் அது! எனவே, எளிதாக இது போன்ற சிக்கலை உருவாக்கி முறைப்பாடு அளிக்கச் செய்து திமுகபெயரைத்தடை செய்ய இயலும்.

 தமிழகக்கட்சிகளைத் தடைசெய்து தான்வரத் துடிக்கும் மத்தியக்கட்சியின் அநீதிக்கு யாரும் துணைபுரியக்கூடாது! இதனைப் புரிந்து  கொண்டு எதிர்க்கும் பிற கட்சித் தலைவர்களைப் பாராட்டுகிறோம்!

  “நடுநிலைமை தவறிய தேர்தல் ஆணையர்கள் என்னவானாலும் ஆகட்டும்! ஆனால், நடுநிலைதவறச்செய்தவர்கள் நாசமாகப் போகட்டும்!” என இப்பொழுதே  நடுநிலையாளர்களிடம் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த எண்ணம் திமுகவின் எண்ணத்திற்கு மாறான விளைவையே உருவாக்கும். எனவே, அதிமுகவைத் தோற்கடிக்க வாக்குச்சீட்டுதான் ஆயுதமே தவிர, தமிழக நலனுக்கு எதிரான வெடிகுண்டுவீச்சு அல்ல! என்பதைப் புரிந்து  கொண்டு திமுகவும் எதிர்க்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 179, பங்குனி 13 , 2048 /  மார்ச்சு 26, 2017